பதிவு செய்த நாள்
20
ஏப்
2016
12:04
தேனி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் சுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சோமசுந்தரருக்கும்- மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் விழாவில் நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டாடை அணிவிக்கும் வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் மலர், அட்சதை அரிசி துõவியும் வணங்கினர். பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பூ வழங்கப்பட்டது. விருந்து பரிமாறப்பட்டது.
*பெரியகுளம்: பெரியகுளம் சுதந்திர விதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*தபால்நிலையம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
*சின்னமனுார்: செப்பேடு புகழ் சின்னமனுõரில் உள்ள சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் செந்தில் குமார் செய்திருந்தனர். எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், கம்பம் அ.தி.மு.க., வேட்பாளர் ஜக்கையன், சின்னமனுார் நகராட்சி தலைவர் சுரேஷ், காயத்ரி மெட்ரிக் பள்ளி தாளாளர் விரியன்சுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று காலை சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் ஊர்வலமாக தேருக்கு அழைத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிற்பகலில் தேரோட்டம் துவங்கி, கண்ணாடி கடை முக்கில் நிறுத்தப்படும். நாளை கண்ணாடி கடை முக்கிலிருந்து நிலைக்கு கொண்டு வரப்படும்.