பதிவு செய்த நாள்
05
மே
2016
05:05
பிரத்யங்கிரா தேவி மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம் இந்த தேவி. இவளை வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி. ராம-ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இந்திரஜித் களம் புகுந்திருந்தான். ராம-லட்சுமணரை அழிப்பது எளிதல்ல என்று புரிந்துகொண்டவன், அவர்களை வெல்ல மாபெரும் ஆற்றலைப் பெற வேண்டும் என விரும்பினான். அதற்காக அவன் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தான். அது நிகும்பலா யாகம்.
இந்த யாகம் அதர்வணக் காளி எனப் போற்றப்படும் பிரத்யங்கிராதேவியைக் குறித்துத் தொடங்கப்பட்டது. ஆனாலும் அவன் எண்ணம் ஈடேறவில்லை. யாகம் நிறைவேறுவதற்குள் இந்திரஜித், லட்சுமணனால் வீழ்த்தப்பட்டான். இந்திரனையே வெல்லும் பேராற்றல் கொண்ட இந்திரஜித்தே மேலும் ஆற்றல் வேண்டி பிரார்த்தித்தான் என்பதில் இருந்து அன்னையின் மகா வல்லமையை அறியலாம். அதேநேரம் துஷ்ட சக்திகளுக்கு அன்னையின் அருட்கடாட்சம் கிடைக்காது என்பதையும் இந்தச் சம்பவத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவனார் சரபராக அவதரித்தபோது, அவருடைய இரு இறக்கைகளாக பிரத்யங்கிராதேவியும் சூலினி துர்கையும் அவதரித்ததாகக் கூறுவர். பைரவ மூர்த்தியின் பக்தர்கள், இவளை பைரவ பத்தினியாகப் போற்றுவர்.
சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். பிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள். ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன. பில்லி-சூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினைகளும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.
ஆங்கிரஸர், பிரத்யங்கிரஸ் ஆகிய ரிஷிகள் இந்த அம்பிகைக்கு உரிய மந்திரத்தைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார்கள். அதற்கு உண்டான மூல மந்திரத்தை குரு மூலமாக உபதேசம் பெற்று ஜபித்து வழிபடுவது சிறப்பு. மேலும், மகா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி என்று எளிய முறையில் துதித்து, உடல்-உள்ள சுத்தியுடனும் பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், பிரச்னைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும்.