பதிவு செய்த நாள்
05
மே
2016
06:05
பாரதப் போரால் மனிதகுலத்துக்குக் கிடைத்த மாபெரும் செல்வம் கண்ணன் அருளிய பகவத்கீதை. துவாபர யுகத்தில் கீதை அருளிய கண்ணன். அடுத்துவரும் கலியுகம் எப்படியிருக்கும் என்பதையும் அருளியிருக்கிறார். அதிலிருந்து சில துளிகள். கலியுகத்தில் பூவுலகில் வாழும் மனிதர்கள் தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக்கொள்வார்கள். அதன்விளைவு -அகந்தை, பொய், வஞ்சனை சோம்பல் மன வருத்தம், அடுத்தவரை சொல்லால் துன்புறுத்துதல், தீயவர்களைக்கொண்டு வன்செயலில் ஈடுபடுதல் போன்றவை. ஆட்சிபுரியும் மன்னர்களிடம் நீதி, நேர்மை இருக்காது பகையுணர்ச்சி மேலோங்கியிருக்கும் எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் மேன் மேலும் சேர்க்க தீவிரமாக முயல்வர் நேர்மையாக நடப்பதாகச் சொல்லிக்கொண்டு குறுக்கு வழியில் பொருள் திரட்டுவார்கள் நேர்மையானவர்களை குறிவைத்து துன்பம் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர்.
அறிவில் சிறந்தவர், மாமேதை என்றெல்லாம் மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டுமென்று நினைப்பார்கள். புகழ் ஒன்றில்மட்டும் கவனம் செலுத்துவர். மந்தபுத்தியுடைய இவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு எதையும் அனுபவிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். துறவறம் மேற்கொண்டதாகச் சொல்லும் வேடதாரிகள் பணத்தாசை பிடித்து அலைவார்கள். மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் பெண்தொடர்பால் அவமானப்படுவார்கள் சஞ்சலப்புத்தி கொண்ட சாமியார்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். பெற்றோர்களை பாரமாகக் கருதுவார்கள் அதேசமயம், மனைவியின் பெற்றோர், சுற்றத்தரர்களிடம் பிரியமாக நடந்துகொள்வர். எந்தப் பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் ஏமாற்றம் நிறைந்திருக்கும் சிறிதளவு தர்மம் செய்துவிட்டு, பெரிய அளவில் பலன்கள் கிட்டவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
பூவுலகில் உள்ளவர்கள் தங்களை ஆள்வதற்கென்று ஒருசிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு யார் நல்லவர் -கெட்டவர் பேராசைக்காரர், சுயநலவாதி என்று புரியாமல் திண்டாடுவர் தனக்கு ஏதாவது சாதகமாக பொருள் கிட்டுமா என்று ஏங்குவார்கள். அவர்களின் இயலாமை வலுவுள்ளவர்களுக்கு சாதகமாக இருக்கும் எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் ஒழுங்காக - நேர்மையுடன் நடப்பவர்களை ஏமாளி என்று சொல்வதுடன் ஏளனமாக சிரிப்பார்கள். காலத்துடன் ஒத்துப்போகத் தெரியாதவன் என்று இகழ்வார்கள். கலியுகத்தில் மனிதர்களின் சரீரம் விரைவில் எதிர்ப்பு சக்தியை இழந்துவிடும். புதிய புதிய நோய்கள் தோன்றும் வேதம் அறிந்தவர்கள்கூட தங்கள் கடமைகளைத் துறந்து பேராசை கொள்வார்கள். நெல் முதலிய தானியங்கள் மருத்துவ மூலிகைகள் முழுமையான பலன்களைக் கொடுக்காது. மேகங்கள், இடி, மின்னல் இருந்தும் நிறைவான மழை இருக்காது. காலம் மாறி மழைபொழிந்து பயிர்ச்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படும்.
கடவுள் பக்தி வழிபாடு, அனுஷ்டானம், மனித சேவை போன்றவற்றில் நாட்டம் உள்ளதுபோல் காட்சிதந்தாலும் அதில் போலித்தன்மை நிறைந்திருக்கும். பிறர் பெண்களைக் கள்ளத்தனமாகப் பார்ப்பது, ரசிப்பது ஆகியவை நிறைந்திருக்கும். மேலும் கலியுகத்தில் ஒவ்வொரு நாளும் தர்மம் (கடமை), சத்தியம் (உண்மை), உயர்ந்த வாழ்க்கை முறை, பொறுமை, தயை, ஆயுள், ஆரோக்கியம், பலம், சாஸ்திரங்கள், நேர்மை, வாக்குறுதி ஆகியவை தேய்ந்துகொண்டே போகும். செல்வந்தர்கள் சொல்வது தர்மமாகவும் பலசாலிகளின் செயல்பாடுகளே நியாயமாகவும் ஏற்கப்படும். இப்படியெல்லாம் அருளிய கண்ணபிரான் துவாபர யுகத்தில் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து, துவாபர யுகம்முடியும் அந்தக் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணி, 27 நிமிடம் 30 விநாடியில், வேடன் ஒருவன் எய்த அம்பினால் முக்தியடைந்தார் அதாவது வைகுண்டம் சென்றார் என்று புராண வரலாற்றினை ஆய்வுசெய்த அறிஞர்கள் கூறுகின்றனர். விஷ்ணுபுராணம் மத்ஸ்யபுராணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றிலுள்ள குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, கோள்களின் நிலையைக் கணக்கில் கொண்டு கிருஷ்ணரின் ஜாதகத்தையும் கணித்து பகவானின் இறுதிநாளை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதன்படி கி.மு. 3,102 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 - ஆம் தேதி கிருஷ்ணாவதாரம் முடிந்ததாக 2005- ஆம் ஆண்டு அறிவித்தனர்.
யுகங்கள் நான்கு. சத்ய (கிருத) யுகத்தில் தர்மதேவதை நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தாள். திரேதா யுகத்தில் மூன்று கால்களிலும் துவாபரயுகத்தில் இரண்டு கால்களிலும் நின்றுகொண்டிருந்த தர்ம தேவதை கலியுகத்தில் தற்போது ஒரே காலில் நின்றுகொண்டு தவிக்கிறாள். சத்ய யுகத்தில் வாழந்தவர்களுக்கு ஆழ்ந்த தியானம் இருந்தது. திரேதா யுகத்தில் கடும்தவம் மேற்கொண்டார்கள். துவாபரயுகத்தில் சடங்கு மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். ஆனால் கலியுகத்தில் இறைவன் நாமங்களைக் கூறிக்கொண்டு வாழ்கிறார்கள். மற்ற யுகங்களில் பிறந்தவர்களைவிட கலியுகத்தில் பிறந்தவர்களுக்கு முக்தியடைவது மிக சுலபம். இறைவழிபாடு, சத்தியம், கருணை, தானம், ஆகியவற்றை சுயநலமின்றி மேற்கொண்டால் கலியுகமும் சுகமே.