எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய சிவபெருமான் அருள் கொண்டு 64 திருவிளையாடல் செய்து சிவனின் திருப்பாதம் பட்ட புண்ணிய திருத்தலம் மதுரை. இது பூலோக சிவலோகம் என சிறப்பிக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை பெற்ற தலம் இது. விசேஷமான சிவத்தலங்கள் 68. இவற்றில் கைலாயம் முதலான 16 தலங்கள் மிகவும் சிறந்தவை. இந்தப் பதினாறில் காசி, காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை ஆகிய நான்கும் மிகமிக சிறந்தவை. காசிக்குப் போய் இறந்தால் மோட்சமும், காளஹஸ்தியில் பூஜை செய்தால் மோட்சமும், சிதம்பரத்தில் தரிசிக்க மோட்சமும், மதுரையில் வாழ்ந்தாலே மோட்ச கதி கிடைக்கும் என்றும் ஹாலாஸ்ய மஹாத்மியம் விளக்குகின்றது. இவ்வுண்மையை சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியதாகவும், அச்சமயம் அம்பிகையின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமான் உலகமக்கள் உய்யும் பொருட்டு திருவுள்ளம் கொண்டு இவ்வுண்மையை அகத்தியர் வாயிலாக சங்கர சம்ஹிதையிலும், பரஞ்சோதி முனிவர் மூலம் திருவிளையாடல் புராணத்திலும் வெளியிட அருள் புரிந்ததாகவும் கூறுவர். இவற்றையெல்லாம் விட வைகை வெள்ளத்தை அடைக்க பிட்டுக்காக மதுரை மண்ணை தனது திருமுடியில் சுமந்த பெருமை படைத்தது மதுரை. ஆக, சிவபெருமான் 64 திருவிளையாடல் புரிந்து மதுரை மண்ணில் தனது திருவடியை மதுரையில் பதித்தும், பிட்டுக்காக மதுரை மண்ணை தனது திருவடியில் சுமந்தும் உள்ளார். எனவே தான் இவ்வளவு பெருமை படைத்த மதுரை மண்ணில் வாழ்ந்தால் முக்தி என புராணங்கள் கூறுகின்றன.