பதிவு செய்த நாள்
26
மே
2016
02:05
ஆயிரமாயிரம் யாகம், பலநூறு வருட தவம், கோடிகோடியாக தானம் இவையாவும் செய்த பலன் இரண்டே இரண்டு எழுத்துகளைச் சொன்னால் கிட்டும். தாரக மந்திரம் என்று பரமன், பார்வதிக்கு உபதேசித்த அந்த இரண்டெழுத்துகள் தான் ராம. தெய்வமே மனிதனாக வந்த மகத்தான அவதாரம். திருமாலின் அவதாரமாக இருந்தாலும் சாதாரண மனிதனைப் போல மண்ணில் வாழ்ந்தவர். மனிதன் எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் ராமபிரான். ராமா என்ற சொல்லுக்கு ஆனந்தம் அருள்பவன், ஆனந்தத்தை நிலைக்கச் செய்பவன் என்று பொருள் உண்டு.
ராம நாம மகிமை: பல புராணங்களிலும், இதிகாசங்களிலும் ராம நாம மகிமையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பிறவிப்பெருங்கடலைத் தாண்டும்போது தோணியாக வருவது ராம நாமமே என வால்மீகி முனிவர் கூறுகிறார். சகலவிதமான பாவங்களையும் போக்கும் தன்மை ராம நாமத்துக்கு உண்டு. ராமதாசரான அனுமனால்தான் ராம நாம மகிமை உலகெங்கும் பரவியது. அதை அவர் எப்போது உணர்ந்துகொண்டார் தெரியுமா? அது ஒரு சிறு சம்பவமாக துளசி ராமாயணத்தில் கூறப்படுகிறது. சுக்ரீவனது படை வீரர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திசையிலும் அன்னை சீதாப்பிராட்டியைத் தேடி அலைகிறார்கள். தெற்கு திசைக்கு ஜாம்பவான். நீலன், இவர்களோடு அனுமனும் வருகிறார். தெற்கு நோக்கி நடந்து நடந்து இறுதியில் கடலை அடைகிறார்கள். வழியிலேயே ஜாடயு, இலங்கை அதிபன் ராவணன்தான் சீதையைக் கடத்திப் போயிருக்கிறான். அவனது அரசாங்கம் கடல் கடந்து இருக்கிறது என்றும் சொன்னார். அதனால் கடலைத் தாண்டினால் சீதையைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நிலை. பரந்த கடலை எப்படித் தாண்டுவது? பாலம் கட்ட எப்படியும் ஒரு வருடமாவது ஆகும். அதுவரை ராமரால் சீதையின் பிரிவைத் தாங்க முடியுமா? அனைவரும் மலைத்துப் போயினர்.
ஜாம்பவான் அனுமனிடம் வந்து முனிவர்களின் சாபத்தால் மறந்திருந்த பலத்தையும், ஆற்றலையும் நினைவூட்டினார் கடலைத் தாண்டும் உறுதி எடுத்துக்கொண்டு மாபெரும் பறவை போல வானில் தாவினார் அனுமன் பறந்து செல்லும் வழியில் கொடூர அரக்கிகள் இருவர் வழிமறித்தனர். இருவரும் அனுமனை விழுங்கி விடுவதாக பயமுறுத்தினர். அந்த சமயத்தில் முதலில் அனுமனுக்கு நினைவுக்கு வந்தது ராமபிரானின் கருணை பொழியும் முகம்தான். ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று பலமாக உச்சரித்தபடி, அந்த அரக்கிகளை ஒரே அடியில் வீழ்த்தி விட்டார். அன்று முதல் தனது எல்லா செயல்களையும் ராமநாமத்தை ஜபித்தே செய்தார். அவை வெற்றிகரமாகவும் முடிந்தன.
மற்றொரு புராணக்கதையும் வட நாட்டில் நிலவுகிறது. சிவபெருமான் தனது பூதகணங்களுக்கு அதிபதியாக தனது மகன்களில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கான தகுதியாக யார் முப்பத்து முக்கோடி தேவர்கள். மனிதர்கள், கின்னரர்கள் என அனைத்து உயிர் களையும் சுற்றி வருகிறீர்களோ, அவர்களே கணபதி என்றச் சிறப்புப் பட்டம் பெறுவார்கள். என்றார். மீண்டும் முருகா மயிலுடன் விரைய. பிள்ளையார் அறிவுபூர்வமாக ஸ்ரீராமா என்று எழுதி. அதைச் சுற்றி வந்துவிட்டார். சகல ஜீவராசிகளும் ராம நாமத்துள் அடக்கம் என்பது இதன் ஐதிகம். அதனால் கணபதி என்ற பட்டம் விநாயருக்கே கிடைத்தது.
வீட்டில் காலை அல்லது மாலை அவரவர் வசதிக்கேற்ற நேரத்தில் விளக்கேற்றி ராமர் பட்டத்துக்கு பூ வைக்க வேண்டும். பிறகு ராமாயணத்தை வாசிக்கலாம். இயலாதவர்கள் ஸ்ரீராமா ஸ்ரீராமா என்று மனதார 12 முறை கூறலாம். இவ்வாறு பத்து நாட்கள் முடிந்த பிறகு ஸ்ரீராமநவமி அன்று நீர் மோர், பானகம் இவற்றுடன் சர்க்கரைப் பொங்கல் புளி சாதம், தயிர் சாதம் தயார் செய்து ராமருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் வடையும் செய்யலாம்.
ராமரும் லட்சுமணரும் காட்டில் விஸ்வாமித்திர முனிவரோடு சஞ்சரித்தபோது தாகத்தைத் தீர்க்க நீர்மோரும் பானகமும் பயன் பட்டது. அந்த நினைவைப் போற்றும் விதமாக ராமநவமி அன்று நீர்மோர், பானகம் நிவேதனம் செய்கிறோம்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே!
மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருப்பெயர்களைச் சொன்ன பலனை ராமநாமம் தரும் என்று அர்த்தம் இந்த ஸ்லோகத்திற்கு. இதை சிவபெருமான் பார்வதிக்கு உபதேசித்தார். இந்த ஸ்லோகத்தை மனம் ஒன்றி மூன்று முறை கூறி தீப தூபம் காட்டவேண்டும். ராமா என்று ஒரு முறை சொன்னாலே, அவை ஆயிரம் நாம ஜபங்களுக்கு சமம்.
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அதனால் ராமருக்கு நிவேதனம் செய்யும்போது அனுமனுக்கும் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். இறுதியில் மங்கள ஆரத்தி காட்டும்போது அனுமனது படத்துக்கும் காட்ட வேண்டும். நிறைந்த மனதோடு நிவேதனம் செய்து அவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்து நாமும் உண்ணலாம்.
இவ்வாறு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை அமைதி நிரப்பும் செல்வம் பெருகும். ஆரோக்கியம் செழிக்கும்.
இந்த வருடம் ஸ்ரீராம நவமி மார்ச் மாதம் 28-ம் தேதி வருகிறது. அன்று நாம் அனைவரும் ஸ்ரீராமரின் நாமத்தை உச்சாரித்தும். பூஜித்தும் பிறவிப்பயனை அடைவோம்! குடும்ப ஒற்றுமையும் தம்பதிகள் அன்னியோன்னியமும் நன்றாக இருக்க ஸ்ரீராமநவமி விழாவைக் கொண்டாடி மகிழ்வோம். நல்ல புத்திரர், நல்ல நண்பர்கள், குறையாக செல்வம் என அனைத்தையும் சீதா மணாளனான ராமபிரான் அருளால் கிடைக்கப் பெறுவோம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே!
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே!
இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்!