இப்பொழுது நிறைய பேர் சதுர்த்தி விரதம், பிரதோஷ விரதம், சத்யநாராயண விரதம் என நிறைய கடைபிடிக்கிறார்கள். எல்லா விரதங்களுக்குமே அடிப்படையாக சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து முழுமையான விரத பலன்களை அடையலாம். மனிதப் பிறவி எடுத்தோம். ஏன் எடுத்தோம் என்று கூற இயலாது. முன் வினைப் பயனாக இப்பிறவி நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வுலகத்தில் அல்லாமல் மறு உலகத்திலும் நன்மைகளை அடைய சில கர்மாக்களை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. விரதங்கள் என்பது நாம் அனுஷ்டிக்க வேண்டிய பூஜை முறைகள் ஆகும். மனவுறுதி கொள்வதையே விரதம் என்கிறோம். விரதம் அனுஷ்டிக்கும்போது எதனைச் செய்ய வேண்டும்? எதனைச் செய்யக் கூடாது என்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன....
(விரதங்களைப் பற்றிய அறிவியல் கூற்று: உடம்பு பலவீனம் அடையாமல் இருக்கவும். அதே சமயம் உடம்பு பெருக்காமல் இருக்கவும் விரதம் காப்பாற்றுகிறது. உடலை உற்சாகமாக வைத்துக் கொள்கிறது. வரம்பு மீறி பசி, பட்டினி, இருப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.)
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். குளிர்ந்த நீரில் மட்டுமே நீராட வேண்டும். பூஜைக்குரிய நீரை செம்புப் பாத்திரத்தில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எவர் சில்வர் பொருட்களை ஒருபோதும் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. சந்தியாவந்தனம் போன்ற நித்திய கர்மாக்களைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். விரத நாட்களில் பயன்படுத்தும் மரப் பலகைகள்; வேப்பம் பலகை; வேங்கை மரப்பலகை; பலா மரப்பலகை ஆகியவை சிறப்பானவை. முந்திய நாட்களில் பயன்படுத்திய துணிகளை விரத நாட்களில் பயன்படுத்தக்கூடாது. அன்றாடம் பயன்படுத்தும் பாய்களின் மீது அமரக்கூடாது.
விரதத்திற்கு மற்றவர்களது பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
விரதம் என்ற பெயரில் அடிக்கடி நீராகாரம் ( காபி, டீ, மோர், ஐஸ்) எடுத்துக் கொள்ளக் கூடாது. விரத நாட்களில் பகலில் படுத்து உறங்கக் கூடாது. வெற்றிலை பாக்கு போடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மாமிச உணவு உண்ணக் கூடாது. பூண்டு, வெங்காயம், மசாலா பொருட்களை உண்ணக்கூடாது. ஒருவேளை மட்டுமே உணவு அருந்தலாம். பகலுணவு தவிர்ப்பது நல்லது. இரவில் சிற்றுண்டி மட்டும் உண்பது நல்லது. கழுத்தில் மணி (அ) ருத்ராட்சம் அணிய வேண்டும். விரதத்திற்குப் பூஜைக்குரிய சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். நெற்றியில் அவரவர் சமயச் சின்னங்களை தரிக்க வேண்டும். (சந்தனம், குங்குமம், திறுநீறு), விரதத்திற்குரிய தெய்வத்தை வழிபட வேண்டும்.
பிரதோஷ விரதம்: கோரிய வரங்கள் கிடைக்கும். ஏகாதசி விரதம்: சகல பாபங்களையும் போக்கக் கூடியது. சதுர்த்தி விரதம்: எந்தக் காரியமும் விக்னம் இல்லாமல் முடிவுறும். கந்தசஷ்டி விரதம்: குழந்தைப் பேறு உண்டாகும். திருவோண விரதம்: மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர் பகை விலகும். அமாவாசை விரதம்: முன்னோர்களின் ஆசி கிட்டும். வெள்ளிக்கிழமை விரதம்: சகல சௌபாக்கியங்களும் கிட்டும். கேதார கவுரி விரதம்: சகல பாபங்களும் நீங்கும் சவுபாக்கியம் உண்டாகும். தன தான்ய சம்பத்து உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். தைப்பூச விரதம்: ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பங்குனி உத்திர விரதம்: தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால் மறு பிறவி ஒரு அருள் பிறவியாக இருக்கும். சிவராத்திரி விரதம்: சகல பாக்கியங்களும் கிட்டும் முடிவில் சிவலோக பிராப்தி கிட்டும்.