பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016 
11:06
 
 ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலை சுற்றி தெருவிளக்கு எரியாததால், பக்தர்கள் இரவில் செல்ல பயப்படுகின்றனர். சமூக விரோத செயல்கள் நடக்கும் முன், நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ராஜபாளையம் பெத்தவநல்லுாரில் பழம்பெரும் மாயூரநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர நாயன்மார்கள் குருபூஜை, கார்த்திகை, பிரதோஷம் போன்ற சிறப்பு பூஜைகளில் ராஜபாளையத்தை சுற்றி உள்ள கிராமத்தினர் கோயிலுக்கு வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் மதுரை ரோட்டில் உள்ள பஸ்ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு நடந்து வருகின்றனர். இந்த பகுதியில் கோயில் அலுவலர் குடியிருப்பு உள்ளன. இந்த ரோடு பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. நடந்து செல்லும் பக்தர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டில் பல நாள்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. மின்கம்பங்கள் காட்சி பொருளாக உள்ளன. பக்தர்கள் இரவில் நடந்து செல்ல பயப்படுகின்றனர்.
ஆவரம்பட்டி உட்பட ராஜபாளையம் நகரின் சில பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஊரணி, சேஷசுவாமி கோயில் வழியாக மாயூரநாதசுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் புகழேந்தி ரோடு, மதுரை ரோடு வழியாக வந்தால் ஒரு கி.மீ., சுற்றி வரவேண்டும். காலவிரயத்தை தடுக்க ஊரணி பாதையை பயன் படுத்துகின்றனர். இரவில் இந்த பகுதியிலும் தெருவிளக்கு வசதி இல்லை. ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது. ஏற்கனவே ஒரு முறை நகை பறிப்பு சம்பவம் இந்த பகுதியில் நடந்து உள்ளது. மேலும் கோயிலில் மட்டும் தான் மின்விளக்கு வசதி உள்ளது. கோயிலை சுற்றி உள்ள பகுதிகள் இருட்டாக உள்ளதால், இருளை கடந்து கோயிலுக்கு செல்ல பக்தர்கள் பயப்படுகின்றனர். பக்தர்கள் நலன்கருதி, கோயில் செல்லும் ரோடுகளில் தெருவிளக்கு வசதி பணிகளை கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் செய்யவேண்டும். இந்த பகுதியில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.