இந்து மதத்தின் இருபெருஞ்சமயங்கள் சைவமும், வைணவமும் ஆகும். மக்கள் இவ்விருசமயங்களின் கடவுள்களாக சிவனையும், விஷ்ணுவையும் வழிபடுகின்றனர். சிவனது இருப்பிடம் தென்னாடு என்பதை மாணிக்கவாசகர் தமது போற்றித் திருவகவலில் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று போற்றி வணங்குகிறார்.
சிவன் என்ற சொல்லுக்கு பலபொருள்கள் உண்டு. மங்கலமானவன், இன்பம் தருபவன் என்ற சொற்கள் சிவனுக்கு உரியவை. மங்கலமான சிவன் மக்களுக்கு மங்கலம் தருபவனாகவும், பேரின்பப் பேறான வீடுபேற்றை, முக்தியை அளிப்பவனாகவும் விளங்குகிறான். ஒரு பெரிய நகரத்தை அடைவதற்குப் பலவழிகள் இருப்பதைப்போல பேரின்பமாகிய வீடுபேற்றை அடைவதற்கும் பலவழி முறைகள் உள்ளன என்கிறார் திருமூலர். மக்கள் தம்மனம் விரும்பும் தெய்வத்தை வணங்கி அவனைச் சரணடைந்து வீடுபேறடைகின்றனர். தன்னை வணங்கும் அடியவர்களுடன் நெருங்கி விளையாட விரும்புவான் சிவன். அவ்வாறு அடியவர்களை நெருங்கி அவர்களை சோதித்து பின் அவர்களுக்குக் காட்சியளித்து வீடுபேறாகிய பேரின்பப் பேற்றை அளித்தவன் சிவன். சிவன் அடியவர்களுடன் விளையாடிய நிகழ்ச்சிகளை திருவிளையாடல்கள் என்று வரிசைப்படுத்தினார்.
திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு: சிவனது திருவிளையாடல்களை புராணமாகத் தொகுத்துள்ளனர். அவை திருவிளையாடல் புராணம் என்று அழைக்கப்படுகின்றது. அப்புராணங்களை விரிக்கின் பெருகும் என்பதால் அறுபத்து நான்கு புராணங்களின் பெயர்களை மட்டும் இங்கு வரிசைப்படுத்துகிறேன்.
1. குருவை இழந்த இந்திரனது சாபத்தைப் போக்கியது 2. வெள்ளை யானைக்கு துருவாசரால் வந்த சாபம் தீர்த்தது. 3. கடம்பவனத்தை அழித்து நாடாக்கியது. 4. உமாதேவி மலயத்துவச பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தது. 5. சிவபெருமான் சோமசுந்தர பாண்டியனாய் வந்து தடாதகைப் பிராட்டியாரை மணம் செய்து கொண்டது. 6. பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய இருவருக்கும் வெள்ளி அம்பலத்துள் திருக்கூத்து தரிசனங்காட்டி அருளியது. 7. தடாதகை பிராட்டியார் பொருட்டு குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டது. 8. குண்டோதரன் பொருட்டு வைகையையும் அன்னக் குழியையும் வருவித்தது. 9. தடாதகை பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சனமாலை நீராட ஏழு கடல்களை அழைத்தது. 10. காஞ்சன மாலையுடன் நீராட சொர்க்கத்திலிருந்த மலையத்துவச பாண்டியனை வர வழைத்தது. 11. தடாதகை பிராட்டியாரிடம் உக்கிரகுமாரன் மகனாகப் பிறந்தது. 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை, செண்டளித்தது. 13. கடல்வற்ற வேல் எறிந்தது. 14. உக்கிர குமாரனுடன் போர்புரிந்த இந்திரன் முடிமேல் வேல் எறிந்தது. 15. மேருமலையிலிருந்த செல்வத்தை எடுக்க முற்பட்டபோது அதற்கு ஒப்புக்கொள்ளாத மேருவை செண்டால் எறிந்தது. 16. வேதத்திற்குப் பொருளறியாது மயங்கிய இரிஷிகளுக்கு வேதத்தின் பொருள் கூறி விளக்கியது. 17. பாண்டிய மன்னனின் மகனின் கிரீடம் (மணி முடிக்காக) இரத்தினம் விற்றது. 18. மதுரை மீது வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது. 19. வருணன் விட்ட மழையைத் தடுத்து நான் மாடக் கூடலாக்கியது. 20. எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி சித்துகள் செய்தது. 21. சோதித்து வந்த பாண்டியனுக்காக கல்யானைக்கு கரும்பு அருந்தியது (உண்ணச் செய்தது.) 22. மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையைக் கொன்றது. 23. கவுரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலரானது. 24. பாண்டியன் பொருட்டு கால்மாறி ஆடியது. 25. கொலைக் கஞ்சிய வேடன் பொருட்டு பழிக்கஞ்சி, வேண்டிய பாண்டியனுக்காக வணிகன் திருமணத்தில் சாட்சி காட்டியது. 26. தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனது மிகப் பெரிய பாவத்தைத் தீர்த்தது. 27. வாட் படை ஆசிரியரின் மனைவியை வலிமையின் காரணமாக காதலித்த மாணவன் கையை வெட்டியது. 28. சமணர் மதுரை மீது ஏவிய நாகத்தைஅழித்தது. 29. சமணர் ஏவிய பசுவை நந்திதேவரை அனுப்பிக் கொன்றது. 30. சவுந்தர சாமாந்தனெனும் சேநாபதிகயின் பொருட்டுப் போர்ச்சேவகராய் மெய்க் காட்டிட்டது. 31. பாண்டியனுக்கு உலவாக் கிழி அருளியது. 32. மதுரை வீதியில் இருந்த இரிஷிபத்தினிகள் பொருட்டு வளையல் விற்றது. 33. இயக்கியர்களுக்கு அட்டமாசித்திகளை அருளியது. 34. சோழன் பொருட்டு மீன்முத்திரை பொறித்திருந்த கதவை திறக்கச் செய்து தரிசனந் தந்தது. அவன் சென்றபின்பு மீண்டும் இரிஷப முத்திரை பொறித்தது. 35. பாண்டியன் படைகளுக்குத் தண்ணீர் பந்தல் வைத்தது. 36. பொன்னனையாள் (பொன் போன்றவள்) பொருட்டு இரசவாதஞ் செய்தது. 37. மதுரை மீது படை எடுத்து வந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது. 38. வேளாளராகிய அடியவர் பொருட்டு உலவா நெற்கோட்டை அருளியது. 39. தாயத்தார் வழக்கு தொடுக்க மயங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்கு தீர்த்தருளியது. 40. வருணதேவர் பொருட்டு சிவலோகம் காட்டியது. 41. இசைவல்ல பாணபத்திரர் பகைவனை விறகு விற்பவராய் வந்து இசைபாடி ஓடச் செய்தது. 42. பாணபத்திரர் பொருட்டு சேரமான் பெருமாள் நாயனார்க்கு திருமுகம் தந்தருளியது. 43. பாணபத்திரர் மழையால் வருந்தாது பாட பலகையிட்டது. 44. ஈழதேசத்துப் பாண்வல்லாளை பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது. 45. தாயிழந்த பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்தது. 46. பன்றிக்குட்டிகளைப் பாண்டியர்க்கு மந்திரியர் ஆக்கியது. 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்தருளியது. 48. நாரைக்கு முத்தி கொடுத்தருளியது. 49. பிரளயத்தால் அழிந்த மதுரை மாநகரின் எல்லையை அரவங்கணத்தால் (பாம்பைக் கொண்டு வளைத்து) அறிவித்தது. 50. பாண்டியன் பொருட்டுப்படைத்துணை சென்று சுந்தரப் பேரம் செய்தது. 51. பாண்டியன் பொருட்டு தருமிக்கு ஐயந்தீர்க்கும் கவிதந்து கிழியறுத்துக் கொடுப்பித்தது. 52. தருமிக்குத் தந்த கவிக்குக் குற்றங் கூறிய நக்கீரரைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தப்பின் கரை ஏற்றியது. 53. நக்கீரருக்கு இலக்கணம் உரைத்தது. 54. நக்கீரர் முதலிய புலவர் பொருட்டு சங்கப் பலகை தந்தது. 55. சங்கத்தார் கலகத்தை மூங்கைப் பிள்ளையாய் தீர்த்தது. 56. பாண்டியருடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்கு தீர்த்தது. 57. பரதவர்குலப் பெண் பொருட்டு வலை வீசி அவளை மணந்தது. 58. வாதவூரடிகளுக்கு (மாணிக்கவாசகருக்கு) உபதேசித்தது. 59. அரசனுக்கஞ்சிய வாதவூரடிகளுக்காக நரிகளைப் பரிகளாக்கியது. 60. பாண்டியனுக்களித்த பரிகளை நரிகளாக்கியது. 61. வாதவூரடிகள் பொருட்டு வைகையில் வெள்ளம் வரச்செய்து அதை அடைக்க ஏவிய வந்திக்காகக் கூலி ஆளாய்ச் சென்று பிட்டுக்கு மண் சுமந்தது. 62. திருஞான சம்பந்த சுவாமிகளால் கூன் பாண்டியன் சுரத்தையும் கூனையும் நீக்குவித்தது. 63. சம்பந்த சுவாமிகளின் வாதத்தில் தோற்ற சமணர் கழுவேறியது. 64. வணிகப்பெண்ணுக்குச் சாட்சியாக வன்னி மரமும் கிணறும், இலிங்கமும் வரச் செய்தது.
இறைவன் நடத்திய இத்திருவிளையாடல்கள் மனித சமுதாயத்தின் மீது இறைவனுக்கு இருந்த அன்பைப் புலப்படுத்துகின்றன. உயிர்வாழ இன்றியமையாது வேண்டப்படும் தண்ணீருக்காக வைகை ஆற்றை தோற்றுவித்தார். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவை என்பதால் மேருமலையில் இருந்த செல்வத்தைக் கொடுத்தார். புலவரின் வறுமையைப் போக்கக் கவிதை எழுதித்தந்தார். ஆணவம் கொண்டவர்களின் அகந்தையைப் போக்கினார். உண்மைக் குச்சாட்சியாய் இருந்தார். தன் அடியவர்களின் துயரத்தைத் துடைத்தார். நோயைப் போக்கினார். இயல் தமிழில் கவிதை புனைந்த இறைவன் இசைத் தமிழிலும் வல்லவர். மனிதர்களுக்குப் பேரின்பப் பேற்றை வழங்கிய இறைவன் நாரைக்கும் வீடு பேறளித்தார். உலகத்து உயிர்களுக்குள் நிறைந்துள்ள ஆன்மாக்கள் இறைவனிடம் இருந்து வந்தவை என்பதும், அவை பிறவிப்பயனால் வினைகளைப் பெற்று பின்வினை நீங்கி இறைவனைச் சென்று சேரும் என்பதை இப்புராணம் எடுத்துரைக்கின்றது.
திருவிளையாடல் புராணம் பல புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டுள்ளது. பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேம்பத்தூரார் என்ற புலவரும் ஒரு திருவளையாடல் புராணம் இயற்றியுள்ளார். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதுவே பிற புராணங்களை விடச் சிறந்ததாக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒன்று. தலபுராணங்களில் மிகச் சிறந்த உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. திருவிளையாடல் புராணம். இந்நூலில் 3364 தனி பாடல்கள் உள்ளன. இவை நான்கு காண்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன. அறுபத்து நான்கு படலங்கள் உள்ளன.