பதிவு செய்த நாள்
09
செப்
2011
03:09
காலடியை விட்டு கிளம்பிய சங்கரர் சிருங்கேரியை அடைந்தார். பின் தன் சீடர்கள் புடைசூழ திக்விஜயம் செய்ய ஆரம்பித்தார். முதலில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாதரைப் பூஜித்துப் பின் பாண்டிய சோழ நாட்டு வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு பழக்கத்திலிருந்த தந்திர வழிமுறைகளை மாற்ற விரும்பி, சாக்தர்களை வென்றார். காமாட்சி அம்மனுக்கு ஒரு ஆலயத்தை நிறுவச் செய்து அங்கு ஸ்ரீசக்கரத்தை ஸ்தாபித்து, அம்பாளின் உக்ர கலையை சாந்த கலையாக மாற்றினார். அங்கு நடந்து கொண்டிருந்த தாந்திரீக பூஜை முறையை மாற்றி வைதீக பூஜை நடந்துவரும்படி ஏற்பாடு செய்தார். காஞ்சியில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். கர்நாடகம் சென்று அங்கு காபாலிகர்களையும், பாஷாண்டர்களையும் வாதில் வென்று, கோகர்ணம் சென்று சமுத்திர ஸ்நானம் செய்து பரமேஸ்வரனை பூஜித்தார். அங்கிருந்த சைவ ஆச்சாரியாரான நீலகண்டரை வென்று அத்வைதத்தை ஏற்கச் செய்து யாத்திரா மார்க்கமாக சௌராஷ்டிரம் வழியாக துவாரகையை வந்தடைந்தார். அங்கிருந்த வைஷ்ணவர்களை திருத்திவிட்டு உஜ்ஜைனி சென்றார். அங்கு பட்டபாஸ்கரர் என்பவரை வாதில் வென்று, ஜைனர்களால் எதிர்க்கப்பட்டார். ஆனால் அவர்களுடைய வாதங்கள் சங்கரர் முன் எடுபடவில்லை. இதுபோல் நவகுப்தர் என்ற சாக்கரும், சங்கரரிடம் தோற்றார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் சங்கரர் மேல் பகந்தரம் என்ற வியாதி உண்டாகும்படி செய்தார். இந்நிலையில் தோடகர் சங்கரருக்கு நல்ல பணிவிடை செய்தார். பத்மபாதரின் மந்திர சக்தியால் அந்த நோய் சங்கரரை விட்டு நீங்கி நவகுப்தரை தாக்கிற்று.
பிறகு தனது யாத்திரையைத் தொடர்ந்து இமயமலையை அடைந்தார். அங்கு தனது குருவின் குருவான கௌடபாதரை தரிசித்து அவரிடம் தான் செய்துவரும் அத்வைத மதம் பிரசாரத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டு சந்தோஷமடைந்த கௌடபாதர், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத் உரைக்கு நீ ஒரு விளக்கம் எழுதியிருப்பதாக உனது குருவும், எனது சீடருமாகிய கோவிந்தபகவத்பாதர் மூலம் கேள்விப்பட்டேன். அதற்காக உன்னை அனுக்ரஹிப்பதற்காகவே இங்கு வந்தேன் என்று சொல்லி சங்கரரை ஆசிர்வதித்துவிட்டு மறைந்தார்.
சர்வக்ஞபீடம் அமர்தல்: சங்கரர் இமயமலையில் கங்கை கரையில் தன் சீடர்களுடன் தங்கிவந்தார். அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா தேவியின் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது. இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞன் மட்டுமே அமர முடியும். அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு. வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன. ஆனால் தெற்குப் பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்குவாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார். உடனே சங்கரர் தென்திசை கதவு வழியாக அக்கோயிலுக்குள் நுழைய வேண்டுமென்று, அக்கோயிலை நோக்கிச் சென்றார். அவர் தெற்கு வாயிலை அடைந்தார். அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தம்முடைய வாதத்திறமையால் வென்றார். தென்திசைக் கதவு திறக்கப்பட்டது. சங்கரர் பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார். சங்கரர் அங்கிருந்த சிம்மாசனத்தில் உட்காரப் போனார். அப்பொழுது சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது. இந்த சிம்மாசனத்தில் உட்கார சர்வஞ்ஞராக இருந்தால் மட்டும் போதாது, சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி. அதற்கு சங்கரர், பிறந்ததிலிருந்து நான் ஒரு பாவத்தையும் அறியேன். நான் சர்வசுத்தன் என்றார். இதைக் கேட்டு சரஸ்வதி மகிழ, சங்கரர் சர்வஞ்ஞ பீடத்தில் ஏறி அமர்ந்தார். அதிலிருந்து அவர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.
சங்கரர் நிறுவிய மடங்கள்: அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்வதற்காக சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள் நிறுவினார். அவருடைய நான்கு முக்கிய சீடர்களே இந்த நான்கு மடங்களின் முதல் பீடாதிபதி ஆனார்கள். கிழக்கே பூரி ஜெகந்நாத்தில் ரிக்வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதன் பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார். தெற்கே சிருங்கேரியில் யஜுர் வேத ப்ரதானமாக சாரதா மடத்தை நிறுவி சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார். மேற்கே துவாரகையில் சாமவேத ப்ரதானமாக ஒரு மடத்தை நிறுவி ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாக நியமித்தார். வடக்கே பத்ரியில் அதர்வண வேத ப்ரதானமாக ஜோதிர் மடத்தை நிறுவி தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக நியமித்தார். கயிலாயத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ரத்னகர்ப கணபதி விக்ரகத்தையும் சுரேச்வரரிடம் கொடுத்து பூஜித்து வரும்படியும், துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளுக்கும் மேலான சாரதாபரமேஸ்வரியை ஆராதித்து வரும்படியும் ஏற்பாடு செய்தார். சுரேச்வரரைத் தொடர்ந்து இந்தப் பணியை சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் பூஜித்து வருகின்றனர். சங்கரரால் ஏற்றிவைக்கப்பட்ட ஜோதி சிருங்கேரியில் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.