மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினி காளி கோயிலை ருத்ராணி பீடம் என்பர். ருத்ரன் என்றால் சிவன். ருத்ராணி என்றால் அம்பாள். ருத்ரம் என்றால் ஆவேசம்.. இவள் உக்கிர சக்தி கொண்டவள். ஆவேசமாக இருப்பாள். ஆதிசங்கரர் இங்கு யந்திர பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக்கினார். இந்த காளியின் அருள் பெற்று மகாகவியாக திகழ்ந்தவரே காளிதாசர். அவர் எழுதிய முதல்நூல் சியாமளா தண்டகம். வடமொழி செய்யுள் வகையில் ஒன்றான இதில், அம்பாளின் தலை முதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம் பெற்றுள்ளது. உஜ்ஜயினி மன்னன் விக்ராமதித்தன் இந்த அம்பிகையிடம் வரம் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் அரசாளும் பாக்கியம் பெற்றான். வீரத்தின் விளை நிலமாகத் திகழும் இவளுக்கு நம் நாடு முழுவதும் கோயில்கள் உண்டு. உஜ்ஜயினி மகாகாளி என்பது திரிந்து, கிராமப்புறங்களில் உச்சிமாகாளி என்று மாறியது. காளிகளில் உக்ரமானவள் என்பதால், உச்சமாகாளியாக இருந்து உச்சி மாகாளியாக மாறியதாகவும் சொல்வர்.