பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
04:06
கலைகளுக்கு அதிபதியாகத் திகழும் சரஸ்வதி பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்டவள். புத்திமான்களின் நாவில் வாழும்படி கூறிய பிரம்மா, அவளை நதிரூபமாகவும் விளங்குமாறு வரமருளினார். இதற்கு புராண வரலாறு ஒன்று கூறப்படுகிறது.
தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி தாரையை சந்திரன் கவர்ந்துசெல்ல, இந்திராதி தேவர்களின் உதவியோடு பிரகஸ்பதி தாரையை மீட்டுவந்தார். தேவர்களுக்கு அஞ்சிய சந்திரன் அசுர குரு சுக்ராச்சாரியாரை சரணடைய, அதன் காரணமாக தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே போர் நடந்தது. பார் முடிந்தபின் தேவர்கள் ஹிமாலயத்தில் ததீசி முனிவரிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, தேவைப்படும்போது அவற்றை வாங்கிக்கொள்வதாகக் கூறிச் சென்றனர். சில காலம் கடந்தது, தேவர்களின் ஆயுதம் தங்களிடம் இருப்பதை அசுரர்கள் அறிந்தால் தங்களுக்கு ஆபத்து வரலாம் என்று முனிவரின் மனைவி சொல்ல, முனிவர் ஆயுதங்களை தண்ணீரில் கரைத்துக் குடித்துவிட்டார். பின்னர் இந்திரன் முனிவரிடம் ஆயுதங்களைக் கேட்டபோது, முனிவர் நடந்ததைக் கூறி அந்த ஆயுதங்களின் சக்தி தன் முதுகெலும்பில் இருப்பதாகவும், தன் முதுகெலும்பை எடுத்து அதில் ஆயுதம் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் கூறினார்.
அதன்படி இந்திரன் அவரைக் கொன்று முதுகெலும்பை எடுத்து வஜ்ராயுதம் செய்து, அதைக் கொண்டு தன்னைக் கொல்ல துவஷ்டாவால் ஏவப்பட்ட விருத்திகாசுரனைக் கொன்றான். ததீசி முனிவரின் மகன் பிப்பலாதன் நடந்தவற்றை அறிந்து இந்திரன்மீது கோபம் கொண்டான். பத்ரியில் கடுந்தவமியற்றி தன் தொடையிலிருந்து வடவாக்னியை உருவாக்கி தேவர்களை நோக்கி வீசினான். அதன் உக்கிரகத்தைத் தாங்கமுடியாத தேவர்கள் விஷ்ணு பகவானை சரணடைந்தனர். பகவான் செய்த ஏற்பாட்டின்படி அக்னி சமுத்திரத்தில் விழ சம்மதித்தது. அக்னியை யார் தூக்கிச் சென்று கடலில் சேர்ப்பது என்ற கேள்வி எழுந்தது.
அக்னி தன்னை ஒரு கன்னிகைதான் தூக்கிச் செல்ல வேண்டும் என வேண்ட, பிரம்மா தன் படைப்பான சரஸ்வதியிடம், நீயே இந்த ஜ்வாலையைத் தாங்கக் கூடியவள். நீ நதி ரூபமெடுத்து இதனை ஏந்திச் சென்று சமுத்திரத்தில் விட்டுவிடு என்று கூறினார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு நதிரூபமெடுத்து அக்னியைத் தாங்கிச் சென்றாள். ஔர்வாங்காசிரமத்திலிருந்து கிளம்பி, ஆங்காங்கே மறைந்தும் வெளிப்பட்டும் அந்தர்வாகினியாக பிரபாசத்திற்குச் சென்றாள். (பிரபாசம் மேற்கு கடற்கரையில் சவுராஷ்டிரத்தில் உள்ளது). செல்லும் வழியில் தென்பட்ட கங்கையிடம் பிறிதொரு சமயம் கிழக்கே சந்திப்பதாகக் கூறிவிட்டு, உத்தங்க ஆசிரமத்தில் ஒரு ப்ளாக்ஷ மரத்தினருகே வெளிப்பட்டாள். அங்கு சிவபெருமான் தோன்றி, அவள் கையிலிருந்த வடவாக்னியை ஒரு பானையில் இட்டுத் தந்தார்.
சிவபெருமானின் ஆக்ஞைப்படி அக்னி சரஸ்வதியைச் சுடவில்லை. அவள் வடதிசையில் சென்று புஷ்கரத்தில் வெளிப்பட்டாள். அங்கிருந்து கிளம்பி நந்தா, குமாரிகா போன்ற வெவ்வேறு பெயர்களில் வெளிப்பட்டாள். அவ்வாறு அவள் பாய்ந்து பரவிய இடங்கள் புனித க்ஷேத்திரங்களாயின. அந்த க்ஷேத்திரங்களில் மக்கள் நீராடி தங்கள் பாவங்கள் நீங்கப்பெறுகின்றனர். சரஸ்வதி நதி சிவாலிக் குன்றுகளின் ஸிர்மு பகுதியில் ஒரு ப்ளாக்ஷ மரத்தடியில் தோன்றி பாய்ந்து வரும்போது, பல இடங்களில் மணலில் மறைந்தும் மறுபடி தோன்றியும். வெளிப்படுவாள். குருக்ஷேத்திரத்தில் பல ஏரிகளாகத் தோன்றுகிறாள். வடவாக்னியைச் சுமந்து சென்றதால் பாவிகளைப் பார்க்க விருப்பமில்லாமல் அடிக்கடி மறைந்து மறைந்து தோன்றுவதாகவும் சொல்லப்படுகிறது. கடைசியாக கச்சின் மணற்பிரதேசத்தில் மறைந்து மீண்டும் சவுராஷ்டத்தில் பிரபாசத்தில் தோன்றி சமுத்திரத்தை அடைகிறாள். சரஸ்வதி ஆங்காங்கே தோன்றிய இடங்களில் சமஸோ பேதா, சிவோத் பேதா, நாகோத் பேதா ஆகியவை முக்கியமானவை. பிரயாகையில் சரஸ்வதி அந்தர்வாகினியாக கங்கை, யமுனையுடன் கலந்து திரிவேணி சங்கமத்திற்கு மெருகூட்டுகிறாள்.
சரஸ்வதி நதியின் தீர்த்த மகிமை சொல்லில் அடங்காது. சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து தவமியற்றிய வியாசர், சுகரை புத்திரனாக அடையும் பேறுபெற்றார். ஆயிரக்கணக்கான முனிவர்களும் ரிஷிகளும் வித்யாதரர்களும் இந்நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இவளது தீர்த்தமாகிய அமிர்தத்தைப் பருகி கல்விக்கு மெருகேற்றியிருக்கின்றனர். இவளது அருளைப் பெற்றவர்களே மகாகவிகளாகவும் சிறந்த கல்விமான்களாகவும் திகழ்ந்துள்ளனர்.