சிலருக்கு, செல்வம் பெற யாரை வணங்கலாம்? குழந்தை பெற இந்த தெய்வத்தைக் கும்பிடலாமா? தீர்க்காயுளுக்கு சிவனை வணங்கலாமா? புத்திக் கூர்மை பெற சரஸ்வதியைத் துதிக்கலாமா? இப்படி பல சந்தேகங்கள். இவர்களுக்காகத் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணம் சொன்னார். ஒருவர், காளி பக்தராக இருந்தார். அவருக்கு காளி மட்டுமே பிடிக்கும். கிருஷ்ணரை வணங்குபவர்களைப் பார்த்தால் ஒதுங்கிப்போவார். அவருக்கு எல்லா தெய்வமும் ஒன்றே என்று ராமகிருஷ்ணர் எடுத்துச் சொன்னார். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். அவரிடம், மகனே! ஒரு வீட்டுக்கு புது மருமகள்வருகிறாள். அறிமுகமில்லாத அந்த இடத்தில் மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன் என்று பல உறவுகளைச் சந்திக்கிறாள். எத்தனை பேர் இருந்தாலும், தன் அந்தரங்க விஷயங்களை மட்டும் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஏனெனில், கணவன் மூலமாகத்தான் அவளுக்கு மற்றவர்களைத் தெரியும். ஆக...கணவனே மூலவர். மற்றவர்கள் பரிவார மூர்த்திகள் போல. அதுபோல், நீயும் காளியை உன் அந்தரங்க விஷயங்களை அறிவிப்பதற்காக வணங்கு. மற்ற தெய்வங்களை காளியின் வடிவமாகப் பார். எல்லா தெய்வங்களையும் அவரவர் இஷ்ட தெய்வமாகவே காண வேண்டும், என்றார். மனிதரில் தான் பேதம் உண்டு. இறைவனுக்கு ஏது பேதம்! உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். மற்ற தெய்வங்களையும் அதன் வடிவிலேயே காணுங்கள்.