Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ... 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-9 | திருத்தொண்டர் புராணம் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ...
முதல் பக்கம் » பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-8 | திருத்தொண்டர் புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 செப்
2011
03:09

7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் 

40. சாக்கிய நாயனார் புராணம்

திருச்சங்க மங்கை என்ற ஊரில் சாக்கிய நாயனார் என்பவர் தோன்றினார். அவரது குலம் வேளாளர் குலம். அவர் பிறப்பறுக்க வேண்டும் துறையை ஆராயலானார். ஆதலால் அவர் காஞ்சி நகரத்துக்குச் சென்று பௌத்தரானார். மற்றச் சமயங்களையும் அவர் ஆராய்ந்தார். இறுதியில் சிவ வழிபாடே பிறவிப் பிணிக்கு மருந்து எனத் துணிவு கொண்டிருந்தார். எந்நிலையில் நின்றாலும் எக் கோலம் கொண்டாலும் சங்கரன் தாள் வணங்குவதே உண்மைப் பொருள் என எண்ணினார். சிவபெருமானை உள்ளத்தால் வழிபட்டார். ஆயினும் பௌத்த கோலத்தை மாற்றவில்லை.

நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்பே உணவு உண்பார். ஒருநாள் அவர் ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். அன்பு மேலிட்டது ! அதனால் அவர் செய்வது இன்னது என அறியாது பக்கத்திருந்த கல்லை எடுத்துச் சிவலிங்கத்தின் மீது எறிந்தார். சிறுவர் பெற்றோரைத் துன்புறுத்தும் போது மகிழ்வதைப் போன்று எம்பெருமான் மகிழ்ந்தார். மறுநாள் சிவலிங்கம் ஒன்றைக் கண்டார். முன் நாள் போல் கல்லை எறிவது ஒவ்வாத செயல் என எண்ணினார். எனினும் தம் கல்லால் அடிப்பது சிவனருளே எனக் கல்லால் அடித்தார். அப்படியே நாள்தோறும் செய்து வந்தார். ஒருநாள் உண்ணப் புகும் போது கல்லால் அடிக்காமல் உண்ணலானேனே ! என்று சென்று சிவலிங்கத்தைக் கல்லால் அடித்தார். சிவபெருமான் அவர்க்குக் காட்சி தந்தார். அவருக்குத் தம் உலகத்தில் அடிமைத் திறத்தை அளித்து அருள் செய்தார்.

3636. அறுசமயத் தலைவராய் நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம் வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங் கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம் அறிந்தபடி வழுத்துவாம்.

தெளிவுரை : ஆறு வகைப்பட்ட சமயங்களுக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானுக்கு அன்பராகிப் புறச்சமய சாக்கியர்களின் வடிவுடன் வரும் தொண்டராகி, சைவ சமயமே மெய்ச் சமயம் என்ற துணிவு கொள்வதால் சிவலிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்து, அதன்மீது கல் எறிந்து குற்றம் நீக்கும் திருவடியைப் பெற்ற தன்மையை நாம் அறிந்த அளவினால் வணங்குவோம்.

ஆறு வகைப்பட்ட சமயங்களுக்கும் தலைவர் சிவபெருமான். சமயம் யாவும் ஆறு வகைப்படும். இங்கு ஆறு சமயம் என்றது நான்கு வகைப்பட்ட சமயங்களில் ஆறுவகை. நான்கு வகையான: 1. புறப்புறம் 2. புறம் 3. அகப்புறம் 4. அகம்.

3637. தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார் மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும் அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும் நிலைஒழிவேன் எனநிற்பார்.

தெளிவுரை : அச் சாக்கிய நாயனார், திருச்சங்க மங்கை என்ற பதியில் முயற்சியுடையவர்களாக வாழ்கின்ற வேளாளர் மரபில் தோன்றினார். உண்மைப் பொருளைத் தெரிந்தும் அதன் பயனை உணர்ந்தும் அன்புடையவராயும் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவராயும் ஒழுகிப் பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் நீண்டு செல்லாது இந்தப் பிறப்பிலேயே அதனின்றும் நீங்குவேன் என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற்பார் ஆனார்.

3638. அந்நாளில் எயிற்காஞ்சி அணிநகரம் சென்றடைந்து
நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தாம் மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழிஉணர்வார்.

தெளிவுரை : அங்ஙனம் சாக்கியர் ஒழுகி வரும் நாளில் அதன் பொருட்டுத் தம் ஊரைவிட்டு, மதிலையுடைய காஞ்சி நகர்க்குச் சென்று அடைந்து உண்மை ஞானத்தை அடைதற்குரிய பல வழிகளையும் ஆராய்பவராய், அதன் பொருட்டாக முதலில் பௌத்தரின் பௌத்த தருமங்களின் வழியில் சேர்ந்து, நிலைபேற்ற பிறப்பை அறுக்கும் உறுதிப் பாட்டின் வழியினை ஆராய்பவராய் ஆனார்.

3639. அந்நிலைமைச் சாக்கியர்தம் அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச் சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ தெனவுணர்வு நாட்டுவார்.

தெளிவுரை : அந்நிலையில் அவர் பௌத்தர்களின் அரிய திரிபிடகம் என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தவராய்ச் சிவபெருமானது திருவருள் கூடப் பெற்றமையால் அளவில்லாத நல்ல சிவ நெறியே உண்மைப் பொருளாவது என்ற உணர்வை மனத்தில் நிலை பெற நிறுத்திபவராய் ஆனார்.

3640. செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.

தெளிவுரை : செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று, அதன் பயன் ஒன்று, அதைத் தந்து ஊட்டுபவனான முதல்வன் ஒன்று என உண்மை காணும் வகையினால் விதியினால் கிடைக்கும் பொருள்கள் நான்காகும் என்ற தெளிவு கொண்டே, இந்தச் சிறப்பு இயல்பு நிலை, சைவ நெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், உய்தி பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதையும் அவர் உணர்ந்து அறிந்து கொண்டார்.

3641. எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்.

தெளிவுரை : எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்பையுடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும் எனத் துணிந்து, தாம் மேற்கொண்டு பூண்ட அந்தப் பௌத்த துறவுக் கோலத்தை நீக்காமலேயே தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியை மிக்க அன்புடன் மறவாத நிலையில் சிறந்து விளங்கலானார்.

3642. எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே யாகிப் புல்ல ராகுவார்
அல்லார் கண்டர் தமக்கிந்த அகில மெல்லாம் ஆள்என்ன
வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றா தன்பின் வழிநிற்பார்.

தெளிவுரை : உலகம் பலவற்றையும் தம் வடிவமாக உடைய ஈசன் என்ற சொல்லுக்குப் பொருளாகி சிவபெருமானே முழு முதலாம் தலைவர் என்ற உண்மையை அறியமாட்டாதவர்களே பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தம் கோலத்தை அவனில் வேறு எனக் கொள்ளும் சாக்கியர்களாகியப் புன்மையின் நின்று ஒழுகுவர்; கரிய நஞ்சுடைய கண்டத்தையுடைய சிவபெருமானுக்கு இந்த வுலகம் எல்லாம் ஆளாவதே அல்லாது வேறில்லை என்று காண வல்லாராகி, இந்நாயனார் அந்தப் பௌத்த சமயத்தவர் தாங்கும் கோலத்தை மாற்றாமலே சிவன்பால் அன்பின் வழியிலே நின்று ஒழுகலானார்.

3643. காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்.

தெளிவுரை : கண்ணுக்குப் புலப்படாத அருவமாய் உள்ளமேனிக்கும் கண்ணுக்குப் புலப்படும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுவதற்குச் சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம், வெட்கம் இல்லாது தேடிய திருமாலும் நான்முகனும் காணுமாறு, அருளால், அவர்கள் நடுவே, விண்ணையும் பாதலத்தையும் அளாவும் அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

3644. நாடோறும் சிவலிங்கங் கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும் சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப் பதைப்போடும் எடுத்தெறிந்தார்.

தெளிவுரை : நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும் என்னும் நியமத்தை மேற்கொள்ள விரும்பி, பக்கத்தில் ஒரு வெளியிடத்தில் நிலைபெற்ற சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளத்தில் மிகுகின்ற மகிழ்ச்சி பொருந்திய நிலைமை கை வரப் பெற்றதால், இன்னது செய்வது என அறியாதவராகிப் பக்கத்தில் ஒரு கல்லைப் பார்த்து அதையே மலராய், அன்பில் உண்டான பதைப்புடன், எடுத்து, அந்தச் சிவலிங்கத்தின் மீது எய்தார்.

3645. அகநிறைந்த பேருவகை அடங்காத ஆதரவால்
மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும் இளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு நீள்சடையார் தாம்மகிழ்வார்.

தெளிவுரை : உள்ளம் நிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சியால் வந்த அளவு அற்ற அன்பினால் தம் குழந்தையை மகிழ்ந்து களிப்பவர்கள், அக்குழந்தை வலிமை செய்யும் செயல்களின் மூலம் இகழ்வனவற்றைச் செய்தாலும், அந்த இளம் புதல்வர்க்கு இன்பம் உண்டாகுமே அல்லாது அந்த வலிய செயல்களால் துன்பம் ஏற்படுவதில்லை. அதுபோல நாயனார் செய்த கல்லெறிந்த வன்மைச் செயலுக்கு நீண்ட சடையையுடைய சிவபெருமான் மகிழ்ச்சியே அடைவார் ஆனார்.

3646. அன்றுபோய்ப் பிற்றைநாள் அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங் கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக வென்றுமது செயநினைந்தார்.

தெளிவுரை : அன்று சென்று பின்வரும் நாள்களில் சிவலிங்கத்தைக் கண்டபின் உண்ணுவது எனத் தாம் மேற்கொண்ட அந்த வழக்கத்தின்படி, செய்வதற்காகச் சென்ற போது கொன்றை மாலை சூடிய சடையுடைய சிவபெருமானின் திருமேனியின் மீது தாம் முன்னை நாளில் கல் வீசிய திருக்குறிப்பினை (அடையாளத்தைப்) பற்றி நின்று உணர்வில் கொள்பவராய், அப்போது எனக்கு இத்தகைய எண்ணம் உண்டானது இறைவர் அருளால் ஆகும் என்று துணிந்து, அதுவே தாம் செய்யும் தொண்டாய் மேற்கொண்டு நாள்தோறும் இச்செயலையே செய்யலானார்.

3647. தொடங்கியநா ளருளியவத் தொழிலொழியா வழிதொடரும்
கடன்புரிவா ரதுகண்டு கல்லெறிவார் துவராடைப்
படம்புனைவே டந்தவிரார் பசுபதியார் தஞ்செயலே
அடங்கவுமென் பதுதெளிந்தா ராதலினால் மாதவர்தாம்.

தெளிவுரை : அவர் (அச்செயல்) தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின் மீது எறிவாராய்த் துவராடையை அணிகின்ற பௌத்த வேடத்தையும் விடாது அணிவார். பெருந்தவமுடைய நாயனார், சிவபெருமானின் அருட்செயலே எல்லாம் ஆகும் என்ற உணர்வுடையவராய் விளங்கினார், ஆதலால்,

3648. இந்நியதி பரிவோடு வழுவாம லிவர்செய்ய
முன்னுதிருத் தொண்டாகி முடிந்தபடி தான்மொழியில்
துன்னியமெய் யன்புடனே யெழுந்தவினை தூயவர்க்கு
மன்னுமிகு பூசனையாம் அன்புநெறி வழக்கினால்.

தெளிவுரை : இத்தகைய நியதிச் செயலை அன்புடன் செய்து வந்தார். வர, அச்செயல் மதிக்கப்படும் திருத்தொண்டேயாகி முடிந்த தன்மையைச் சொல்வோமானால், அன்பில் எழுந்த நெறியின் நியாயத்தால் பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கிச் செய்த செயல் தூயவரான இறைவர்க்கு நிலைபெற்ற சிறப்புமிக்க பூசனையேயாகும்.

3649. கல்லாலே யெறிந்ததுவு மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும் திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா ரரனார்க்கஃ தலராமால்.

தெளிவுரை : கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே ஆன தன்மையை ஆராய்ந்தால், வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும் இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்றதாயின தன்மையைப் பார்த்தோ மாதலின் நல்லவரான அவர் அன்பால் விரும்பிய அச்செயலை, அல்லாதவர், அவர் எறிந்தது கல் என்பர். அஃது சிவபெருமானுக்கு மலரேயாகும்.

3650. அங்கொருநாள் அருளாலே அயர்ந்துண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் றனையெறியா தயர்த்தேன்யா னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார் திருமுன்பு மேவினார்.

தெளிவுரை : அவ்வாறான ஒழுக்கத்தை மேற்கொண்டு வரும் நாள்களில், ஒருநாள், இறைவர் திருவருளால் தம் வழக்கத்தை மறந்து உண்ணத் தொடங்கியவர், எம் பெருமானைக் கல் எறிந்து வழிபடாது நான் மறந்தேனே என்று எண்ணி, உண்ணாமல் எழுந்து, மேன்மேல் பொங்கிய ஒப்பில்லாத பெருவிருப்பத்துடன் மிகவும் விரைந்து புறப்பட்டுக் கொடிய யானையினது தோலை உரித்த இறைவரின் திருமுன்பு சென்றார்.

3651. கொண்டதொரு கல்லெடுத்துக் குறிகூடும் வகையெறிய
உண்டிவினை யொழித்தஞ்சி யோடிவரும் வேட்கையொடும்
கண்டருளுங் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால்
தொண்டரெதிர் நெடுவிசும்பில் துணைவியொடுந் தோன்றுவார்.

தெளிவுரை : அங்குக் கிடைத்து எடுத்துக் கொண்ட ஒரு கல்லை வழிபாட்டின் இலக்குக் கூடும் (குறிக்கோள் நிறைவேறும்) வகையினால் அவர் எறிய, உணவு உண்ணும் செயலையும் கைவிட்டு அச்சத்துடன் ஓடி வரும் பெருவிருப்புடன் அவரைக் கண்டு அருள் செய்கின்ற நெற்றிக் கண்ணரான இறைவர் அருள் பொழியும் நோக்குடன் அத்தொண்டரின் எதிரே பெரிய வானில் தம் துணைவியான உமையம்மையாருடன் தோன்றுவாராகி,

3652. மழவிடைமே லெழுந்தருளி வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர் கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி மிக்கசிவ லோகத்தில்
பழவடிமைப் பாங்கருளிப் பரமரெழுந் தருளினார்.

தெளிவுரை : இளமையுடைய காளையின் மீது எழுந்தருளி வந்து ஒப்பில்லாத செய்கையால் இறைவரின் திருவடியை அடைந்த திருத்தொண்டரான சாக்கிய நாயனார் கண்டு, கைகள் கூப்பி, நிலத்தில் விழுந்து பணிந்து விழ, அருள் நோக்குக் கொண்டருளிச் சிறப்பு மிக்க சிவலோகத்தில் பழைய அடிமைத் திறத்தை இறைவர் அளித்தருளி மறைந்தருளினார்.

3653. ஆதியார் தம்மை நாளுங் கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித் துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன் சிறப்புலி யாரைச் செப்பி.

தெளிவுரை : நாள்தோறும் கல்லை வீசி எறிந்து பழையவரான சிவபெருமானை அடைந்த குற்றம் இல்லாத சிறப்பையுடைய தொண்டரான சாக்கியநாயனார் எண்ணி வழிபட்ட குறிப்பை, அவர்க்கு அருள் செய்யும் சோதியரான சிவ பெருமான் அறத்தவே அல்லாது நாம் துணிவது எவ்வாறு? அவர் தம் திருவடிகளைத் தலையில் கொண்டு சிறப்புலியாரின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கித் தீமையை நீக்கல் உற்றேன்.

சாக்கிய நாயனார் புராணம் முற்றிற்று.

41. சிறப்புலி நாயனார் புராணம்

திருவாக்கூர் என்பது சோழ நாட்டு ஊர்களுள் ஒன்றாகும். அவ்வூரில் அந்தணர்கள் குலத்தில் சிறப்புலியார் தோன்றினார். அவர் தம்மிடம் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து வந்தார். இறைவரிடம் அன்பு செலுத்திப் பல வேள்விகள் செய்தார். இறுதியில் இறைவரின் திருவடியை அடைந்தார்.

3654. பொன்னிநீர் நாட்டின் நீடும் பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க் கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.

தெளிவுரை : காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டின் பழைமையான அழகிய பதி, உலகத்தவர் வறுமையினால் யாசித்துச் சென்றால் இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருள் செய்த வேத வாக்கினைப் பெறும் ஊரானது திருவாக்கூர் என்பதாகும்.

3655. தூமலர்ச் சோலை தோறும் சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை ஆகுதித் தூப மோங்கும்.

தெளிவுரை : அப்பதியில் தூய்மையான மலர்ச் சோலைகள் தோறும், ஒளியுடைய பெரிய மாளிகைகள் தோறும், பெரு மேக முழக்கம் தோற்கும்படி வேத ஒலிகள் கூடிய முழக்கம் மேல் ஓங்கும்; அணி பொருந்திய வீதிகளில் இட்ட அகிற்புகைத் தூப மணம் கீழ்ப்படும் படி, ஓமங்கள் செய்யும் வேள்விச் சாலைகளின் ஆகுதிகளின் புகை மேல் ஓங்கும்.

3656. ஆலை சூழ் பூகவேலி அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள் நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினிற் சிறந்த நீரார்.

தெளிவுரை : கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும் கமுகுகள் வேலி போல் அமைந்திருக்கின்ற அந்தத் திருவாக்கூர் என்ற பதியில் உலகில் நிறைந்த புகழால் மிக்கவர், நான்கு வேதங்களையும் ஓதும் குலத்தில் தோன்றியவர், நஞ்சுண்ட கண்டத்தையும் எட்டுத் தோள்களையும் உடைய கூத்தப் பெருமானின் தொண்டை மேற்கொண்டுள்ள கொடைத் திறத்தால் சிறந்த தன்மையுடையவர், சிறப்புலி நாயனார்.

3657. ஆளும்அங் கணருக் கன்பர் அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.

தெளிவுரை : அவர் உலகங்கள் எல்லாவற்றையும் ஆளும் சிவ பெருமானின் அன்பர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கி, மூண்டெழும் அன்பு மேன்மேல் பொங்க, அவர்களுக்கு இனிய சொற்களைக் கூறி, நாடோறும் நல்ல உணவுகளை அளித்து உண்பித்து, அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்து, அதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்து, செல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் போல் விளங்கினார்.

3658. அஞ்செழுத் தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும் இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள்நிழல் தங்கி னாரே.

தெளிவுரை : பஞ்சாட்சரத்தை ஓதி, முத்தீ வளர்த்து, நல்ல யாகங்களையெல்லாம் நஞ்சு விளங்கும் கண்டரான சிவ பெருமான் அடிகளில் பொருந்தும் வண்ணமாகவே செய்து, உலகத்தில் குறையாத சிவனடியார்களுக்கு எக்காலத்தும் இடையறாது செய்யும் அன்பினால் வள்ளல்களின் வரையாது அளிக்கும் செயலில் பொருந்தச் செய்து, இறைவரின் திருவடி நிழலில் நிலை பெற இருந்தார்.

3659. அறத்தினின் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண் சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங் குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.

தெளிவுரை : சிவ அறங்களில் மிக்க மேன்மை பெற்ற அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலியாரை வாழ்த்தி, திருச் செங்காட்டங்குடியில் செம்மையுடைய விறலையுடைய சிறுத் தொண்ட நாயனார் செய்த திருச்செயலைக் கூறப்புகுகின்றேன்.

சிறப்புலி நாயனார் புராணம் முற்றிற்று.

42. சிறுத்தொண்ட நாயனார் புராணம்

திருச்செங்காட்டங்குடி என்பது சோழ நாட்டகத்தில் உள்ளதாகும். அவ்வூரில் மாமாத்திரர் என்ற அந்தணர் மரபில் பரஞ்சோதியார் என்பவர் அவதரித்தார். அவர் தென் மொழி, வட மொழிகளில் உள்ள கலைகளையும் ஆயுர் வேதம், படைக்கலத் தொழில் என்பவற்றையும் கற்றவர்; பல்லவ மன்னனுக்குப் படைத் துணையாய் இருந்து போர் பல செய்து வெற்றி பல குவித்தவர்.

நரசிம்மவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் போர் நிகழ்ந்த போது படைத்தலைவராய் இருந்து பகை மன்னனை அவர் வென்றவர். மன்னன் நரசிம்மவர்மன், பரஞ்சோதியார் சிவனடியார் என்பதை அறிந்தான். அவரைத் தம்மிடமிருந்து விடுவித்துப் பெரும் பொருள் தந்து அனுப்பினான்.

அவர் தம் செங்காட்டங்குடிக்கு வந்தார். சிவனடியாரை உண்பித்த பின்பே உணவு கொள்ளும் பழக்கத்தை அவர் மேற்கொண்டிருந்தார். மேலான சிவனடியார் முன்பு தம்மைச் சிறியவராய் மதித்து ஒழுகியதால் சிறுத் தொண்டர் என அழைக்கப் பெற்றார். அவர்க்கு ஒரு மகன் உண்டு. அவனது பெயர் சீராள தேவன் என்பதாகும். அக்காலத்தில் திருஞானசம்பந்தர் அந்தப் பதிக்கு வந்தார். அவரைச் சிறுத் தொண்டர் உபசாரம் செய்தார்.

அவரது தொண்டு எங்கும் பரவியிருந்தது. ஒருநாள் இறைவர் பயிரவத் துறவியர் கோலம் கொண்டார். சிறுத் தொண்டரின் மாளிகையை அடைந்து, சிறுத்தொண்டர் இருக்கிறாரா என்று வினவினார். உடனே சந்தனத்தாதியார் என்ற பணிப் பெண் விரைந்து சென்று சிவனடியாரைத் தேடிச் சிறுத்தொண்டர் வெளியே சென்றிருப்பதைத் தெரிவித்தார். தெரிவித்து இல்லத்துள் அழைத்தார். அவர் ஆடவர் இல்லாத வீட்டில் தாம் இருப்பதில்லை என்றும் தாம் தங்கப் போகும் இடம் இது என்றும் கூறிச் சென்றார்.

சற்று நேரத்தில் இல்லத்துக்குத் திரும்பிய சிறுத்தொண்டர் பயிரவர் வந்து சென்றதை அறிந்து அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். அவரைக் கண்டு அடியை வணங்கி தம் இல்லத்துக்கு வந்து உணவு உண்டருள்க என வேண்டிக் கொண்டார். உம்மால் எனக்கு உணவு படைக்க இயலாது. நான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பசுவைக் கொன்று உண்பவன் அங்ஙனம் உண்ணும் நாள் இந்நாளே ! அவ்வாறு உணவை அளிக்க உம்மால் இயலாது ! என்றார் இறைவர். சிறுத்தொண்டர் தம்மிடம் பல பசு உண்டு என்றார். பயிரவியார் நான் உண்ணக் கூடியது விலங்கான பசு அன்று. நரப் பசு ஐந்து வயது உடையதாய் உறுப்புக் குறைவில்லாத அழகு உடையதாய் இருக்க வேண்டும் ! மேலும் கூறவேண்டியது ஒன்று உண்டு, நான் உணவு உண்ண விரும்புவோன் ஒருகுடிக்கு ஒருமகனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தந்தை அறுக்கவும் தாய் பிடிக்கவும் வேண்டும். இருவரும் விரும்பிச் சமைத்த கறியையே யாம் உண்போம் என்றார்.

சிறுத்தொண்டர் அவ்வாறே அமுது படைப்பதாய் உரைத்துச் சென்றார். பயிரவர் தமக்குக் கூறியதைச் சிறுத் தொண்டர் தம் மனைவிக்கு உரைத்தார். இருவரும் தம் மகனையே அறுத்துக் கறி சமைப்பது என்று முடிவு செய்தனர். சிறுத்தொண்டர் பள்ளிக்குச் சென்ற மகனை அழைத்து வந்து அறுத்துக் கறி சமைக்கச் செய்தார். தலைக்கறி ஆகாது என்று விலக்கி வைத்தனர்.

துறவியார் உணவு உண்ண அமர்ந்தார். அப்போது கறிகளைப் பரிமாறினர். அத்துறவியார் தாம் சொன்னபடி சமைக்கப்பட்டதா என வினவினார். தலைக்கறி மட்டும் உதவாது என்று ஒதுக்கி வைத்திருப்பதைச் சிறுத் தொண்டரின் மனைவியார் உரைத்தார். அதையும் கொணருமாறு அத்துறவியார் கூற, சந்தனத்தாதியார் அதனைத் தாம் எடுத்துச் சமைத்து வைத்திருப்பதாய்க் கூறி அதனையும் கொணர்ந்து பரிமாறினார். அதன்பின் அத்துறவியார் தாம் தனித்து உண்பதில்லை என்றும் சிவனடியார் ஒருவரை அழைக்கும்படியும் உரைத்தார். பக்கத்தில் சிவனடியார் ஒருவரும் இல்லாமையால் தாமே உண்பதாய்ச் சிறுத்தொண்டர் உரைத்தார். சிறுத் தொண்டர் வந்த துறவியார் விரைவில் உண்ண வேண்டும் என்பதால் தாம் விரைவாய் உண்ணத் தொடங்கினார். அவரை அத்துறவியார் தடுத்து, உமக்கு மகன் இருப்பானாயின் அழையுங்கள் என்றார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் அவன் இங்கு இப்போது உதவான் என்றார். உம் மகன் இங்கு வந்தால்தான் உண்பேன். அவன் வரும் வழியை நோக்கி அழையும் ! என்றார் துறவியார்.

சிறுத்தொண்டர் தம் மனைவியுடன் இல்லத்துக்கு வெளியே வந்து சீராளா ! வருவாய் என்று அழைத்தார். பள்ளியினின்றும் ஓடி வருபவனைப் போல் அவர்களுடைய மகன் ஓடிவந்தான். தாயான திருவெண்காட்டு நங்கை அவனை அணைத்துத் தந்தையான சிறுத்தொண்டரிடம் தந்தார். இருவரும் இல்லத்துக்குள் நுழைந்தனர். அங்குப் பயிரவித் துறவியார் இல்லை. வெந்த இறைச்சியையும் காணவில்லை. சிந்தை கலங்கினர். அப்போது உமையொரு பாகராய் இறைவர் எழுந்தருளி, அம்மூவரையும் சந்தனக் தாதியாரையும் தம் உலகத்துக்குச் சேர்ப்பித்தார்.

3660. உருநாட்டும் செயல்காமன் ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார் மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங் களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ் செங்காட்டங் குடியாகும்.

தெளிவுரை : வடிவத்துடன் இருந்து உயிர்கள் மீது செலுத்தும் தன் ஆணைச் செயலை மன்மதன் ஒழியுமாறு (விழியினின்று) வெளிப்படுத்தும் செந்தீ தோன்றும் நாட்டத்தையுடைய நெற்றியையுடைய சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் தலம், வயல்களில் கருங் கண்களையுடைய உழத்தியர் தம் களியாடல்களைக் காட்டுவதற்கு இடமான காவேரித் திருநாடு என்று சொல்லப்படுகின்ற சோழ நாட்டில் வளம் வாய்ந்த திருச் செங்காட்டங்குடி என்பதாகும்.

3661. நிலவியஅத் திருப்பதியில் நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம் உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங் குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம் பரஞ்சோதி யாரென்பார்.

தெளிவுரை : நிலவும் அந்தப் பதியில் நீண்ட சடையையுடைய சிவபெருமானின் திருநீற்றுச் சார்பினால் உலகத்தில் தோன்றி வளர்கின்ற எல்லா உயிர்களுக்கும் உயர்வான காவல் தொழிலை மேற்கொண்டு, பெருகும் புகழையுடைய மாமாத்திரர் குலம் பெருகும்படி வந்து தோன்றியவர் பலரும் புகழ்கின்ற பரஞ்சோதியர் என்று அழைக்கப்படும் திருப்பெயரை உடையவர்.

3662. ஆயுள்வே தக்கலையும் அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும் துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும் பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும் மேதினியில் மேலானார்.

தெளிவுரை : ஆயுள் வேதம் என்று கூறப்படுகின்ற மருத்துவ நூற்கலையும், எல்லை இல்லாத வடநூல்களில் உள்ள பல விதமான கலையும், தூய படைக்கலத் தொழிற்கலையும் என்ற இவற்றையெல்லாம் அவ்வவற்றில் எல்லை நிரம்பும் அளவும் பயின்றார். அவற்றுடன் பாய்கின்ற மதம் பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய தொழில் செய்யும் கலையிலும் உலகத்தில் மேம்பட்டவராக விளங்கினார்.

3663. உள்ளநிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும் பயின்றுவரும் பண்புடையார்.

தெளிவுரை : தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது சிவனடிகளில் பொருந்திய அன்புடைமையான ஒழுக்கமேயாகும் என்று கொள்ளும் உணர்வினால் முதன்மை பெற இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம் பள்ள மடையில் நீர் ஓடுவது போல் தடை யில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பை உடையவரானார்.

3664. ஈசன்அடி யார்க்கென்றும் இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப் போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார்.

தெளிவுரை : சிவனடியார்களுக்கு எந்நாளும் இயல்பால் பொருந்திய தொண்டுகளைச் செய்தே, குற்றம் அற்ற புகழையுடைய மன்னனிடத்து அன்பினால் பக்கத்துணை யிருந்து அவனுக்காகப் போரில் செலுத்தப்படுகின்ற யானைப் படையைச் செலுத்திப் பல போர்களில் வெற்றி கொண்டு, போரில் எதிர்த்து நிற்கும் மன்னரின் நாடுகள் பலவற்றையும் கைக்கொண்டு, தேர்ப்படையையுடைய தம் மன்னனிடம் சிறப்பைப் பெற்றார்.

3665. மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.

தெளிவுரை : அவர், மன்னனுக்காகப் படையெடுத்துச் சென்று வட நாட்டில் வாதாவி என்ற பழைய நகர் தூளாக ஆகும்படி யானைப் படையைச் செலுத்தி வென்று, பல மணிகளையும் பொருட்குவைகளையும் யானைக் கூட்டங்களையும் குதிரைத் தொகுதிகளையும், இன்னும் இத்தகைய எண்ணில்லாதவற்றையும் கைக்கொண்டு இங்குத் தம் மன்னன் முன் கொணர்ந்தார்.

3666. கதிர்முடிமன் னனுமிவர்தங் களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி லில்லையென வெடுத்துரைத்தார்.

தெளிவுரை : ஒளி பொருந்திய முடியுடைய மன்னனும் இவரது யானைப் படை செலுத்துவதற்குரிய வல்லமையைப் பார்த்து வியந்து புகழ்ந்து கூற, அதை அறிந்த அமைச்சர்கள் எடுத்துக் கூறுவாராய்ப், பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானின் திருத்தொண்டு வாய்க்கப் பெற்ற வல்லமையினால், இவரை எதிர்த்து நிற்பவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை என்று உரைத்தார்கள்.

3667. தம்பெருமான் திருத்தொண்டர் எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில் விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க வேண்டுமென இறைஞ்சினான்.

தெளிவுரை : தம் இறைவரின் திருத்தொண்டர் இவர் என்று அமைச்சர் கூறக் கேட்ட மாலை சூடிய மன்னன், எம் பெருமானின் அடியவரான இவரை இத்தகையவர் என்று அறியாது கெட்டேன் ! மிக்க கொடிய போர் முனையில் சென்று போர் செய்யுமாறு விட்டிருந்தேனே ! என்று நினைத்து நடுக்கம் அடைந்து, அந்த அடியாரை நோக்கி, எம்பெருமானே, இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும் ! என்று இறைஞ்சினான்.

3668. இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன் நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன் அஞ்சலிசெய் துரைக்கின்றான்.

தெளிவுரை : அங்ஙனம் மன்னன் வணங்கவும், அதன் முன்பு தாம் இறைஞ்சி, என் உரிமையான படைத் தொழிலுக்கு ஏற்றதாகப் பொருந்திய திறத்தை நான் செய்வேன். அதனால் என்ன தீமை நேரும்? என்று பரஞ்சோதியார் உரைக்க, அறவழி செங்கோல் செலுத்தும் மன்னன் அப்போது அவர்க்கு நிறைந்த செல்வக் குவியல்களுடன் நீடுசெல்லும் எல்லா மானியங்களையும் அளித்து அவரை வணங்கினான்.

3669. உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக் கினிதாக விசைந்துஉமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு செய்யுமென விடைகொடுத்தான்.

தெளிவுரை : உம் உண்மை நிலையான திருத்தொண்டை யாம் அறியாதபடி செய்தீர். இனிமேல் எம் மனக்கருத்துக்கு இனிமை பெறச் சம்மதித்து, உம் மெய்ம்மைத் தொண்டின் படி ஒழுகிச் செம்மை தரும் நெறியான சிவநெறித் தொண்டு செய்வீராக ! என்று சொல்லித், தம் கீழ் அவர் செய்யும் தொழிலினின்று விடுவித்து அம்மன்னன் விடை தந்தான்.

3670. மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச் சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா முறையன்பிற் செய்கின்றார்.

தெளிவுரை : (புகழ்ந்து கூறப்படும் பரஞ்சோதியாரும்) அம் மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு தம்பதியான செங்காட்டங்குடியை அடைந்தார். குளிர்ந்த பிறைச் சந்திரன் வாழ்வதற்கு இடமான தலையையுடைய சிவபெருமானைக் கணபதீச்சரம் என்ற கோயிலில் வணங்கித் திருத் தொண்டை முன்னைய நிலைமையினின்று வழுவாது முறையாக அன்புடன் செய்து வந்தார்.

3671. வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார் கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும் நீர்மையினில் நிலைநிற்பார்.

தெளிவுரை : பரஞ்சோதியார், வேதங்களுக்குக் காரணரான சிவபெருமானின் அடிவர்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்பவராய்க், குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்ற காதலையுடைய இல்லக் கிழத்தியாருடன் இருவர் கருத்தும் ஒன்றாய்ப் பொருந்த வரும் பெருமையுடையதாய் அறநீதியின் வழியே இல்லறம் நடத்தி வாழும் தன்மையில் நிலை நிற்பாராய், (விளங்கினார்)

3672. நறையிதழித் திருமுடியார் அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால் நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந் தூயதொழில் தலைநின்றார்.

தெளிவுரை : தேனையுடைய கொன்றை மலர் மாலையைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் அடியவர்களை நூல் விதிப்படி நாள்தோறும், முறைப்படி, முன்னம் உணவு உண்ணச் செய்து, அதன் பின்னர்த் தாம் உண்ணுதலான பெருவிருப்பத்தால் அதனை வழக்கமாகக் கொண்டு ஒழுகும் துறையில் தவறாது ஒழுகுதலான தூய்மையுடைய தொழிலில் சிறந்து விளங்கினார்.

3673. தூயதிரு வமுதுகனி கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.

தெளிவுரை : தூய திருவமுதும், பழவகைகளும், ஆறு சுவைகளையுடைய கறிவகைகளும், நெய்யும், உறைந்த தயிரும், பாலும், இனிய பலகாரங்களும், அமுது போன்ற உண்ணீரும் என்ற இவற்றைப் பொருந்திய வாற்றல், திருவமுது செய்விக்க, அதற்கு இசைந்து அடியார்கள் வந்து அமுதுண்டு, பெரிய வுலகம் போற்ற வரும் இவரிடம் உள்ளம் மகிழ்ச்சி கொண்டனர்.

3674. சீதமதி அரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.

தெளிவுரை : குளிர்ந்த பிறைச் சந்திரனுடன் பாம்பையும் சிவந்த சடை மீது அணிந்து கொண்டுள்ள இறைவனின் அடியவர்க்கு விருப்புடன் செய்யும் வழிபாட்டு வகையால், மேன்மையுடைய அந்த அடியார்களின் முன்பு தம்மை மிகவும் சிறியவராய்க் கருதி ஒழுகி வந்தார். வந்ததால் சிறுத்தொண்டர் என்ற பெயருடன் உலகில் விளங்கலானார்.

3675. கண்ணுதலார் கணபதீச் சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய் தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார் இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன் நயந்துறையும் நாளின்கண்.

தெளிவுரை : நெற்றியில் கண்ணையுடைய இறைவரின் கணபதீச்சரத்தில் கருத்துப் பதிய விரும்பி உள்ளே நிறையும் அன்பினால் தொண்டுகள் செய்து ஒழுகுபவரான அவர், குறைவின்றி அளவில்லாத பெருமையுடைய சிறந்த அடியார்கள் இடைவிடாது வந்து உணவு உண்டருள, பொருந்திய மகிழ்ச்சியுடன் விரும்பி அமர்ந்திருந்த நாளில்,

3676. நீராருஞ் சடைமுடியார் அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப் பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும் திருமைந்தர் அவதரித்தார்.

தெளிவுரை : கங்கை நீர் பொருந்திய சடையுடைய சிவபெருமானின் திருவருளால், நிறைந்த தவத்தையுடைய அவருக்குப் பெருகும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை என்னும் மனைவியின் மணிவயிற்றில் சீராள தேவர் என்னும் திருமகனார் பிறந்தருளினார்.

3677. அருமையினில் தனிப்புதல்வர் பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார் மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங் குடியெடுப்ப.

தெளிவுரை : அருமையாய்ப் பெற்ற ஒப்பில்லாத மகனார் பிறந்தபோது, அலங்காரம் செய்து அப்பெருமையால் சுற்றத்தார் மகிழ்ச்சியடைய, பெறுவதற்கு அரிய மணியைப் போன்ற மகனைப் பெற்றதால் உண்டாகும் மகிழ்ச்சியானது தந்தையரான நாயனார் உள்ளத்துள் அடங்காத உவகை மேலோங்கி வளர, சிறப்பு மிக்க நெய்யாடல் விழாவைக் செங்காட்டங்குடியில் உள்ளவர் எல்லாரும் செய்து கொண்டாடினர்.

3678. மங்கலநல் லியம்முழக்கம் மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க் களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச் சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன் புரிந்துகாப் பணிபுனைந்தார்.

தெளிவுரை : மங்கலமான நல்ல இயங்களின் ஒலியும் மறைகளின் ஒலியும் வானத்தில் ஓங்க, இறைவரின் சிறப்புடைய அடியார்களுக்கு அளவில்லாத பொருள்களைத் தந்து தங்கள் குல மரபுக்கு உரிமையான சடங்குகளைப் பத்து நாட்களிலும் மேல் மேல் அதிகரிக்கும் மகிழ்ச்சியுடன் செய்து காப்பு அணிந்தனர்.

3679. ஆர்வநிறை பெருஞ்சுற்றம் அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன் பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர் திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத் தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.

தெளிவுரை : அந்நாயனார் மிக்க விருப்பமுடைய சுற்றத்தவர் எல்லாம் உள்ளம் மகிழக் கொடுத்து, உலகத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன் அவ்வப் பருவங்கள் தோறும் செய்யப் பெறும் சடங்குகளை எல்லாம் சிறப்பாகச் செய்ய, வளரும் திருமகனாரான சீராளதேவர் தம் சிறிய பாதங்களில் மாலையாய்க் கோத்த கிண்கிணிச் சதங்கை அசையும்படி தளர்நடைப் பருவத்தை அடைந்தார்.

3680. ருளுமயிர் நுதற்சுட்டி துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண் மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள் பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர் திருவிளையாட் டினிலமர்ந்தார்.

தெளிவுரை : சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டி என்ற அணியும், இரண்டு காதுகளிலும் குதம்பை என்ற அணியும், திருக் கழுத்தில் பொருந்தும் கண்டசரம் என்ற அணியும், மார்பில் ஐம்படைத் தாலி என்ற அணியும், கைகளில் ஒப்பில்லாத வயிரத்தால் ஆன சரி என்ற அணியும், இடையில் பொன் அரைஞாண் என்ற அணியும், திருவடியில் அணியும் சதங்கை என்ற அணியும் என்ற இவற்றைப் பூண்டு தெருவில் ஒளிவிளங்க வளரும் பிள்ளைத் திருவிளையாட்டினைச் சீராளதேவர் விரும்பி இருந்தார்.

3681. வந்துவளர் மூவாண்டில் மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினார்.

தெளிவுரை : வளர்கின்ற மூன்றாம் ஆண்டில் மயிர் நீக்கும் மணவினை முடியச் செய்வித்துத், தந்தையாரும் தாயாரும் ஒப்பில்லாத சிறிய தோன்றலான மகனாருக்கு மனம் மலர்வதற்குக் காரணமான சொற்களின் தெளிவையுடைய செழுங் கலைகளைப் பயில்வதற்காகத் தம் பிறவிப் பிணிப்பு நீங்க வந்த அவரைப் பள்ளியில் சேர்த்தனர்.

3682. அந்நாளில் சண்பைநகர் ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.

தெளிவுரை : அந்நாளில் சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் அங்கு வந்தருள, முப்புரி நூல் அணிந்த மார்பையுடைய சிறுத்தொண்டர் முன்னாகச் சென்று எதிர்கொண்டு வரவேற்று, அழைத்து வந்து, நகரத்துக்குள் புகுந்து, தம் மனையில் இருக்கச் செய்து, அச் சீகாழித் தலைவரின் நல்ல பெருமையுடைய திருவடிகளைத் துதித்து நலத்தைப் பெற்றார்.

3683. சண்பையர்தம் பெருமானும் தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத் தாமினிது நயப்புற்றார்.

தெளிவுரை : சீகாழியினரின் தலைவரான ஞானசம்பந்தரும் தாங்குவதற்கு அரியதாய் மேன்மேலும் வளரும் பெரிய பக்திப் பண்புடைய சிறுத் தொண்டருடன் பயின்று இனிதாய்த் தங்கி, அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்து, தம் நட்பினராகும் பேற்றையும் அவருக்குத் தந்தருளித் தாம் இன்பத்துடன் பெருவிருப்பமும் பொருந்த அமர்ந்திருந்தார்.

3684. இத்தன்மை நிகழுநாள் இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்.

தெளிவுரை : இவ்வாறு இச்சிறுத்தொண்டரின் தொண்டு நிகழும் நாளில், இவரது திருத்தொண்டானது பெரிய கயிலை மலையில் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடியிணைகளின் கீழ்ப் போய்ச் சேர, காளையூர்தியையுடைய இறைவர், தாமே அவரின் மெய்யாந் தன்மை கொண்ட அன்பை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு உள்ளம் மகிழ்வுடைய வயிரவக் கோலத்துடனே திருமலையினின்று நீங்கி எழுந்தருளிச் சேர்வாராய்.

3685. மடல்கொண்ட மலரிதழி நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி.

தெளிவுரை : இதழ்கள் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையையே கருங் கடலில் சேர்ந்து நீரையுண்டு மேலே எழுந்த கரிய மேகத்தின் சுருள்போல் தொடர்ந்து நீண்ட தலைமயிர் சுருண்டு இருண்டு காடு அடர்ந்து நெறிப்பும் அசைவும் உடையதாகச் செறிந்து படரும் வரிசை கொண்டு கருங்குச்சிக் கொத்தைப் போல் ஆக்கி அழகுடையதாய்ப் பரப்பி முடித்து,

3686. அஞ்சனம்மஞ் சனஞ்செய்த தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன் சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந் தும்பைநறு மலர்தோன்ற.

தெளிவுரை : மைக்குழம்பை மூழ்கச் செய்ததைப் போல் அழகு மிகும் கரிய மயிரான மேகத்திடையே எழுந்து தோன்றும் நட்சத்திரத்தின் பரப்பைப் போன்றும் திரட்சியாய் வரிசையாய்ப் பல வண்டின் கூட்டங்கள் பக்கங்களில் சூழ்ந்து ஒலிக்க, நிலைபெறும் வரிசைகளில் தும்பை மலர்கள் விளங்க.

3687. அருகுதிரு முடிச்செருகும் அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.

தெளிவுரை : திருமுடியின் ஒரு பக்கத்தில் செருகும் மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனையே ஒளி பெருகும் சிறிய முழுமதிபோல ஆக்கி மீண்டும் நெற்றியில் அணிந்ததைப் போல் விரியும் ஒளி பொருந்திய சிவந்த பவளக் கதிர்களை விரித்து வீசும் விளக்கமுடைய சுடர்த் திரு நெற்றியின் மீது திருநீற்றின் ஒற்றைப் பொட்டு ஒளி வீசி விளங்க,

3688. வெவ்வருக்கன் மண்டலமும் விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும் உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக் குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த திருத்தோடு புடைசிறக்க.

தெளிவுரை : வெம்மையுடைய கதிரவன் மண்டலமும் விளக்கமான சந்திர மண்டலமும் அந்த அக்கினி மண்டலமும் ஒன்றாகக் கூடியதைப் போல, அழகைத் தன் வயமாக்கும் செவியில் அழகான சங்குக் குழையை வளைத்து அணிந்து அதனுள் செவ்வரத்தம் பூவைச் செறித்ததோடு இரு பக்கங்களிலும் சிறந்து விளங்க.

3689. களங்கொள்விடம் மறைத்தருளக் கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத் தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும் உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை வெண்பளிங்கின் வடந்திகழ.

தெளிவுரை : திருக்கழுத்தில் கொண்ட நஞ்சை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தின் குமிழ்களின் வரிசையாய் வாய்ந்த ஒளியுடைய வெள்ளிய திரட்சிகளின் தூய வடத்தை அணிந்ததுபோல் உள்ளத்துள் நினைப்பவரின் உடலும் உயிரும் உருகும்படி மிக விளங்கும் திருக்கழுத்திலே வெண்மையான பளிங்கு மாலை விளங்க.

3690. செம்பரிதி கடலளித்த செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க.

தெளிவுரை : சிவந்த கதிரவன் கடலில் குளிக்கும் சமயத்தில் தருகின்ற செவ்வான ஒளியை அந்தி முதிர வரும் இருள் அடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வதைப்போல் அழகிய பவளம் போன்ற மேனியின் மீது தம் பழைய யானைத் தோலையே கொண்டு ஆக்கியதையே அணியும் சட்டையினது அழகு விளங்க.

3691. மிக்கெழும்அன் பர்கள்அன்பு திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும் அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ் சாத்தியவொண் சுடர்தயங்க.

தெளிவுரை : அடியாரிடத்தில் மேல் ஓங்கி எழும் அன்பானது தம் திருமேனியின் மீது அங்கங்கும் வடிவு கொண்டு வளைந்தாற்போல், எலும்பு மணிகளால் அமைந்த வெற்றி மாலையும் கோவைகளும் கைகளுக்கு அணியும் கங்கணங்களும் இடுப்பில் அணியும் அரைஞாணும், கால்களில் அணியும் காலணிகளும் அணிந்த ஒன்றிய பேரொளி விளங்க,

3692. பொருவில்திருத் தொண்டர்க்குப் புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர் எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு திசைமுழுதுஞ் செலவொலிப்ப.

தெளிவுரை : ஒப்பில்லாத தொண்டரான சிறுத்தொண்டருக்காக இந்த வுலகத்தில் வந்து அருள் செய்யும் பெருகிய அருளின் தன்மையைக் கண்டு இறைவரின் திருவருளையே விரும்பிப் போற்றுவீர் ! வளர்கின்ற அன்பின் வழியில் நிற்கக் கடவீர் ! என்று வேதங்கள் பண்டு கூறுபவை போலத் திருவடியின் மீது சிலம்புகள் எல்லாத் திக்குகளிலும் செல்லுமாறு ஒலிக்க,

3693. அயன்கபா லந்தரித்த விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத் தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும் பாததா மரைசூட.

தெளிவுரை : பிரம கபாலத்தை எடுத்த இடக்கையினால் அணைத்த விளங்கும் ஒளியுடைய மூவிலைச் சூலமானது அழகிய தோள்களில் விளங்க, மலிந்து வீசும் ஒளியுடைய வலத் திருக்கையிலே பிடித்த தமருகத்தின் ஒலி ஒலிக்க, முன்னைத் தவத்தால் பயன் பெறும் நிலமும் அடித்தாமரைகளைத் தாங்க,

3694. அருள்பொழியுந் திருமுகத்தில் அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிசேர்ந்தார்.

தெளிவுரை : அருள் பொழியும் திருமுகத்தில் புன்முறுவலானது நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளி வீச, மயக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மும்மலங்களின் வலியையும், போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச, உண்மைப் பொருளை விளக்கும் பெருகும் அன்பு மேலும் மேலும் தழைத்து ஓங்கி இந்த வுலகம் போற்ற, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய தமிழ்நாட்டில் உள்ள திருச் செங்காட்டங் குடியை அடைந்தார்.

3695. தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும் சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம் மனைக்குள்ளா ரோவென்ன.

தெளிவுரை : குறையாத பசியை உடையவரைப்போல், கண்டவர்களைப் பார்த்துச் சிறுத் தொண்டரின் இல்லம் எங்குள்ளது என்று கேட்டு அறிந்து, விரைவில் அங்கு வந்து, சிவபெருமானது தொண்டர்க்கு எந்நாளும் சோற்றை அளிக்கின்ற தொண்டரான வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையைச் சூடிய சிறுத்தொண்டர் இந்த இல்லத்தில் உள்ளாரோ? என்று வினவினார்.

3696. வந்தணைந்து வினவுவார் மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே அகத்துள்எழுந் தருளுமென.

தெளிவுரை : வந்து சேர்ந்து வினவுகின்றவர் மாதவரான அடியவரே என்று எண்ணிச் சந்தனத் தாதியார் என்ற அம்மையார் முன்னால் வந்து அவரது திருவடிகளை வணங்கி, எல்லையில்லாத சிறப்பையுடைய அடியவரைத் தேடும் பொருட்டு அவர் வெளியே சென்றார். எம்மை ஆள்பவரான முதல்வரே ! வீட்டுள் எழுந்தருளுக ! என்று கூற,

3697. மடவரலை முகநோக்கி மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம் என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார் எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலையெய்தி.

தெளிவுரை : (இறைவர்) அந்த அம்மையாரைப் பார்த்துப் பெண்கள் தனியே உள்ள இடத்தில் நாம் தனியே புகமாட்டோம் ! என்று உரைக்க, அதைக் கேட்டு அவர் அங்கிருந்து நீங்கிச் சென்று விடுவார் போல் தோன்றுகின்றார் என்று அச்சம் கொண்டு விரைந்து மனையின் கடமை முற்றும் உடையவரான திருவெண் காட்டு அம்மையார் உள்ளிருந்து மனையின் முன் வந்து,

3698. அம்பலவ ரடியாரை யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங் கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே மிகமகிழ்வர் இனித்தாழார்.

தெளிவுரை : அம்பலமுடைய இறைவரின் அடியார்களைத் திருவமுது செய்விக்கின்ற நியமம் உடைய அவர், அச்செயலை முடிப்பதற்கு, எம் பெருமானே ! இன்று அடியார் எவரையும் காணாமையால் தேடிச் சென்றார். புதிதாய் நீங்கள் எழுந்தருளி வரும் இத்திருக்கோலத்தைக் கண்டால் தம் பேறே என்று மிகவும் மகிழ்ச்சி அடைவார். இனிக் காலம் தாழ்க்க மாட்டார்.

3699. இப்பொழுதே வந்தணைவர் எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர் உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர் தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய இங்கிரோம் என்றருளி.

தெளிவுரை : இப்போதே வந்து சேர்வார். இங்குத் தங்கியிரும் என்று சொல்ல, ஒப்பில்லாத இல்லறத்தைத் தவறாது நடத்துபவரே ! யாம் வடநாட்டில் உள்ளோம். சொல்வதற்குரிய சிறப்புடைய சிறுத் தொண்டரைக் காணும் பொருட்டு இங்கு வந்து அடைந்தோம். எவ்வகையாலும் அவர் இல்லாதபோது இங்கே நாம் இருக்க மாட்டோம் என்று கூறியருளி,

3700. கண்ணுதலிற் காட்டாதார் கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ் இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி யணைந்தருளி அமர்ந்திருந்தார்.

தெளிவுரை : நெற்றிக் கண்ணை மறைத்துக் கொண்டு வந்த அவர், கணபதீச்சரத்தில் அழகிய மலர்களை உடைய திருவாத்தி மரத்தின் கீழ்ச் சென்று அமர்ந்து இருப்போம். அங்கு நாம் இருக்கும் தன்மையினைச் சொல்வீராக ! என்று கூறி, இறைவர் திருவாத்தி மரத்தின் அடியைச் சேர்ந்து, விரும்பி எழுந்தருளியிருந்தார்.

3701. நீரார் சடையான் அடியாரை நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத் தொருவர் வந்த படிபகர்ந்தார்.

தெளிவுரை : சிறப்புடைய தவத்தையுடைய சிறுத்தொண்டர் கங்கையாற்றையுடைய சடையுடைய சிவபெருமானின் அடியவரை எங்கும் தேடிக்காணாது மீண்டும் இல்லத்தை அடைந்து, அளவு கடந்த இன்ப மனைவியார்க்கு அதைச் சொல்லி வருந்த, அவரும், உலகம் அன்பு கூறும் கோலம் கொண்ட ஒருவர் அங்கு வந்த விதத்தை அவர்க்குச் சொன்னார்.

3702. அடியேன் உய்ந்தேன் எங்குற்றார் உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர் வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம் சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்இருந்தார் கணப தீச்சரத்து.

தெளிவுரை : நான் வாழ்ந்தேன் ! அவர் எங்கு இருக்கின்றார்? சொல்வாயாக ! என்று வினவினார். அதைக் கேட்ட அந்த அம்மையார் கூறலானார். வடித்த கூர்மையான சூலத்தையும் கபாலத்தையும் ஏந்தியவர் நாம் வட நாட்டில் உள்ளோம் ! என்றார். அவர் வளமான துடியை ஒரு கையில் பிடித்த வயிரவச்சங்கமர் நாங்கள் இல்லத்தில் எழுந்தருளி இருக்குமாறு சொல்லி வேண்டவும், இங்குத் தங்கி இராமல் போய்க் கணபதீச்சரக்கோயிலில் மணம் பொருந்திய திருவாத்தி மரத்தின் நிழலில் இருந்தார்.

3703. என்று மனைவி யார்இயம்ப எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.

தெளிவுரை : என்று மனைவியார் கூற, அதைக் கேட்ட சிறுத்தொண்டர், மேன் மேல் எழுந்த விருப்பினால் விரைவாகப் போய்ப் பார்த்து அவருடைய திருவடிகளை வணங்கி நின்றார். அவ்வாறு வணங்கி நின்ற சிறுத்தொண்டரைப் பார்த்து, நீவிர் தாமோ பெரியவராய்ச் சிறுத் தொண்டர் எனச் சொல்லப்படுபவர்? எனத் திருவாய் மலர்ந்தருளி வினவ, அவர் இறைவரை வணங்கிச் சொல்லலானார்.

3704. பூதி யணிசா தனத்தவர்முன் போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன் காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.

தெளிவுரை : திருநீற்றுத் திருத்தொண்டர்களின் முன் போய்த் துதிக்கவும் நான் தகுதியற்றவனாயினும் சிவனடியார்கள் தங்கள் அருளால் அப்பெயருடையவன் நான் ! எனக் கூறுவர். குற்றத்தை இல்லையாகச் செய்யும் அடியவரை அமுது செய்விப்பதற்காகப் பழைய பதியில் பெரு விருப்பத்தால் எங்கும் தேடியும் யாரையும் காணவில்லை. முன்பு செய்த தவப்பயனால் உம்மைக் கண்டேன்.

3705. அடியேன் மனையில் எழுந்தருளி அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம் நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரிதொண்ணா தென்று மொழிந்தருள.
 
தெளிவுரை : அடியவனான என் இல்லத்தில் தாங்கள் வந்து திருவமுது செய்தல் வேண்டும் ! என்று சிறுத்தொண்டர் வேண்டினார். நீண்ட திருமாலும் அறிய மாட்டாத அந்த அடியவர் தாம், விளங்கும் தவத்தை உடையவரே ! உம்மைக் காண்பதற்காக வந்தோம் ! வடநாட்டில் உள்ளோம். எம்மை அன்புடன் உண்ணச் செய்ய இயலாது ! அது அரியதாகும் ! ஆதலால் உம்மால் செய்ய ஒண்ணாது என்று (கூறியருளினார்.) கூறியருள,

3706. எண்ணா தடியேன் மொழியேன்நீர் அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர் அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம் அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும் அருமை யில்லை யெனவுரைத்தார்.

தெளிவுரை : அடியேன் நன்றாக எண்ணிப் பாராது கூற மாட்டேன். கண் நிறைந்த அழகையுடைய நிறை தவத்தவரே ! தாங்கள் திருவமுது செய்யும் இயல்பை அமைப்பதன் பொருட்டு விரைந்து கூறியருள் செய்வீராக ! குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடிய இறைவரின் அடியார்கள் கிடைக்கப் பெற்றால் தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும். எனக்கு அருமை இல்லை, என்று சொன்னார்.

3707. அரிய தில்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப் பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால் ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.

தெளிவுரை : அரியது இல்லை என்று சிறுத்தொண்டர் கூறக் கேட்ட பொழுதில், அழகைச் சொரிகின்ற பெரிய வயிரவக் கோலத்துடன் வந்துள்ள இறைவர், அன்புத் தொண்டரே ! நாம் மூன்று இருதுக் காலம் கழித்தால் ஒரு போது பசுவை வீழ்த்து அமுது இட உண்பது வழக்கமாகும். அங்ஙனம் உண்பதற்குரிய நாளும் இன்றே ஆகும். ஆனால் அவ்வாறு உண்பித்தல் உமக்கு அருமையுடையதாகும் ! என அருள் செய்தார்.

3708. சால நன்று முந்நிரையும் உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக் கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால் யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன் என்று மொழிந்து கைதொழுதார்.

தெளிவுரை : அதைக் கேட்ட சிறுத்தொண்டர் மிகவும் நல்லது ! நான் ஆடு, எருமை, பசு என்ற மூன்று நிரைகளையும் பெற்றிருக்கின்றேன். எனக்கு இங்குக் குறைவில்லை ! நஞ்சை உண்ட சிவபெருமான் அன்பர் உமக்கு அமுதம் ஆகின்ற அந்தப் பசு தான் இன்னது என்று தாங்கள் கூறியருள் செய்தால், அடியேன் விரைவாகச் சென்று உணவு அமைத்து உணவுக்குரிய காலம் தவறாது வருவேன் ! எனக் கூறிக் கை தொழுதார்.

3709. பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில் உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற் போலும் புகல்வ தொன்றென்றார்.

தெளிவுரை : அடிமைப் பண்பு மிகுந்த சிறுத்தொண்டன் அன்பைக் கண்டு பயிரவச் சங்கமராய் வந்த சிவபெருமானும் அடியாரிடம் அன்பு உடையவரே ! நாம் உண்பதற்குக் கொல்லப்படுகின்ற பசுவும் மானிடப் பசுவாகும். ஐந்து வயதாயும் உறுப்பில் களங்கம் இல்லையேல். அதுவே யாம் உண்பதாகும். நோய் செய்யும் புண்ணிலே வேலைப் பாய்ச்சியதைப் போல் மேலும் கூறக் கூடியது ஒன்றுண்டு என்று உரைத்தார்.

3710. யாதும் அரிய தில்லைஇனி ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும் பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.

தெளிவுரை : அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எனக்கு ஏதும் அரியது இல்லை ! இனி விரைவாய்க் கூறியருளுக ! என்று (உரைத்தார்.) உரைக்க, இறைவரும், ஒரு குடும்பத்துக்கு ஒரு நல்ல சிறுவனாய் ஒரே மகனாக உள்ள அவனைத் தந்தை அரியவும் அப்போது தாய் பிடிக்கின்ற போது, இருவரும் தமக்குள் உள்ளம் மகிழ்ந்து குற்றம் இல்லாது அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாகும் என உரைத்தருளினார்.

3711. அதுவும் முனைவர் மொழிந்தருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான் அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப் பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம் பணிந்து மனையின் வந்தணைந்தார்.

தெளிவுரை : அதையும் முதல்வர் உரைத்தருளக் கேட்ட சிறுத் தொண்டர், எம் இறைவரான தாங்கள் திருவமுது செய்யும் பேற்றைப் பெற்றால் எனக்கு இதுவும் அரியதன்று, எனக் கூறி, விரைவாக அவரிடம் விடை பெற்று மிக்க மகிழ்ச்சியால் ஆசையோடும் அவரது தேன் பொருந்திய மென்மையான தாமரை போன்ற பாதங்களை வணங்கிச் சென்று தம் வீட்டை வந்தடைந்தார்.

3712. அன்பு மிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங் கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப் பெருகுந் தவத்தோர் செயல்வினவ.

தெளிவுரை : அன்புமிக்க பெருங் கற்பையுடைய பெண்ணான திருவெண்காட்டு அம்மையார் வீட்டின் முன் வாயிலில் வந்து, சிறுத் தொண்டரின் வரவை எதிர்நோக்கி முன் நின்று, இன்பம் மிக மலர்ந்திருந்த அவரது முகத்தைப் பார்த்து, அவருடைய திருவடிகளில் வணங்கிப் பின்பு தம் கணவரான அவரை முகம் நோக்கித் துறவியைப் பற்றி வினவினார்.

3713. வள்ள லாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா அரிந்து சமைக்கப் பெறினென்றார்.

தெளிவுரை : வள்ளல் தன்மையுடைய சிறுத் தொண்டரும் மனைவியான திருவெண்காட்டு அம்மையாரைப் பார்த்து, வந்திருந்த துறவியார், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாக ஐந்து வயது உள்ளவனாய் உறுப்புகளில் குறைவு ஒன்றும் இல்லாதவனாகிய மைந்தனைத் தாய் பிடிக்கத் தந்தை மகிழ்வுடன் அரிந்து அமுது சமைக்கப் பெற்றால், உள்ளம் மகிழும்படி உணவு உண்டருள இசைந்துள்ளார் ! என்று இயம்பினார்.

3714. அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர் அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம் ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு எவ்வா றென்று வணங்குதலும்.

தெளிவுரை : அரிய கற்பையுடைய மனைவியார், அங்ஙனம் சிறுத் தொண்டர் உரைக்க, அவரைப் பார்த்து, அந்த அம்மையார் உரைப்பாராய் பெருமையுடைய வயிரவத் தொண்டர் உணவு உண்ணப் பெறுவதற்கு இங்கு உரிய வகையினால் அமுது அமைப்போமானால் ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாகி வரும் அந்தச் சிறுவனை நாம் பெறுவது எங்ஙனம்? எனக் கூறி வணங்கவும்.

3715. மனைவி யார்தம் முகநோக்கி மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய் அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான் தன்னை அழைப்போம் யாம்என்றார்.

தெளிவுரை : அதைக் கேட்ட சிறுத் தொண்டர், மனைவியாரின் முகத்தைப் பார்த்து, இத்தகைய தன்மை உடைய அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவு நிதியம் அளித்தால் கொடுப்பவரும் இரப்பர். ஆனால், நேரே எதிரில் நின்று தம் மைந்தனைத் தந்தையும் தாயும் அரிபவர் இவ்வுலகத்தில் இல்லை ! எனவே, இனியும் காலம் தாழ்த்தாது இங்கு என்னை உய்யச் செய்வதற்கு நீ பெற்ற மகனை நாம் இதன் பொருட்டு அழைப்போம் ! என உரைத்தார்.

3716. என்று கணவர் கூறுதலும் அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப் பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு வாரும் என்றார் திருவனையார்.

தெளிவுரை : என்று கணவர் உரைக்கவும், அதற்கு அந்த அம்மையாரும் சம்மதித்து, எம் இறைவரின் தொண்டர் இன்று காலத் தாழ்வின்றி உணவு உண்ணப் பெற்று இங்கு அவருடைய மகிழ்ச்சி பொலியும் திருமுகத்தை நாம் காண்பது செய்யத்தக்க கடமையாகும் ! என விரும்பி, இலக்குமியைப் போன்ற திருவெண்காட்டு நங்கையார் கணவரைப் பார்த்து நம்மைக் காக்க வரும் மணி போன்ற மகனைப் பள்ளியில் போய் அழைத்துக் கொண்டு வாருங்கள் ! என்று உரைத்தார்.

3717. காதல் மனையார் தாங்கூறக் கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில் உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.

தெளிவுரை : அன்பை யுடைய மனைவியார் மேற்கூறியபடி உரைக்க, கணவனாரான சிறுத் தொண்டரும், குற்றம் நீங்கப் பெற்ற எல்லாப் பேறும் அப்போதே பெற்று விட்டவரைப் போல் மகிழ்ந்து, இறைவருக்கு அங்குத் திருஅமுதமாக ஆக்குவதற்கு, நல்ல மென்மையான மழலை மொழி பயிலும் மைந்தர் கல்வி பயிலச் சேர்ந்துள்ள பள்ளியினின்றும் உடன் கூட அழைத்து வருவதற்கு விரைவாய்ப் போனார்.

3718. பள்ளி யினிற்சென் றெய்துதலும் பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.

தெளிவுரை : சிறுத்தொண்டர் பள்ளியை அடையவும், காலில் அணிந்த சதங்கை மணிகள் ஒலிக்கப் பிள்ளை அவர் எதிரே ஓடி வந்து தழுவிக் கொள்ள, அவரை எடுத்துத் தோள் மீது வைத்துப் பொருந்தும்படி அணைத்துக் கொண்டு மீண்டு வந்து தம் இல்லத்துக்குள் புகுந்திடவும், நற்குலத்தில் தோன்றிய திருவெண்காட்டு நங்கையார், வள்ளலார் சிறுத்தொண்டரின் முன் போய் அம்மைந்தனை எதிரில் தாம் வாங்கிக் கொண்டு,

3719. குஞ்சி திருத்தி முகந்துடைத்துக் கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார் பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய் தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.

தெளிவுரை : அம்மைந்தனின் தலைமயிரைத் தாம் திருத்தி முகத்தைத் துடைத்துக் கடுக்கனிலும் அரைஞாணிலும் படிந்த தூசியைப் போக்கி, அணிந்த கலவைச் சாந்து அழிந்ததற்கு வருந்திக் கண்ணில் அணிந்த மையினையும் கண்ணில் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் நிற்குமாறு ஒதுக்கிப், பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையுடைய அடியை யுடைய அம்மையார், அன்புடன் எடுத்து நீராட்டிக் குறையாத கோலத்தைச் செய்து, கணவரான சிறுத் தொண்டரின் கையிலே அம்மைந்தனை அளித்தார்.

3720. அச்சம் எய்திக் கறியமுதாம் என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண் அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர் புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின் மேவார் வேறு கொண்டணைவார்.

தெளிவுரை : திருத்தொண்டர்க்கு ஆக்கும் அமுதுக்கு உதவும் பண்டம் என்பதால் அச்சம் கொண்டு அரிய மைந்தனை உச்சி மோவார்; மார்பில் அணைத்து முத்தம் தாரார்; குற்றம் இல்லாத திருத்தொண்டராம் நாயனார் புனிதரான அடியவருக்குக் கறியை ஆக்குதற்கு விரும்பும் உள்ளத்தால், சமையல் அறையில் மேவாராகி வேறு தனியிரிடத்திலே கொண்டு செல்பவராய்.

3721. ஒன்று மனத்தார் இருவர்களும் உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.

தெளிவுரை : ஒன்றுபட்ட உள்ளம் கொண்ட அந்த இருவரும் உலகத்தவர் இதன் உண்மை இயல்பை அறிய மாட்டார் என்று நினைத்து மறைவான இடத்தை எய்திப் பிள்ளையைப் பெற்ற தாயார் திருவெண்காட்டு நங்கையார் செழுமையான கொள்கலங்களை நன்றாய்க் கழுவி எடுத்துக் கொண்டு செல்ல, நல்ல மைந்தனாரை எடுத்து உலகியலை முற்றும் வென்ற தந்தையாரான நாயனார் தலையைப் பிடித்துக் கொள்ள மெய்த் தாயாரான அம்மையார் விரைந்து,

3722. இனிய மழலைக் கிண்கிணிக்கால் இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங் கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலையரிவார்.

தெளிவுரை : இனிய மழலை ஒலி தரும் கிண்கிணி அணிந்த கால்கள் இரண்டையும் மடியின் இடையே இடுக்கிக் கொண்டு கொவ்வைக் கனியைப் போன்ற வாயையுடைய மகனின் கைகள் இரண்டையும் கையால் பிடித்துக் கொள்ள, மைந்தனும் தம் பெற்றோர் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள் என்று மகிழ்ந்து நகைக்க, ஒப்பில்லாத பெருமையுடைய மகனாரைத் தந்தையான சிறுத்தொண்டர் வாள் கருவியால் தலையை அரியலானார்.

3723. பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த் தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர் மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான் என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை யெய்தி அரிய வினைசெய்தார்.

தெளிவுரை : தந்தையார் ஒப்பில்லாத மகன் மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான் என்று விளங்கிப் பொருந்திய மகிழ்ச்சியடைய, அவருடைய மனைவியாரான அம்மையாரும் கணவனாரின் அரியவுயிரை எனக்கு இம் மைந்தன் அளித்தான் ! என்று மிகவும் மனம் மலர்ந்து மகிழ, இங்ஙனம் இருவரும் உள்ளம் பெரிய மகிழ்ச்சி பொருந்தி அரிய செயலைச் செய்தனர்.

3724. அறுத்த தலையின் இறைச்சிதிரு வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத் தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம் மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.

தெளிவுரை : அறுத்து எடுத்த தலையின் இறைச்சி உணவுக்கு ஆகாது எனக் கழித்து, அதை மறைத்து ஒதுக்கும் பொருட்டுக் சந்தனத் தாதியார் என்ற மங்கையின் கையிலே அளித்து, மற்ற உறுப்புக்களின் இறைச்சி எல்லாவற்றையும் கொத்தியும் அறுத்தும் எலும்பினுள்ளே உள்ள மூளைப் பகுதியைத் திறந்து எடுத்து இட்டும் கறியாக்குவதற்கு வேண்டும் பலவகையான காய் வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் அமுது சமைப்பாராய்.

3725. மட்டு விரிபூங் குழன்மடவார் அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங் கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.

தெளிவுரை : மணம் கமழும் கூந்தலையுடைய அம்மையார் அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பிலே ஏற்றி, உள்ளம் மகிழ்ந்து சமைத்த கறியைப் பக்குவம் அறிந்து அடுப்பினின்றும் இறக்கி வைத்து, வேறு ஒரு பாத்திரத்தில் உரிய பண்டங்களால் தாளித்து, மேலும் பலகறிகளையும் சமைத்து, நன்றாகச் சோற்றையும் விரைவில் சமைத்து, தாம் சமைத்து முடித்ததைத் தம் கணவனார்க்கு உரைத்தார்.

3726. உடைய நாதர் அமுதுசெய வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம் விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ் இருந்த புனிதர் முன்சென்றார்.

தெளிவுரை : ஆளுடைய இறைவர் திருவமுது செய்வதற்குச் சொன்னபடியே அமைத்ததற்குப் பெற்ற மகிழ்ச்சி முன் இருந்ததை விட மிக்க ஆசை மேலும் மேலும் பெருகி ஆனந்தம் அடைந்து, காளைமீது வருபவருமான சிவபெருமானின் தொண்டரான சிறுத்தொண்டர் விரைந்துபோய் மென்மையான பூக்களின் பக்கங்களில் வண்டுகள் ஒலித்தற்கு இடமான திருவாத்தியின் கீழே வீற்றிருந்தருளிய தூயவரான வயிரவரிடம் சென்றார்.

3727. அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத் தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.

தெளிவுரை : இறைவரின் திருமுன்பு சேர்ந்து வணங்கி அன்பரான சிறுத் தொண்டர் சொல்லத் தொடங்கி, அடியேனிடத்து எழுந்தருளித் தாங்கள் அமுது செய்தருள வேண்டும் என்று அன்பு செய்து விரும்பி வேண்டினேன். வேண்டிட அதன் பொருட்டுத் தாங்கள் காலம் தாழ்க்க இது வரை காத்திருக்க வேண்டி வந்தது. என்றாலும், தங்கள் ஆணையின்படி சமைத்துள்ளேன் ! அடியவனான என் விருப்பப்படி எழுந்தருள வேண்டும் என்று சொல்லி, மேலும் கூறுபவராய்.

3728. இறையுந் தாழா தெழுந்தருளி அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக் கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற் போலக் கொண்டு மனைபுகுந்தார்.

தெளிவுரை : இனிச் சற்றும் காலம் தாழ்த்தாது தாங்கள் எழுந்தருளி உணவு உண்டருளல் வேண்டும் ! எனக் கூறி வணங்க, கழுத்தில் உள்ள நஞ்சினை மறைத்தும், நெற்றியில் உள்ள கண்ணை மறைத்தும் வந்தவரான இறைவர், நிறைந்த பெருமையுடைய சிறுத்தொண்டரே ! செல்வீராக ! என்று அருள, வறியவன் ஒருவன் சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டையும் பெற்று மகிழ்ந்தாற் போல, உடன் அழைத்துக்கொண்டு தம் இல்லத்துக்குள் புகுந்தார்.

3729. வந்து புகுந்து திருமனையின் மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின் தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக் கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.

தெளிவுரை : அங்ஙனம் வந்து புகுந்து தம் இல்லத்தில், மனைவியார் தாம் வயிரவ அடியாரை முன்பு வந்து எதிர் கொண்டு போய்த் திருவடிகளில் விழுந்து வணங்கி, முற்றும் அழகுபடுத்திய அந்த இல்லத்தில் மணம் கமழும் மலர் மாலைகளும் முத்தால் இயன்ற மாலைகளும் தொங்க வைத்து, மணமுடைய மலர் மாலைகள் பரப்பிய இருக்கையான ஆசனத்தை அமைத்துக் காட்டி அமரும்படி செய்து, மணமுடைய நீர் நிறைந்த கரகத்தை எடுத்து ஏந்தி நின்று நீரை வார்க்க,

3730. தூய நீரால் சிறுத்தொண்டர் சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள் தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள் முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.

தெளிவுரை : அங்ஙனம் மனைவியார் வார்த்த தூய்மையான நீரால் சிறுத்தொண்டர் இறைவரின் திருவடிகளை விளக்கி, அங்ஙனம் விளக்குவதால் பெற்ற தூய நீரைத் தலைமீது நிறையத் தெளித்துக் கொண்டு, இன்பம் பொருந்திய மனையின் எப்பாகத்திலும் வீசி இறைத்து, மணமுடைய மெல்லிய மலர்களால் அருச்சித்துச் சந்தனக் கலவை சாத்திப் பொருந்தியவாறு தூபதீபம் காட்டி, இவை முதலான பூசை விதிகளை எல்லாம் செய்து வணங்கலானார்.

3731. பனிவெண் திங்கள் சடைவிரித்த பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன் வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்கவென.

தெளிவுரை : குளிர்ந்த பிறைச்சந்திரன் சூடிய சடையை விரித்த, பூச்சூடிய தலைமயிரை உடைய வயிரவராம் தூய பெருமானைச் சோற்றையும் கறிவகைகளையும் பரிமாறும் வகையை அழகிய மாதராரும் கணவனாரும் வணங்கி இன்னவாறு என்று அருள் செய்ய வேண்டும் என்று வேண்ட, அவர் தாம் இனிய சோறுடன் கறிவகைகளையும் ஒரு சேரப் பரிமாறுவீராக ! என்று சொல்ல,

3732. பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச் செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க விமலர் பார்த்தங் கருள்செய்வார்.

தெளிவுரை : பண்பு விளங்குமாறு உண் கலத்தை விளக்கி அதனைப் பாவாடையின் மேல் வைத்து, அமுது வகைகள் வெவ்வேறாக நன்கு தெரியும்படி நெல்லரிசியான செழும் சோற்றையும் கறி வகைகளையும் வரிசையாய் முன்னே வைத்து, அந்தப் பரிகலத்தை எடுத்து நிலையான முக்காலியின்மேல் விரித்த வெண்மையான ஆடைமீது வைக்க, குற்றம் அற்றவரான இறைவர் பார்த்து, அப்போது கூறலானார்.

3733. சொன்ன முறையிற் படுத்தபசுத் தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம் உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.

தெளிவுரை : யாம் கூறிய முறையிலே படுத்த பசுவின் தொடர்ந்து உறுப்புகள் எல்லாவற்றையும் கொண்டு பொருந்தும் சுவை பெறச் சிறப்பாய்ச் சமைத்தீரோ? என்று வினவினார். வினவ, அன்னப்பறவை போன்ற அம்மையார், தலை இறைச்சி உண்பதற்கு ஆகாது! என்று நினைத்து அதனை நீக்கினோம், எனக் கூறினார். அடியார்களின் துன்பத்தையெல்லாம் நீக்குபவரான இறைவர் அதனையும் யாம் உண்போம்! எனக் கூறினார்.

3734. சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர் மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும் பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.

தெளிவுரை : உள்ளம் கலங்கிச் சிறுத்தொண்டர் மனைவியாருடன் மனம் கலங்க, சந்தனத்தார் என்ற தாதியார், அந்தத் தலையின் இறைச்சியானது அருள் செய்ய வந்த திருத்தொண்டர் உணவு உண்ணும்போது நினைக்க நேரிடும் என்று எண்ணியே எச்சரிக்கையாய் முன்னமே அதனைக் கறியமுதாக அமைத்துள்ளேன் ! எனக் கூறி எடுத்துக் கொடுக்கப் பார்த்து அவர்கள் முகம் மலர்ந்தனர்.

3735. வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின் வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர் என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய இடையூ றிதுவோ வெனநினைவார்.

தெளிவுரை : சந்தனத்தார் தந்த தலை இறைச்சியைப் பெற்று மகிழ்ந்து பரிமாறிய பின்பு, வணங்கி நின்ற தொண்டரைப் பார்த்து, இப்போது தனித்து உண்ண எமக்கு இயலாது. சிவனடியார் எவரேனும் இப்பக்கத்தில் இருக்கக் கூடியவரை அழைத்து வருவீராக ! என்று வயிரவர் ஆணையிட, (சிறுத்தொண்டர்) மனம் வருந்திக் கெட்டேன் இவர் உணவு உண்பதற்கு இதுவோ இடையூறாய் வருவது? என நினைவாராகி.

3736. அகத்தின் புறத்துப் போயருளால் எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப் பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.

தெளிவுரை : இல்லத்தின் வெளியே போய்த் தேடியும், இறைவன் திருவருட் செயலால் எங்கும் அடியவரைக் காணாமல் முகத்தில் மிகவும் வாட்டம் கொண்டு திரும்பி வந்து முதல்வருக்குச் சொல்வாராய், இகத்தினும் பரத்தினும் இனியவரான சிவனடியார்களைத் தேடியும் காணேன். நான் அறியேனாயினும் உலகத்தில் திருநீறு இடுவார்களைப் பார்த்த நானும் திருநீற்றை இடுவேன் ! எனத் தாழ்ந்து வணங்கினார்,

3737. உம்மைப் போல நீறிட்டார் உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட் டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின் மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர் உண்ணப் புகலுந் தடுத்தருளி.

தெளிவுரை : அதைக் கேட்ட வயிரவர் உம்மைப் போல் திருநீற்றைச் சிறப்பாய் இட்ட அடியாரும் உள்ளனரோ? நீவிரே, என்னுடன் இருந்து உண்பீராக! என்று சொல்லி, செம்மை பொருந்திய கற்பையுடைய திருவெண்காட்டு நங்கையை நோக்கிப் பரிகலம் திருத்தி விரும்பத்தக்க இறைச்சியும் சோறும் ஆகிய இவற்றின் மற்றப் பகுதியை இவர்க்கும் பரிமாறுவாராக! என்று இறைவர் ஆணையிட, அவரும் அவ்வாறே பரிமாறினர். தம்மை உண்பிக்க வேண்டி அவர் விரைந்து உண்ணத் தொடங்கவும் அப்போது தடுத்தருளி,

3738. ஆறு திங்கள் ஒழித்துண்போம் உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன் னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க் கிப்போ துதவான் அவனென்றார்.

தெளிவுரை : ஆறு மாத காலம் கழிய நாம் ஒரு முறை உண்போம். நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர் ! அங்ஙனம் இருந்தும் நாம் உண்பதற்கு முன் நீவிர் உண்ணப் புகுந்ததற்குக் காரணம் யாது? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்றீரானால் அவனையும் இப்போது அழையும் ! என்று வயிரவர் கூற, அங்ஙனம் கூறிய அந்தமும் ஆதியும் இல்லாத இறைவர்க்குச் சிறுத்தொண்டர் அவன் இப்போது இங்கு உதவமாட்டான் ! என்று விடை உரைத்தார்.

3739. நாம்இங் குண்ப தவன்வந்தால் நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார் தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும் என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும் புறம்போ யழைக்கப் புகும்பொழுது.

தெளிவுரை : அவன் இங்கு வரின் நாம் உண்ண முடியும். ஆதலால் வருகையை நாடி அழையும் ! என்று இறைவர் அருளினார். சிறுத்தொண்டர் அதைத் தவிர்க்க இயலாதவராகித் தலைவரான இவ்வடியார் உணவு உண்டருள இங்கு நாம் என்ன செய்தால் முடியும்? என்று ஏங்குவார். விரைவாய் எழுந்து இறைவரின் அருள் ஆணை வழியிலே நின்று, பூ முடித்த மெல்லிய மலர்களைச் சூடிய கூந்தலையுடைய அம்மையாருடனே, வீட்டின் வெளியே போய், மகனை வா! என அழைக்கத் தொடங்கும் போது,

3740. வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர் மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண அழைக்கின் றார்என்று ஓலமிட.

தெளிவுரை : உலகத்தில் என்றும் நிலை பெறும் புகழை யுடைய சிறுத்தொண்டர் மகனே ! வா ! எனக் கூவி அழைத்தார். தலைவரின் ஆணைப்படி அதனைத் தலையால் தாங்கி ஒழுகுவாராய், அம்மையார் தாமும் அழைக்கின்றவராய் சிவந்த மணியே ! சீராளா ! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார். வா ! என்று அழைத்து ஓலமிட்டார்.

3741. பரம ரருளாற் பள்ளியினின் றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன் தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார் கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.

தெளிவுரை : அச்சமயத்தில் இறைவர் அருளால் அழைக்கும் ஒலிகேட்டுப் பள்ளிக் கூடத்தினின்றும் ஓடி வருபவரைப் போல எதிரே ஓடிவந்த ஒப்பில்லாத அழகுடன் விளங்கிய ஒப்பில்லாத மகனாரை அம்மையார் எடுத்துத் தழுவிக் கொண்டு தம் கையால் முன்பு அணைத்துக் கணவனின் கையில் தர, முப்புரங்களையும் எரித்த இறைவனின் தொண்டர் உணவு உண்ணப் பெறும் பேற்றைப் பெற்றோம் என்று மகிழ்ச்சியுடன் விளங்கினார்.

3742. வந்த மகனைக் கடிதிற்கொண் டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங் கலத்திற் காணார் வெருவுற்றார்.

தெளிவுரை : அங்ஙனம் வந்த மகனை அழைத்துக் கொண்டு இறைவரை உண்ணச் செய்யும் பொருட்டு விரைந்து வந்தார். அதற்கு முன்பே அந்த வயிரவராக வந்த முதல்வர் அங்கு நின்றும் மறைந்தருளினார். அவரைக் காணாமல் உள்ளம் கலங்கித் திகைப்படைந்தார்; விழுந்தார்; உள்ளம் அழலப் பெற்றார்; வெந்த இறைச்சிக் கறியையும் பரிகலத்தில் காணாதவராய்த் திடுக்கிட்டார்.

3743. செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத் தனய ரோடுந் தாமணைவார்.

தெளிவுரை : சிவந்த மேனியும் கரிய முடியும் செழிய போர்வையும் கொண்ட வயிரவர் நாம் உய்யும்படி உணவு உண்ணாமல் எங்கே ஒளிந்தார்? என்று தேடியவராகி, மயங்கி வெளியே வர, மறைந்தருளிய அவ்வயிரவர் தாமே, மலை மகளாரான உமையம்மையாருடனும் சரவணப் பொய்கையிலே வளர்ந்த திருமகனாரான முருகப் பெருமானோடும் அணைவாராகி.

3744. தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில் தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள் முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப் பரந்த கருணை நோக்களித்தார்.

தெளிவுரை : இறைவர் சிவபூதக் கணத்தலைவரும் முனிவரும் தேவரும் வித்தியாதரரும் முதலாய் உள்ளவர் துதி செய்ய, இனிய கறியையும் உணவையும் அமைத்த அவர்கள் காணும்படி, நீண்ட வான வெளியில் ஒப்பில்லாத வெண்மையான காளையின் மீது வெளிப்பட்டு எழுந்தருளிக் குளிர்ந்த வெண்மையான சந்திரனைச் சூடிய திருமுடி அசையப் பரந்த அருள் நோக்கத்தை அருளினார்.

3745. அன்பின் வென்ற தொண்டரவர்க்கு அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோ ரவருக் கருள்புரிவார்.

தெளிவுரை : அன்பின் உறைப்பினால் பாச உலகியலை வென்ற சிறுத்தொண்டரும் அவருக்கேற்ப அமைந்த அம் மனைவியாரும் மைந்தரும் தம் முன்பு வெளிப்பட்டுத் தோன்றிய பெருவாழ்வான சிவபெருமானின் காட்சியை முற்றும் கண்டு தம் வயமிழந்து, அக்காட்சியில் வயமாய் நின்று, எலும்பும் உள்ளமும் கரைந்து உருக விழுந்தனர்; எழுந்தனர்; துதித்தனர். அதன் பின்பு இறைவர் அவர்களுக்கேற்றபடி உள்ள தகுதியால் பெரியோரான அவர்களுக்கு அருள் செய்வாராய்.

3746. கொன்றை வேணி யார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம் விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி யிருக்க வுடன்கொண் டேகினார்.

தெளிவுரை : கொன்றை மலரைச் சூடிய சடையை உடைய சிவபெருமானும் அவரது ஒரு பாகத்தை இடமாகக் கொண்ட உமையம்மையாரும் வெற்றி பொருந்திய நீண்ட வேல் ஏந்திய மைந்தரான முருகப் பெருமானும் தம் மணமுடைய தாமரை மலர் போன்ற சேவடிகளின் கீழ் விழுந்து எழுந்து துதித்து நின்ற சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டு நங்கையாரையும் மகனாரான சீராள தேவரையும் சந்தனத் தாதியாரையும் நித்தியமாய் என்றும் தம்மைப் பிரியாமல் வணங்கியிருக்கும்படி, தம் சிவலோகத்துள் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

3747. ஆறு முடிமேல் அணிந்தவருக் அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன் தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள் தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.

தெளிவுரை : கங்கையாற்றைச் சடையில் அணிந்த இறைவர்க்கு அடியவர் என்று கறியமுதாகத் தம் களங்கம் அற்ற சிறந்த மகனாரை அரிந்து, அங்கு அமுது ஊட்ட வரும் அப்பெரும் பேற்றைப் பெற்றவரான சிறுத்தொண்ட நாயனாரின் தம் திருவடிகளை எம் தலையின் மீது தாங்கிக் கொண்டு வணங்கி அத்துணையால், மற்ற உயிர்கள் எல்லாம் வெவ்வேறாகப் பேசும் மொழிகளை எல்லாம் அறியும் தன்மையினால் கழறிற்றறிவார் என்ற பெயரைப் பெறும் நாயனாரின் பெருமையைக் கூறுவோம்.

சிறுத்தொண்ட நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

43. கழறிற்றறிவார் நாயனார் புராணம் (சேரமான் பெருமான் நாயனார்)

மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும். எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அந்நகர் செய்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். திருவஞ்சைக்களத்தில் உள்ள சிவபெருமானுக்கு நாள்தோறும் தொண்டுகள் புரிந்து வருவதையே தனது பணியாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அச்சமயம் கொடுங்கோளூரை ஆண்டு வந்த மன்னன் செங்கோற்பொறையன் பதவி என்ற பட்டத்தை உதறி துறவறம் பூண்டான். அதன் பிறகு அமைச்சர்கள், நன்கு ஆராய்ந்து பெருமாக்கோதையாரையே அரசனாக்குவது என்ற முடிவிற்கு வந்தனர். ஒருநாள் அமைச்சர்கள் அரச மரியாதையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருவஞ்சைக் களத்தை அடைந்தனர். பெருமாக் கோதையாரை வணங்கி அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். இறைவன் திருவருளினால் மட்டுமே என்னால் மகுடத்தைச் சூட்டிக்கொள்ள முடியும் என்று கூறினார்.  பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை பகர்ந்தார். அப்பொழுது ஆலயத்திலே ஒரு பேரொளி பிறந்து அருள்வாக்கு எழுந்தது. சேரர் குலக்கொழுந்தே! வருந்தற்க! நீ அரச பதவியை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாயாக! உலகிலுள்ள உயிர்களுக்கு என்றும்போல் தொண்டு செய்து வருவாயாக. விலங்குகள், பறவைகள் போன்ற மற்றெல்லா ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக் கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம் என்று கூறியது.  பெருமாக்கோதை எம்பெருமான் திருவருளோடு கொடுங்கோளூரை அடைந்து , நாளும் கோளும் நன்னிலையுற்ற ஓர் பொன்னாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தக் கூடிய பொன் மணிமுடியினைச் சூட்டிக் கொண்டார். பெருமாக் கோதையார் சேரமான் பெருமாள் ஆனார். மணிமுடிப் பெருவிழா சிறப்புற முடிந்ததும் சேரமான் பெருமான் திருவஞ்சைக்களம் கோயில் சென்று முடிபட நிலத்தில் வீழ்ந்து பெருமானை வணங்கினார்.

பட்டத்து யானை மீது அமர்ந்து நகரை வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வண்ணான் ஒருவன் உவர்மண் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தான். உவர்மண் மேனியில் பட்டு மழை நீரோடும், வியர்வையோடும் கலந்து உலர்ந்து காணப்பட்டது. பவனி வரும் சேரமான் பெருமான் அவ்வண்ணானின் வெண்ணிக் கோலத்தைக் கண்டு, திருவெண்ணீற்றுப் பொலிவுடன் எழுந்தருளும் சிவனடியார் திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ந்தார். யானையின் மீதிருந்து கீழே இறங்கி வண்ணானைத் தொழுது நின்றார். வண்ணான் மன்னருடைய செயலைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினான். அவன் உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு, மன்னரின் பாதங்களைப் பணிந்து, அடியேன் அடிவண்ணான் என்றான். அவன் மொழிந்தது கேட்டு மன்னர் மகிழ்ச்சிப் பெருக்கோடு, அடியேன் அடிச்சேரன் ! நீவிர் திருவெண்ணீற்றை நினைப்பித்தீர்! வருந்தாது செல்வீர்களாக! என்று விடையிறுத்தார். அடியார் மட்டு அரசர் கொண்டுள்ள அளவற்ற அன்பினைக் கண்டு அமைச்சர்களும், மெய்யன்பர்களும் அதிசயித்து அஞ்சலி செய்து வாழ்த்தினர். சேரமான் பெருமான் நாயனார் அரசோச்சும் பொற்காலத்தில் இவரிடம் பாண்டியரும், சோழரும் பெரும் நண்பர்களாயிருந்தனர். அகத்தும், புறத்தும் பகைமையை அறுத்து அறநெறி காட்டும் சிவநெறியை வளர்த்து அரசாட்சி நடத்தி வந்த இவரது காலத்தில் சைவம் தழைத்தது. பக்தி பெருகியது; எங்கும் சுபிட்சம் நீடித்தது. எம்பெருமானைத் தினந்தோறும் சிவாகம முறைப்படி மன்னர் வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபாடு புரிந்து வரும் தொண்டரின் பக்திக்கு கட்டுப்பட்ட அம்பலவாணர் அடியாருக்கு அளவிலா இன்பம் பெருக வழிபாட்டின் முடிவில் தமது அழகிய காற்சிலம்பின் ஒலியினைக் கேட்டு இன்புறுமாறு செய்தார்.

ஒருமுறை மதுரையம்பதியில் பாணபத்திரன் என்று ஒரு புலவன் வாழ்ந்து வந்தான். இவன் எந்நேரமும் இன்னிசைப் பாடலால், அன்போடு சிவனை வழிபட்டு வந்தான். அவனது இசையில் சிந்தை மகிழ்ந்த பெருமான், தம்மைப் போற்றிவரும் பைந்தமிழ்ப் புலவன் பாணபத்திரனின் வறுமையைப் போக்கிப் பெரும் செல்வத்தை அவனுக்கு அளிக்கத் திருவுள்ளம் கொண்டார்.  ஒருநாள் பாணபத்திரன் திருக்கோயிலுள் துயில் கொண்டபோது பகவான் கனவிலே எழுந்தருளி, பாணபத்திரா! அன்பால் என்னைப் பாடிப் பணியும் உன்னை பற்றியுள்ள வறுமையை விலகச் செய்ய எப்பொழுதும் உன்னைப்போல் என் மீது அன்புடைய சேரமானுக்கு ஒரு ஸ்ரீமுகம் எழுதித் தருகின்றோம். காலம் கடத்தாமல் அக்காவலனைச் சென்று கண்டு, வறுமை நீங்கி வருவாயாக! என்று ஆணையிட்டு திருவோலையைத் தந்தருளினார். பாணபத்திரன் கண் விழித்தெழுந்து, இறைவன் அளித்த திருவோலையைக் கண்களிலே ஒற்றிக் கொண்டு கொடுங்கோளூரை அடைந்தார். சேரர் குல மாமணியைக் கண்டு வணங்கி சங்கப் புலவராகிய சோமசுந்தரக் கடவுள் தந்தருளிய திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தார் பாணபத்திரன்! அதனை வாங்கிக்கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், அடியேனையும் ஒரு பொருளாக எண்ணி எம்பெருமான் திருமுகம் கொடுத்தருளினாரே! எம்பெருமான் திருவருள்தானே! என்னே! என்று பாணபத்திரரை வணங்கி விலையில்லாத செல்வங்களை அவர்க்கு அளித்தார். புலவரை ஒரு யானை மீது அமரச் செய்து எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார். பாணபத்திரனும் மதுரை சென்று மட்டற்ற மகிழ்ச்சியோடு மனையறத்தை வளர்த்ததோடு சங்கத் தமிழையும் வளர்த்தார். இவ்வாறு வியக்கத்தக்க முறையில் அரசாண்டு வந்த சேர மன்னர் வழக்கம்போல் ஆலயப் பணியையும் தவறாமல் நடத்தி வந்தார்.

ஒருநாள் நாயனார் சிவ வழிபாட்டை முடித்ததும் வழக்கமாகக் கேட்கும் பரமனின் பாதமணிச் சிலம்பொலி கேட்கவில்லை. மன்னர் வருந்தினார். கண்களில் நீர் வழிய, கரமிரண்டையும் மேலே உயர்த்தி, ஆலமுண்ட அண்ணலே! அடியேன் செய்த பிழை யாது? என்னை ஆளும் ஐயனே! இனியும் இவ்வெளியோன் உயிர் தரிவது யார் பொருட்டு? எதன் பொருட்டு? கூர்வாளும், செங்கோலும் ஏந்தி ஆள்வதை விட கூர்வாளுக்கு இரையாகி மாள்வதே நல்லவழி! எம்பெரும் தலைவா! அடியேன், அறிந்தோ அறியாமலோ பிழை ஏதும் புரிந்திருந்தால் பிழையைப் பொருத்தருளும் என்று பரமனின் பாதகமலங்களைப் பற்றி பணிந்தார். மன்னன் உடைவாளை உருவி மார்பில் நாட்ட முயன்றபோது எம்பெருமான் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு கலீர், கலீர் என்று சிலம்பொலியை மிகுதியாகக் கேட்கும்படிச் செய்தார். நாயனார் எய்திய உவப்பிற்குத்தான் அளவேது! நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார். அருட்கடலே! அன்புப் புனலே ! அமிழ்தம் அளித்த அரசே! வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ? என்று கேட்டார். அப்பொழுது விண் வழியே அசரீரி வாக்கு எழுந்தது. சேரனே! எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம் பலத்தை வழிபட்டு, வண்ணத் தமிழால் பதிகம் பாடினான். தேனென இனிக்கும் அவனது அருட்பாக்களில் அன்பு வயப்பட்டு என்னை மறந்த நிலையில் ஈடுபட்டிருந்தமையால் உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம். இவ்வருள் வாக்கு கேட்டு, சேரமான் பெருமாள் நாயனார், இத்தகைய பெருமைமிக்க அருந் தொண்டனைக் காணப் பெறாத நான் பிறவி எடுத்து என்ன பயன்? போற்றதற்குரிய அப்பெருந்தகையை இக்கணமே நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன். தில்லையம்பதி சென்று ஆடுகின்ற அரனாரைப் போற்றி எம்பெருமானை மதிமயங்க வைத்த ஒப்பற்ற திருத்தொண்டராம் வன்றொன்டனையும் கண்டு வணங்கி வழிபட்டே வருவேன் என்று எண்ணினார். அதற்கு மேல் மன்னன் அரசாள விரும்பவில்லை. ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தான் மன்னன். அரச போகத்தைத் துறந்து திருவஞ்சைக் களத்து அண்ணல் அடிபோற்றி தில்லைக்குப் புறப்பட்டார்.

தில்லை வந்தடைந்த சேரப் பெருந்தகையை, தில்லைவாழ்  அந்தணர்களும், அன்பர்களும், அடியார்களும் வேதம் ஒலிக்க, மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட எதிர்கொண்டு அழைத்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் ஏழு நிலை கோபுரத்தை இசைத் தமிழால் ஏற்றி துதித்து, நிலமுற பணிந்தெழுந்து உள்ளே சென்றார். சிற்றம்பலத்துக்கு முன் சென்று, சித்தம் ஒடுங்க, பக்தி, காதலாகிக் கசிந்துருக, தமிழ்ச் சுவை அருளோடு கூடி ஆறாகப் பெருகிவர, பொன் வண்ணத் தந்தாதி என்னும் பிரபந்தத்தினைப் பாடியருளினார் சேரமான். தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து, அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரவி ஓர் நாள் திருவாரூருக்குப் புறப்பட்டார் நாயனார். வரும் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார். அது சமயம் சுந்தரர், திருநாகைக் காரோணத்திற்கு சென்று அரனாரைத் துதித்துப்பாடி பொன்னும் மணியும், பட்டாடைகளும், கஸ்தூரியும், குதிரையும் பெற்றுத் திருவாரூர் அடைந்திருந்தார். சுந்தரர் தம்மைக் காணவரும் சேரன் பெருமாள் நாயனாரை, அன்புடன் எதிர்கொண்டு அழைத்தார். சேரமான் சுந்தரர் சேவடியைப் பணிந்தெழுந்தார். இவ்வாறு அன்பின் பெருக்கால் சேரமான் பெருமாள் நாயனாரும், தம்பிரான் தோழரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பூண்டு நின்றனர். இவர்களது ஒப்பற்ற தோழமையைக் கண்ட திருவாரூர்த் தொண்டர்கள் சேரமான் தோழன் என்னும் திருநாமத்தைச் சுந்தரருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். சுந்தரர் சேரர் பெருமானை அழைத்துக்கொண்டு தியாகேசப் பெருமானின் தாள் போற்றி திருவாரூர்த் திகழும் மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். சுந்தரரின் செவிக்கினிய கீதத்தில் சேரமான் சிந்தை மகிழ்ந்து பக்தியில் மூழ்கினார். சுந்தரர், மன்னரைத் தமது திருமாளிகைக்கு அழைத்தார். சேரமான் சுந்தரரின் அழைப்பிற்கு இணங்கி சுந்தரர் திருமாளிகைக்குச் சென்றார்.  பரவையார் மன்னவனையும், மணவாளனையும் முகமன் கூறி வரவேற்றாள். மன்னருக்கு மனைவி நல்லாளை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். கணவர் பணித்ததற்கு ஏற்ப, மன்னர்க்கு சிறப்புமிக்க விருந்து சமைத்தாள் பரவையார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து மூழ்கி இன்பம் கண்டனர்.ஒருமித்த மனமுள்ள, இவ்விரு சிவனருட் செல்வர்களும், சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இருவரும் பாண்டிய நாடு செல்லக் கருதி ஒருநாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர்.

பாண்டிய மன்னன், தக்க மரியாதையுடன் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார். பாண்டிய நாட்டிற்கு வந்திருந்த பாண்டியன் மகளை மணம் புரியப்போகும் சோழ அரசனும் உடன் சென்று உபசரித்தார். இப்படி மூவேந்தரும் ஒன்றுபட்டனர். சுந்தரமூர்த்தி நாயனாருடன் சொக்கலிங்கப் பெருமானின் கோயிலுக்குச் சென்றனர். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டியனிடமும், சோழனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் புறப்பட்டார். பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தணைந்தனர். இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். தியாகேசப் பெருமானை வணங்கி மகிழ்ந்த இருவரும் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் விருந்தினராகச் சிலகாலம் தங்கியிருந்து நாடோறும் நலம் தந்த தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். சுந்தரரும், சேரரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், சேரர்கோன் சுந்தரரைத் தம் நாட்டிற்கு வரும்படி வேண்டினார். சுந்தரர் அவரது விருப்பத்தை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு  பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு, சிவத்தொண்டர்களுடன் திருவாரூர் எல்லையை நீத்தார். சுந்தரரும் சேரரும் காவிரிக் கரையோரமுள்ள சிவக் கோவில்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து, எம்பெருமானை வணங்கி வழிபட்டு வெளியே வந்தனர். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருந்த திருக்கண்டியூர் தெய்வத்தைத் தரிசித்தனர். இரு ஞானச் செல்வர்களும், வடகரையில் அமைந்திருக்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினர். அவர்கள் உள்ளத்தில் பக்திப் பெருக்கெடுத்து ஓடியதுபோல், காவிரியிலும், ஓடங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இருவரும் திகைத்து நின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார்.சிவபெருமான் திருவருளால் காவிரி நதி பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது. இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர். மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர். மலைநாட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் பெருமான் நாயனாருடன், கொடுங்கோளூரை வந்தணைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் கூடினர். சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களம் ஆலயத்துள் சென்றார். சுந்தரர், முடிப்பது கங்கை எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். சேரர் பெருமான் சுந்தரரோடு புறத்தே வந்து, அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானை மீது அவரை எழுந்தருள, தாமும் கூடவே எழுந்தருளி திருமாளிகைக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர்; மலர் தூவி வணங்கினர்.

சேரர் பெருமான் சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார். சுந்தரர் இது செய்தல் தகாது என்று தமக்கு பாதபூசை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான் பெருமாள், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும், ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இருந்து வரும் நாளில் அவருக்குத் திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அப்பொழுதே புறப்பட்டார். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை. அவரது விருப்பம்போல் அரசு கட்டிலில் அமர்ந்தார். சேரமான் பெருமாள், சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் மணியும் பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார். திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரர், மிக்க சிரமத்துடன் ஒருவாறு திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை நெருங்கினார். களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் தங்கினார். எம்பெருமான், தம்முடைய பூதகணங்களை வேடுவர் உருவில் அனுப்பி, நாயனார் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வரச் செய்தார். சுந்தரர்க்கு வேதனை மேலிட திருமுருகன்பூண்டியை அடைந்து அங்கு குடிகொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருள்களை எல்லாம், கோயிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரர் அகமகிழ்ந்தார். தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டு, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார் சுந்தரர்!

3748. மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில் பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.

தெளிவுரை : இலக்குமி வீற்றிருக்கும் பெருஞ் சிறப்பினுள் நிலையான பழைமையுடைய மலை நாட்டில் பழந்தமிழ்ப் பாட்டுகளில் விளங்கிய பல வகையான புகழையுடைய சேர மரபினரும் குடிகளும் தொன்று தொட்டுப் பயின்று வருகின்ற தன்மையுடைய பழைய பதியாவது, காளையூர்தியிலே எழுந்தருளும் சிவபெருமானின் திருவஞ்சைக் களத்தில் நிலவப் பெற்றுச் சேர மரபின் மன்னர்கள் அரசுக் கட்டில் ஏறி வழி வழி ஆட்சி செய்து வரும் பெரிய தலை நகரமானது கொடுங்கோளூர் ஆகும்.

3749. காலை யெழும்பல் கலையின்ஒலி களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி யோங்கும் வியப்பினதால்.

தெளிவுரை : அந்த நகரமானது, காலையில் ஓதப்படுகின்ற வேதம் முதலான கலைகளின் ஒலியும், யானைக் கன்றுகளின் பிளிறும் ஒலியும், பூஞ்சோலைகளினின்றும் எழும் வண்டுகள் பண்பாடும் ஒலியும், பாலை விபஞ்சி யாழ் பயிலும் ஒலியும், பாடல் ஆடல்களுக்கு ஏற்ப இசைக்கப்படும் முழவு என்ற வாத்தியத்தின் ஒலியும். அங்குக் கடலின் ஒலியையும் கீழ்ப்படுத்தி மேல் எழுந்து விளங்கும் வியப்பை யுடையது.

3750. மிக்க செல்வ மனைகள்தொறும் விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும் அடங்க நிதியந் துவன்றுவன.

தெளிவுரை : அந்த நகரத்தில் செல்வம் மிக்க வீடுகள் தோறும் விரும்பும் இல்லற இன்பம் பொருந்தி விளங்கும் இல்லங்களின் பக்கங்களில் நெருங்கிய சாலைகள் தோறும் செய்யப்படும் நல்ல அறங்கள் பெருகும். தக்க அன்பர் வாழும் திருமடங்கள் தோறும் சைவ சமயத்தின் உண்மைப் பொருள்கள் கூறப்படும். தொகுதியாய்ச் சேர்ந்த வளங்களைத் தம்மிடம் கொண்ட இடங்கள் தோறும் நிறைந்த செல்வங்கள் விளங்கும்.

3751. வேத நெறியின் முறைபிறழாமிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்  தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக் குலவு பெயரும் உடைத்துலகில்.

தெளிவுரை : வேதங்களில் விதித்துச் சொல்லப்பட்ட நெறியின் முறைகளினின்றும் வழுவாத மிக்க நல்லொழுக்கத்தில் சிறந்த நான்கு சாதிகளும் தம் தம் நிலைகளில் தழைத்து விளங்கும் தன்மையுடையவாய், பெரிய மதில் சூழ்ந்த மாமரம், மகிழ மரம், சரளமரம் முதலியவற்றின் வரிசை நெருங்கிய சோலைகள் சூழ்ந்த வளமையுடையது. அந்த நகரானது உலகத்தில் கோதை என்று அழைக்கப்படுகின்ற சேர மன்னர் ஆளும் தலைநகரான மகோதை என்ற பெயரையுடையது.

3752. முருகு விரியும் மலர்ச்சோலை மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச் சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால் பிறந்தார் பெருமாக் கோதையார்.

தெளிவுரை : மணம் கமழும் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழைமையான அந்த நகரத்தில், சிறுத்து அழிவு செய்யும் கலியை மரபு வழி வரும் ஒழுக்கத்தினால் நீக்கி, அறத்தை நாட்டும் சைவத்திற்கும் தழைத்து ஓங்கும்படி, மாறுபட்ட சினம் மிக்க யானைப் படையையுடைய சேரர் குலமும் உலகமும் செய்த பெரிய தவத்தால் சிவனருளால் பெருமாக் கோதையார் என்பவர் தோன்றியருளினார்.

3753. திருமா நகரந் திருவவதா ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல் எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத் தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.

தெளிவுரை : செல்வம் நிறைந்த அந்தப் பெரிய நகரத்தில் உள்ளவர் பெருமாக் கோதையார் அவதாரம் செய்த விழாவின் சிறப்பினால் வரும் பெருமகிழ்ச்சி மிக்கு நெய்யாடல் விழாவைக் கொண்டாட, கற்பக மலர் மழை பொழியும் வானத்தில் மிக நெருங்க, ஒலிக்கும் மங்கல ஒலிகள் ஓங்கி முழங்க, பெரிய இந்த வுலகத்தில் உயிர்கள் எல்லாம் மேன் மேலும் பெருகும் மகிழ்ச்சி அடைந்து விளங்கின.

3754. மண்மேற் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்தில் திருத்தொண் டேபுரிவார்.

தெளிவுரை : இம் மண்ணுலகத்தில் சைவ நெறி வாழ வளர்ந்து, முன் செய்த தவத்தின் வழியே தொடர்ந்து வந்த அன்பினால், மேல் கண் விளங்கும் நெற்றியையுடைய சிவ பெருமானின் திருவடிகளையே பேணும் கருத்தை உடையவராகி, உள்ளத்தில் பொருந்திய அன்பு கொண்டவராய்த் தம் உரிமையான அரசாட்சித் தொழிலைச் செய்யாது, தெளிந்த கங்கை நீரைத் தரித்த சடையை உடையை இறைவரின் திருவஞ்சைக் களத்தில் திருதொண்டைச் செய்து வந்தார்.

3755. உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப் புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.

தெளிவுரை : உலகத்தின் வாழ்வும் அரச வாழ்வும் நிலையில்லாதவை என்று உணர்ந்து, வைகறையில் எழுந்து நீரில் முழுகிக் குளித்துத் தூய்மை தரும் வெண்ணீற்றில் குளித்து, நிலை பெற்ற நந்தவனத்திலே நீடும் திருப் பணிகள் பலவற்றையும் ஆற்றி, மலர்களையும் அரும்புகளையும் கொணர்ந்து மாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே தொடுத்து,

3756. திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.

தெளிவுரை : திருமஞ்சன நீரும் கொண்டு வந்து திருவலகும் இட்டுத் திருமெழுக்கும் ஏற்படும் அன்புடனும் இன்பம் பொருந்தச் சாத்தி, மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து அமைத்து, போற்றும் விருப்பத்தினால் ஒன்றித்துச் செல்லும் ஒழுக்கத்தின் உணர்வு வரத் திருப்பாடல்களையும் பாடிப் பணிந்து, இவ்வாறு ஒழுகி வருகின்ற நாளில், 

3757. நீரில் மலிந்த கடல்அகழி நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம் அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன் தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.

தெளிவுரை : நீரால் நிறைந்த கடலைப் போன்ற அகழியும் நீண்ட பெரிய மலை போன்ற கொடியுடைய மதிலும் சூழ்ந்த சிறப்புமிக்க அந்த நகரத்தில், மேகத்தைவிட மிக்க கொடை நிழல் மேலேயும் அதன் கீழே கவிக்கும் வெண் கொற்றக் குடையின் நிழலுமாய் அவற்றின் கீழே இருந்து, செங்கோல் பொறையன் என்ற பெயரைக் கொண்ட மாலையணிந்த தோள்களையுடைய சேர மன்னன், இவ்வுலகத்தை ஆள்கின்ற செயலை விடுத்துத் தவநெறிச்சாரத் தவ ஒழுக்கத்தை மேற்கொண்டான்.

3758. வந்த மரபின் அரசளிப்பான் வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர் சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத் தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர்பால் எய்தினார்.

தெளிவுரை : பரம்பரையாய்த் தொடர்ந்து வந்த மன்னர் மரபில் ஆட்சி செய்பவனான மன்னன் முன் சொன்ன வண்ணம் தவ வனத்தில் சாரும் தவநெறியை அடைந்த பின்னர், சிந்தை செய்யும் கூர்த்த அறிவுடையவராய்த் தாய உரிமை அறிவதற்கு உரிய நூல்களை ஆராயும் அமைச்சர்கள் சில நாட்கள் ஆராய்ந்து தெளிந்த துணிவாவது, முந்தை மரபினால் சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவரான பெருமாக் கோதையாரிடம் அம் முதன்மை பெற்று நின்றதால் பிறை சூடிய முடியையுடைய இறைவரின் திருவஞ்சைக் களத்தில் அவரிடம் சென்று அடைந்தனர்.

3759. எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்.

தெளிவுரை : பொய்யைத் தீர்க்கும் வாய்மையுடைய அமைச்சர்கள் திருவஞ்சைக் களத்தில் சேர்ந்து பெருமாக் கோதையார் திருமுன்பு வணங்கிப் பெரிய குளிர்ந்த சாரலை யுடைய மலைநாட்டின் மன்னர் மரபு வழி வரும் முறைமையினால் உரிமைச் செங்கோல் அரசு செலுத்துதற்குக் குற்றம் இல்லாத வழியினால் முடிசூடும் தாய மரபால் தங்களிடம் வந்தது ! என்று துதித்துக் கூறினர். அப்போது,

3760. இன்பம் பெருகுந் திருத்தொண்டுக் கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்.

தெளிவுரை : மேன்மேலும் இன்பம் பெருகுவதற்குக் காரணமான திருத்தொண்டிலே நான் முயல்வதற்கு இடையூறாக இந்த அமைச்சர் உரைத்தனர். சிவன் அன்பினின்றும் வழுவாத நிலைமையினால் அரசு செய்வதற்குத் திருவருள் கிட்டுமாயின், எலும்பும் பாம்பும் அணிந்த இறைவரைக் காலம் பார்த்து அவரின் திருவுள்ளத்தை அறிவேன் ! என்று எண்ணிக் கோயிலுள் புகுந்து, திருமுன்பு வணங்கி, வேண்டிக் கொண்டார். அப்போது இறைவரின் திருவருளினால்,

3761. மேவும் உரிமை அரசளித்தே விரும்பு காதல் வழிபாடும் யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும் எல்லாங் கைவந் துறப்பெற்றார்.

தெளிவுரை : பொருந்தும் உரிமையுடைய ஆட்சியை மேற் கொண்டவாறே தாம் விரும்பிய அன்பு விளையும் சிவபெருமானின் வழிபாடும், அஃறிணை உயர்திணை என்ற இரண்டு வகையுயிர்களும் கூறுவனவற்றையெல்லாம் அறியும் உணர்வும், அளவில்லாத ஒப்பில்லாத வெற்றியும், தடையற்ற ஈகையும், படை ஊர்தி முதலாக நாடு காவல் செய்யும் மன்னர்க்கு உரிய அங்கங்களும் என்னும் இவையெல்லாம் தம்மைச் சேர்ந்து பொருந்தும்படி அருள் பெற்றார்.

3762. ஆன அருள்கொண் டஞ்சலிசெய் திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக் கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ் வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.

தெளிவுரை : இத்தகையவற்றைப் பெறலான இறையருளைக் கைக்கொண்டு கும்பிட்டு வணங்கிக், கோயிலினின்றும் புறப்பட்டு வெளியே வந்து, ஆட்சி செய்தல் சிவத் தொண்டுக்கு இடையூறு செய்வதே ஆயினும், இறைவரின் திருவருள் பெற்றதால் மேன்மையுடைய அரச முடியைத் தாங்குதற்கு விண்ணப்பித்து நின்ற அமைச்சர்களுக்குத் தம் சம்மதத்தைக் கூறினார். கூறவும், பெருமையுடைய அந்த அமைச்சர்கள் நாயனாரின் திருவடியில் வணங்கி, அதற்கு வேண்டிய செயல்களை மேற்கொண்டு மகிழ்வுடன் சென்றனர்.

3763. உரிமை நாளில் ஓரைநலன் எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி தாங்குங் கழறிற் றறிவார்தாம்.

தெளிவுரை : முடிசூட்டுதற்குரிய நாளின் ஓரையின் நலமும் பொருந்த, மிக்க உபகரணங்களை யெல்லாம் சிறப்புடன் அமையுமாறு வேண்டிய எல்லாப் பொருள்களையும் விளங்க அமைத்து மங்கலமான சடங்குகளைச் செய்து, உயர்திணை அஃறிணை ஆகிய எல்லா வுயிர்களும் மகிழ்வதற்குக் காரணமான அறநீதியின் தன்மையை அறிந்து, உலகை ஆளும் கழறிற்றறிவார், இம்மை வீடுபேறு என்னும் இரண்டு உலகுக்கும் பொருந்திய ஒரே முடியை அணிந்து கொண்டார்.

3764. தம்பி ரானார் கோயில்வலங் கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர் வண்ணான் முன்னே வரக்கண்டார்.

தெளிவுரை : இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து நிலமுற வணங்கி எழுந்து, மத்தகத்தையுடைய யானை மேற்கொண்டு வெண்கொற்றக் குடையையும் சாமரையையும் நம்பும் உரிமையுடைய பரிவாரங்கள் தாங்கி ஏற்றபடி ஏவல் செய்ய, தம் நகரத்தை வலம் வருபவரான நாயனார், தோளில் உவர்மண் மூட்டையைச் சுமந்து கொண்டு ஒரு வண்ணான் வருவதைப் பார்த்தார்.

3765. மழையிற் கரைந்தங் குவரூறி மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல் யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால் விரைந்து சென்று கைதொழுதார்.

தெளிவுரை : மழையால் அவ்வண்ணான் சுமந்த உவர்மண் கரைந்து ஊறியதால் மேனி வெளுத்து இருந்த வடிவத்தால் மானைக் கையில் உடைய சிவபெருமானின் அடியவர் திருக்கோலம் இது என்னும் உணர்ச்சி பெற்றே, அணிகளில் சிறந்த பட்டத்தை அணிந்த யானையின் கழுத்தினின்றும் இறங்கி ஆசையால் பெருகும் காதலுடன் விரைவாய்ச் சென்று அவ்வண்ணானைக் கைகூப்பி வணங்கினார்.

3766. சேரர் பெருமான் தொழக்கண்டு சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தா தேகும் எனமொழிந்தார்.

தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் சேரர் பெருமான் கைதொழக் கொண்டு, அவ்வண்ணான், உள்ளம் கலங்கிக் முன்னே வணங்கி, தாங்கள் என்னை யார் என்று எண்ணிக் கொண்டு இவ்வாறு செய்தருளினீர் ! அடியேன் தங்களின் அடி, பணியாளனான வண்ணான் ஆவேன் ! என (இயம்பினான்) இயம்ப, அப்போது சேரர் பெருமானும் அடியேன், அடிச்சேரன் எனக் கூறிப் பின், நீவிர் நீறு பூசிய அடியார் அல்லாது போயினும் திருநீறு அணிந்த இனிய அன்புக்கு இருப்பிடமான சைவக் கோலத்தை அடியேனுக்கு நினைவூட்டினீர். எனவே, வருந்தாது செல்லுவீராக ! என்றார்.

3767. மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில் புக்கார் புனைமங் கலம்பொலிய.

தெளிவுரை : மன்னரின் திருத்தொண்டைப் பார்த்து அறிவுடைய அமைச்சர் எல்லாரும் தலைமீது கைகூப்பி வணங்கித் துதிக்க, சினம் கொண்ட பெரிய யானையின் மேல் ஏறி ஒளிவீசும் மணிகளால் ஆன கொடிகள் கட்டிய மாளிகைகள் நிறைந்த தெருக்களையுடைய பழைய நகரத்தை வலமாக வந்து புனையப்பட்ட மங்கலம் விளங்க, பொன் பூண்ட மணிகளையுடைய மாளிகையின் வாயிலில் புகுந்தார்.

3768. யானை மிசைநின் றிழிந்தருளி இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன் பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற் றிருந்தார் மன்னர் பெருமானார்.

தெளிவுரை : தாம் யானையின் மேலிருந்து இறங்கி, விளங்கும் மணிகளையுடைய மண்டபத்தில் மேன்மை பெற்ற அரியணையின் மீது ஏறியமர்ந்து, விளங்கும் கொற்றக் குடை நிழல் செய்ய, குவளை போன்ற விழியையுடைய நங்கையர் சாமரையை வீச, பல பூக்களைத் தூவிப் பெருமையுடைய மன்னர் துதிக்க, மன்னர்க்கு மன்னரான நாயனார் வீற்றிருந்தார்.

3769. உலகு புரக்கும் குடைவளவர் உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய் நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர மறைகள் வளர மண்ணளிப்பார்.

தெளிவுரை : உலகத்தைக் காக்கின்ற கொடையையுடைய சோழ மன்னரும் உரிமையுடைய பாண்டிய மன்னரும் என்ற இவருடனே கூட நிலவும் மூவேந்தர்களாகி, நீதியை மனுநூல் வழியே நடைபெறுமாறு செய்து, அளவில்லாத மன்னர்கள் திறை கொணர்ந்து செலுத்த, உள்ளும் புறமும் பகையை அறுத்து நீக்கி, விளங்கும் திருநீற்று நெறி வளரவும் மறைகள் வளரவும் மண்ணுலகத்தைக் காப்பவராய் ஆனார்.

3770. நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல் கொண்டார் சேரர் குலப்பெருமாள்.

தெளிவுரை : நீடும் உரிமையுடைய பேரரசு செலுத்துவதால் நிகழும் பயனும் நிறைந்த தவமும் தேடி அடையும் பொருளும் பெருந்துணையுமாக உள்ளது தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற பொற்பாதமே ஆகும் என்று தெளிந்த அறிவால் மேலே தூக்கிய அந்தத் திருவடியையே பெருகும் அன்பினால் அருச்சிக்கும் செயலைச் சேரர் குல மன்னர் மேற்கொண்டார்.

3771. வாசத் திருமஞ் சனம்பள்ளித் தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம் முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால் அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.

தெளிவுரை : மணம் கொண்ட திருமஞ்சன நீரும், திருப்பள்ளித்தாமமும், சாந்தமும் அழகிய தூபமும், ஒளியுடைய தீபங்களும் முதலான உபசாரங்களும் திருவமுதும் அமைத்து, இறைவர்க்குத் தகுதியாய் விதிக்கப்பட்ட தன்மையால் அருச்சனை செய்தருள, ஒவ்வொரு நாளும் பூசைக்கு விரும்பி எழுந்தருளிப் பெருங் கூத்தரான இறைவர் அழகான சிலம்பின் ஒலியை அந்நாயனார் கேட்கும்படி அளித்தருளினார்.

3772. நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற் குரிய வேள்வி பலசெய்தார்.

தெளிவுரை : இறைவரின் அடிகளில் செய்யும் வழிபாட்டால் நாள்தோறும் இன்பம் அடைந்து, எழுந்தருளியிருப்பவரான நாயனார், இவ்வுலகத்தில் தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் எல்லாருக்கும் வேண்டியவாறே கொடுக்கின்ற தன்மை யினால் செம்பொன்னை மழைபோல் பொழிந்து திருந்தும் வெற்றியுடன் கூடித் தேவர் போற்றத் தம் இறைவர்க்குரிய வேள்விகள் பலவற்றையும் ஆற்றினார்.

3773. இன்ன வண்ணம் இவரொழுக எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும் பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார்.

தெளிவுரை : இவ்வாறு இவர் ஒழுக, அழகுடைய பாண்டிய நாட்டில் நிலைபெற்ற மதுரையில் திருவாலவாய்க் கோயிலில் வீற்றிருக்கும் இறைவரான சிவபெருமான், மேல் மிகுகின்ற அன்பால் சொல்கின்ற இசைப்பாட்டுகளால் துதிக்கும் பாணரான பத்திரனார்க்கு நன்மை பொருந்திய பெருஞ்செல்வம் தர விரும்பி அருள் செய்ய,

3774. இரவு கனவில் எழுந்தருளி என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப் பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண் வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம் தாழா தேகி வருகென்று.

தெளிவுரை : இரவில் அந்தப் பாணபத்திரரின் கனவில் எழுந்தருளி, நம்மிடம் எப்போதும் பரவும் தன்மையுடைய சேர மன்னனுக்குப் பசுமையான பொன்னும் காசும் பட்டாடையும் ஒளிக்கதிரையுடைய மணிகள் பதித்த அணிகளும் இன்னும் வேண்டிய எல்லாவற்றையும், குறைவில்லாமல் உனக்குத் தருமாறு, நம் ஓலையைக் கொடுக்கின்றோம் ! காலம் தாழ்க்காமல் அவனிடம் சென்று வருக ! என்று,

3775. அதிர்கழல் உதியர் வேந்தற் கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகங் கொடுத்தார் காண.

தெளிவுரை : ஒலிக்கும் கழலை அணிந்த சேரமானுக்கு அருள் செய்த பெருமையால் ஒப்பில்லாத செல்வத்துக்கு ஏற்றவாறு பெருஞ் செல்வத்தைக் கொடுக்க என்று, அவன் காணும்படி, மதிமலி புரிசை எனத் தொடங்கும் வாய்மை பொருந்திய வாசகத்தை எழுதிய கதிர்ஒளி விரிந்த ஏட்டில் எழுதப்பட்ட ஓலையை இறைவர் தந்தருளினார். சோம சுந்தரப் பெருமான் பாணபத்திரருக்காகச் சேரமானுக்கு எழுதிய ஓலையின் தொடக்கம் மதிமலிபுரிசை என்பதாகும்.

3776. சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர் தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன் வந்து மன்னர்க் கறிவித்தார்.

தெளிவுரை : பாணபத்திரர் சங்கப் புலவரின் தலைவரான சோமசுந்தரக்கடவுள் அளித்த ஓலையைத் தலைமீது தாங்கிக் கொண்டு, அங்கிருந்து அப்போதே புறப்பட்டுப் போய், மலை நாட்டைச் சேர வந்து, உயர்ந்த மதிலையுடைய கொடுங்கோளுரில் புகுந்து, நெருங்கிய கொடிகள் மேகங்களைத் தொடுமாறு உயர்ந்துள்ள அரண்மனை மாளிகையின் முன்பு வந்து, தம் வருகையைச் சேரமான் நாயனார்க்கு அறிவித்தார்.

3777. கேட்ட பொழுதே கைதலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின் புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார் பாதம் பலகாற் பணிகின்றார்.

தெளிவுரை : அதைக் கேட்ட அப்போதே, கைகளைத் தலை மீது கை கூப்பிக், கிளர்ந்த பேரன்பினால், கண்களினின்றும் வடிகின்ற கண்ணீர் கீழே வர, எழுந்து, மிகவும் நடுக்கம் கொண்டு, ஓட விட்ட அழகிய பொன் பூண்ட மாளிகையின் வெளியே வந்து, உருகும் உள்ளத்துடன் பாட்டின் தலைவரான பாணபத்திரரின் திருவடிகளைப் பல முறையும் வணங்கலானார்.

3778. அடியேன் பொருளாத் திருமுகங்கொண் டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக் கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப் புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.

தெளிவுரை : அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு திருமுகத்தைக் கொண்டு இங்கு அணந்தது என்னே ! என்று சொல்ல, அந்தப் பாணபத்திரரும் கொடியில் காளையை யுடைய சிவபெருமானின் திருமுகத்தைப் பெற்று, அதைத் தம் முடிமீது கொண்டு, ஆனந்தக் கூத்தாடிச், சொல் தடுமாறிக், கண்களினின்றும் பொழியும் ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருநீறு பூசிய மார்பில் வார்ந்து பரவி விழ, நிலத்தில் பல முறையும் வீழ்ந்து எழுந்து வணங்கினார்.

3779. பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.

தெளிவுரை : சேரமான் பெருமாள் நாயனார் அன்பினால் போற்றித் திருமுகத்தைப் பல முறையும் வணங்கி, அதன் சுருளை நீக்கி எடுப்பதற்குரிய வகையினால் எடுத்து, விரித்துப் படித்து, இறைவரின் திருவருளைத் துதித்து, ஒளி வீசும் பொன் மாளிகையுள் புகுந்து, தம் உரிமைச் சுற்றத்தார் எல்லாரையும் விரைவில் கொண்டு சார்ந்து காக்கும் அமைச்சர்க்கு அருள் செய்வாராய்.

3780. நங்கள் குலமா ளிகையதனுள் நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற் சமைய வேற்றிக் கொணருமென.

தெளிவுரை : நமது இந்த அரசு மாளிகையினுள் நன்மையுடைய செல்வக் குவியல்களாய் மேன்மேல் வளர்ந்து நிறைந்த பல வேறு வகைகளில் விளங்கிய களஞ்சியத்துள், அங்கு ஒன்றும் மிஞ்சி இராதபடி எடுத்துத், தக்கவாறு மூட்டையாய் அமைத்துக் கட்டி, ஆள்களின் மீது அமையுமாறு எடுத்துக் கொண்டு வாருங்கள் ! என்று,

3781. சேரர் பெருமான் அருள்செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.

தெளிவுரை : சேரமான் இவ்வாறு உரைத்தருள, திருத்திய அறிவும் நூலறிவும் கொண்ட அமைச்சர்கள், அழகிய மாளிகையுள் உள்ள செல்வங்கள் எல்லாவற்றாலும் நிறைந்த பெருஞ்சிறப்புடைய அளவில்லாத நிதியங்களை எல்லாம் மூட்டையாயகக் கட்டி, ஆளின் மேல் நிலம் நெருங்க ஏற்றிக் கொண்டு தம் மன்னரிடம் வந்து வணங்கினார்.

3782. பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள் முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென மொழிந்தார் பொறையர் புரவலனார்.

தெளிவுரை : சேரர் பெருமான், வெவ்வேறு வகையாய்ப் பெருகிய செல்வப் பரப்பையெல்லாம் பாணபத்திரர்க்கு வரிசையான நிதியங்களை அவ்வரிசைப் பெறக் காட்டி, இவற்றையும், மற்றும் வன்மை பொருந்திய கொடிய யானைகள் முதலான உயிர் உள்ள செல்வங்களையும், அடியேன் காவல் செய்யும் ஆட்சியினையும் கைக் கொள்ளுங்கள் ! என்று உரைத்தார்,

3783. பாண னார்பத் திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம் கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும் கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.

தெளிவுரை : பாணபத்திரரும், பசுமையான பொன்முடி சூடிய சேரமானும் முன் சொன்னவாறு தாம் காணும்படி காட்டித் தந்த நிதிகள் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்து வியந்து, எனக்குப் பேணுதற்கு வேண்டியவற்றை யான் பெற்றுக் கொள்ள, அரசாட்சியும் அதற்குரிய அங்கங்களும் என்ற இவற்றை நீங்களே கைக் கொள்ளுங்கள் ! இஃது ஆணை ! எனக் கூறி (வணங்கினார்) வணங்க.

3784. இறைவ ராணை மறுப்பதனுக்கு அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம் நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.

தெளிவுரை : வன்மையுடைய மன்னரான சேரர் இறைவரின் ஆணையை மறுப்பதற்கு அஞ்சி, அதற்கு இசைந்து நின்றார். நிறைவான செல்வங்களின் பெருக்கங்களையெல்லாம் நிலம் நெளியும்படி உடனே கொண்டு, துளிக்கின்ற மூன்று மதங்களையுடைய யானயும் குதிரை உள்ளிட்டவற்றுள்ளும் வேண்டுவனவற்றையும் கைக் கொண்டு, பாணபத்திரர், தாம் ஒரு வெண்மையான பிறை போன்ற கொம்பை யுடைய யானையின் மீது ஏறிச் சென்றார்.

3785. பண்பு பெருகும் பெருமாளும் பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர் வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்தும் இசைப்பாணர்.

தெளிவுரை : சிவனடித்திறத்தின் பண்பு பெருக ஒழுகும் சேரமான் பெருமாளும், பாணபத்திரர் பின்னே, கண்கள் பொழிந்த ஆனந்தக் கண்ணீர் முகம் எல்லாம் வடிந்து மார்பினும் வழியக், கைகளைக் கூப்பித் தொழுத வண்ணமே வர, நட்பில் சிறந்த அவரிடம், நகரின் புறத்தில் விடை பெற்றுக் கொண்டு, திருந்தும் இசையுடைய பாணபத்திரர் திண்மையான பொன் மதில் சூழ்ந்த மதுரை நகரத்தின் உள்ளே புகுந்தார்.

3786. வான வரம்பர் குலம்பெருக்கும் மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண் டபத்துள் அரசு வீற்றிருந்தார்.

தெளிவுரை : சேரர் குலத்தை விளங்கச் செய்யும் மன்னரான நாயனாரும் திரும்பிப் போய், வளைந்த இளைய பிறையான கண்ணியை முடிந்த சிவபெருமான், அடியவர்களை ஆட்கொண்டருளும் திறத்தின் அருட்பெருமையை நினைந்து நினைந்து பல முறையும் வணங்கித் துதித்து, மேன்மையுடன் விளங்கும் தம் மாளிகையின் கொலு மண்டபத்தினுள் அரசு வீற்றிருந்தார்.

3787. அளவில் பெருமை அகிலயோ னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள் ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர் மகிழும் கலப்பில் வைகு நாள்.

தெளிவுரை : அளவில்லாத பெருமையுடைய எல்லா யோனிகளில் தோன்றிய உயிர்களும் பேசுவனவற்றையெல்லாம் அறிந்து அவற்றின் உள்ளத்தில் உள்ள துன்பங்கள் ஒன்றும் இல்லாத வண்ணம் நீக்கிக் களவும் கொலைகளும் முதலான தீமைகளை விலக்கி, கழறிற்று அறிவாரான இந்த நாயனார் சோழமன்னருடன் பாண்டிய மன்னரும் கூடி மகிழ்கின்ற கூட்டத்துடன் கூடி வாழ்ந்து வந்தார். அங்ஙனம் வாழும் நாளில்,

3788. வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார் ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்கேளா தொழிய மதிமயங்கி.

தெளிவுரை : வானக் கங்கையாறு பொருந்திய சடையை யுடைய இறைவரின் வழிபாடான தூய நல்ல சிறந்த பூசனையான திருத்தொண்டு செய்து வருபவரான அந்நாயனாருக்கு ஒருநாளில், தேன் சிந்துமாறு மலர்ந்த கொன்றை மாலையைச் சூடிய சிவபெருமானின் ஆடல் சிலம்பு ஒலியானது. பெருமையுடைய பூசனையின் முடிவில் முன் போன்று கேளாது ஒழிய, அறிந்து மயங்கி.

3789. பூசை கடிது முடித்தடியேன் என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஒசை மிகவும் இசைப்பித்தார்.

தெளிவுரை : பூசையை விரைந்து முடித்து, அடியேன் என்ன பிழை செய்தேனோ? என்று துதித்து அழுது, ஆசை கொண்டு தாங்கும் இந்த வுடம்பினால் இனி அடையும் இன்பம் வேறு யாது? எனத் துணிந்து, ஒளியுடன் விளங்கும் உடை வாளை எடுத்துத் தம் மார்பிலே பாய்ச்ச. இறைவர் மிக்க விரைவுடன் திருச்சிலம்பின் ஒலியை அதிகமாக ஒலிக்கும்படி செய்தார்.

3790. ஆடல் சிலம்பின் ஒலிகேளா வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக் கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன் செய்யா தொழிந்த தென்னென்றார்.

தெளிவுரை : திருக்கூத்தின் சிலம்பு ஒலியைக் கேட்டு, உடைவாளை அகற்றிப் போக்கி, அழகிய கைம் மலர்களைச் சேரத் தலை மீது குவித்து நிலத்தில் விழுந்து தொழுது எழுந்து நெடிது துதித்து நெடிய திருமாலும் நான்முகனும் அரிய மறைகளும் முன்பு தேடுவதற்கு அரியவரே ! முன்னம் எனக்குத் திருவருள் செய்யாது ஒழிந்த காரணம் யாது? என வினவினார்.

3791. என்ற பொழுதில் இறைவர்தாம் எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்.

தெளிவுரை : இங்ஙனம் சேரமான் பெருமாள் வினவிய போது இறைவர் தாம் நேரே தம் வடிவைக் காணக் காட்டியருளாமல் வானத்தில் எழும் அசரீரியான ஒலியினால், அம்பலத்தில் நம் ஆனந்தக் கூத்தை வன்றொண்டன் சுந்தரன் வணங்கி நம்மிடம் ஒன்றிய உணர்வால், நம்மைத் துதித்து வணங்கி உரை சேரும் பதிகத்தைப் பாடிட, அதனை நின்று கேட்டதால், இங்கு வருவதற்குக் காலம் தாழ்த்தினோம் ! என்று சொல்லும் இதன் மூலம் அவரை இவருக்கு நினைவூட்டுவராய்க் கூறி அருள் செய்தார்.

3792. என்னே அடியார்க் கிவரருளும் கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய் புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர் தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார் நாமச் சேரர் கோமானார்.

தெளிவுரை : இவ்விறைவர் அடியார்க்கு அருளும் திறம் இருந்தவாறென்னே ! என்று துதித்துப், பொன் போன்ற சடையையுடைய கூத்தப் பெருமான் கூத்திடுகின்ற பெரும்பற்றப் புலியூரில் போய்ப் பொன்னம்பலத்தை வணங்கித் தமக்கு எவரும் ஒப்பில்லாதவரான ஆரூரரையும் கண்டு வணங்குவேன் ! என்று விருப்பம் கொண்டு, நல்ல நீர்நாடு எனப்படும் சோழநாட்டிற்கு எழுந்தருளப் பெருமையுடைய சேரமான் உள்ளம் கொண்டார்.

3793. பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம் எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர் வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந் தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.

தெளிவுரை : பொன் முடியைச் சூடிய சேரமான் போற்றும் அமைச்சர்க்குத் தம் விருப்பத்தைச் சொல்லி, நல்ல நாளை மேற்கொண்டு பயணம் புறப்படச் செய்க என்று ஆணையினையிட, ஒளியுடைய கூர்மையான வேலை ஏந்திய வீரர்களும் வெற்றியுடைய வில் வீரர்களும், மற்றும் அந்த நாட்டில் உள்ளவர்களும் நெருங்க வஞ்சியின் அக நகரத்திலே கூடினர்.

3794. இட்ட நன்னாள் ஓரையினில் இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார் தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப் பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்.

தெளிவுரை : குறிப்பிட்ட நல்ல நாளில் நல்ல வேளையில் தம் இறைவரின் திருவஞ்சைக் களத்தில் வீற்றிருக்கின்ற மணங் கமழும் கொன்றை மலர்களைச் சூடிய பெருமானாரை வலமாகச் சுற்றி வணங்கிச் சென்று, பட்டத்தை அணிந்த நெற்றியையுடைய யானையின் பிடரியில் ஏறிக் குளிர்ந்த சந்திரனைத் தீண்டும் கொடிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பழைய ஊரான கொடுங்கோளூரைச், சேரமான் கடந்து போனார்.

3795. யானை யணிகள் பரந்துவழி யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ போலுங் காட்சி மேவின தால்.

தெளிவுரை : யானைகளின் அணிகள் பரவி வழியெங்கும் செல்பவை, பெரிய மலைநாட்டின் மலிந்த பொருளாகிய மலைகள் தம் மன்னருடனே செல்வன போல் விளங்கின. படைவீரர்கள் பக்கங்களில் பரந்து செல்லும் நிலை, அந்நாட்டில் அம்மலைகளைச் சூழ்ந்த காடுகள் எல்லாம் உடன் செல்வன போன்ற காட்சியை அளித்தது.

3796. புரவித் திரள்கள் ஆயோகப் பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான் மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை நேமி நெளியச் சென்றனவால்.

தெளிவுரை : குதிரையணிகள் கரையில் சேரும் விளக்கம் போல் அசைவுடன் செல்பவை ஒலிக்கும் படையான கடலின் அலைகள் மேல் வந்து தாக்குவனபோல் பொருந்திப் பரந்து சென்றன. மேடும் பள்ளமும் ஒன்றாய் அங்ஙனம் நிரல்படப் பரவி பெரும்படை பூமி நெளியுமாறு சென்றது.

3797. அந்நாட் டெல்லை கடந்தணைய அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார் வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில் கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.

தெளிவுரை : அந்த மலை நாட்டின் எல்லை கடந்து செல்ல, தம் அமைச்சர்களுக்கெல்லாம் விடை தந்தருளிய, ஒளியுடைய மணிகளையுடைய சேரர் பெருமான் தம்பயணத்தின் உதவும் பரிவாரங்களை மூட்டும் கூர்மையான வேல் ஏந்திய மறவர்கள் வாழும் கொங்கு நாட்டைக் கடந்து போய், தேவர் உலகத்தவரும் வந்து படிந்து ஆடும் காவிரியின் வளத்தை யுடைய சோழ நாட்டில் செல்லலானார்.

3798. சென்ற திசையில் சிவனடியார் சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர் இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.

தெளிவுரை : தாம் சென்ற திக்கில் சிவனடியார்கள் எல்லாம் எதிர் கொண்டு வரவேற்க, குன்றுகளையும் காடுகளையும் தம் இடமாகக் கொண்டு ஆள்கின்ற குறுநில மன்னர்கள் அவர் அவர் இடங்களில் தமக்கு வேண்டும் பொருள்களைத் தந்து உபசரிக்க, பருக்கைகள் நெருங்கிய பாலை நிலங்களும் காட்டாறுகளும் துன்பம் தரும் கற்கள் பொருந்திய வழிகளும் என்னும் இவை பலவற்றையும் கடந்து போய், வெற்றி பொருந்திய காளையையுடைய இறைவர் வெளிப்பட எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் போய் வணங்கிச் சேரமான் செல்லலானார்.

3799. பொருவில் பொன்னித் திருநதியின் கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார் ஒழியா அன்பின் வழிவந்தார்.

தெளிவுரை : ஒப்பில்லாத காவிரி ஆற்றின் தென் கரையில் வந்து பக்கத்தில் வடக்குக் கரையில் ஏறித் தூய நீர் பொருந்திய அந்நீரில் மகிழ்ந்து நீராடி, நீங்காத அன்பின் வழிவந்த அந்நாயனார், பெரும் பற்றப் புலியூரில் பொன்னம்பலத்தில் ஆடும் திருக்கூத்தைப் போற்றும் பொருட்டு உருகும் உள்ளத்துடன் சென்றார்.

3800. வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ புரத்தை யணைந்தார் சேரலனார்.

தெளிவுரை : அங்ஙனம் வந்து தில்லையாம் பழைய பதியின் எல்லையைச் சேர்ந்து அதை வணங்கி மகிழ்ச்சியால் எதிர் கொள்ளும் பொருட்டுத் தில்லைவாழ் அந்தணர்களும் திருத்தொண்டர் கூட்டங்களும் வந்து சேர்ந்த போதில், அவர்களைத் தாம் எதிர் வணங்கி, நகரத்துள் புகுந்து அழகிய மணமுடைய மலர்களால் அழகுபடுத்தப்பட்ட திருவீதியை வணங்கித், தலையின் மீது கைகள் கூட மனம் மகிழ, எழுநிலைக் கோபுரத்தைச் சேரமான் அடைந்தார்.

3801. நிலவும் பெருமை எழுநிலைக்கோ புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப் புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம் பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.

தெளிவுரை : பொருந்திய பெருமையுடைய எழுநிலைக் கோபுரத்தை முதலில் நிலத்தில் விழுந்து வணங்கி, மலர்கின்ற கண்களில் நீர்த்துளிகள் பெருக, உள்ளே புகுந்து, மாளிகையை வலமாகச் சுற்றி வந்து, உலகத்தை விளக்கம் செய்கின்ற பேரம்பலத்தை வணங்கி, அளவில்லாத அண்டங்களை எல்லாம் அளித்த கூத்தபிரான் நின்று அற்புதக் கூத்தாடுகின்ற சிற்றம்பலத்தின்முன் சேரமான் உள்ளே அணைந்தார்.

3802. அளவில் இன்பப் பெருங்கூத்தர் ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.

தெளிவுரை : அளவில்லாத இன்பம் அளிக்கின்ற பெருங் கூத்தர் ஆடுவதற்குத் தூக்கிய பொற்பாதத்தைக் காட்டியருள உள்ளமும் புலன்களும் ஒன்றாய்க் கூடி உருகத் துதித்து, உய்தி பெறுகின்றவராய், கழுத்தில் நஞ்சை வைத்துத் தேவர்களுக்கு அளித்துக் காத்த அமுதமே அன்றித் திருவம்பலத்தில் வைத்து வளர்கின்ற கூத்தான அமுதத்தை நாயனார் போற்றினார்.

3803. ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப் பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழறிற் றறிவார் தாம்.

தெளிவுரை : நிறைவு பெறாத ஆசை மிகுதியால் ஆனந்தமான கடலுள் முழுகி அதில் விரும்பியிருந்து இறைவர் திருவருளால் பருவம் தவறாது வேண்டிய மழையைப் பொழியும் மேகத்தாலும் ஒப்பாகாத கையுடைய கழறிற்றறிவார் சிறப்பு நிறைந்த வண்ணத்தையுடைய பொன் வண்ணத்து அந்தாதியினைத் திருப்படியின் கீழ் உலகம் அன்புடன் ஏத்தி இன்பம் அடையுமாறு பாடித் துதித்துப் பரவினார்.

3804. தம்பி ரானார்க் கெதிர்நின்று தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும் ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி தாமும் எதிரே கேட்பித்தார்.

தெளிவுரை : தம் இறைவரான கூத்தப் பெருமானுக்கு முன் நின்று செந்தமிழ்ச் சொல்மாலையான அந்தாதியைச் சேரமான் கேட்பிக்க, வானவரும் வாழும்படி கூத்தாடுகின்ற இறைவர் அந்தப் பாட்டுக்கு ஏற்ற பரிசிலாகச், செம்பொன்னால் ஆன அழகிய அம்பலத்துள் எடுத்தருளிய செம்மை தருவதான திருவடியின் சிலம்பினின்றும் இந்த உலகத்தவர் வாழ எழுந்த ஒலியைத் தாமும் அவருக்கு எதிரே கேட்கும்படி செய்தார்.

3805. ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம் நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி வணங்கிப் புறத்து வைகினார்.

தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் இறைவர் ஆடும் சிலம்பின் ஒலியைக் கேட்ட சேரமான், அளவில்லாத இன்பம் மிக்க ஆனந்தம் சேரப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப, வணங்குவாராகி, நெடிது பணியும் காலங்களில் எல்லாம் நின்று தொழுது பின்பு வெளியே வந்து, மாடங்களையுடைய மாளிகை வீதியை வணங்கிச் சென்று அதன் வெளியே தங்கினார்.

3806. பரவுந் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி இன்பம் சிறக்கும் அந்நாளில்.

தெளிவுரை : எல்லாரும் துதிக்கின்ற தில்லை வட்டத்தில் தங்குபவரான சேரமான் பசுமையான பொன்னால் ஆன அம்பலத்துள் பாம்பும் கங்கையும் சடையுள் தாங்கி ஆடும் இறைவரின் கூத்தை, ஆராமையால் பொருந்தும் பெரு விருப்பம் மிக்கு மேலும் மேலும் எழ, வேதங்கள் போற்றிப் பணியும் திருக்களிற்றுப்படியின் கீழே இரவும் பகலும் பணிந்து துதித்த அதனால் மிக்க இன்பம் பெருகப் பெற்ற அந்நாளில்.

3807. ஆடும் பெருமான் பாடல்கேட் டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச் செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால் திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.

தெளிவுரை : ஆடுகின்ற கூத்தப் பெருமான், பாட்டைக் கேட்டபடியால் சிலம்பொலியைக் கேட்பிக்கச் செய்யத் தாழ்த்தோம் என்று தமக்கு அவரது நட்புக் கூடும் இயல்பினால் முன் நாளில் அருளிச் செய்து, நினைவூட்டிய நாவலூர் மன்னரான சுந்தரரை, நீண்ட விருப்பினால் காண வேண்டும் என்ற உள்ளத்துள் எழுந்த நினைவின் மிகுதியால், சேரமான் திருமால் தேடும் திருவடியையுடைய இறைவரின் திருவருள் பெற்றுத் திருவாரூரை நோக்கிச் செல்வதற்குப் புறப்பட்டார்.

3808. அறிவின் எல்லை யாயதிருத் தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப் பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.

தெளிவுரை : ஞான முடியான எல்லை எனப்படுகின்ற தில்லையின் எல்லையை விரும்பி வணங்கி, என்றும் பிரியாத மேலும் மேலும் பெருகும் அன்பை உள்ளத்தில் கொண்டு, சம்பந்தர் தோன்றியருளிய இடமான சீகாழித் பதியைச் சென்று வணங்கி, மாலையுடைய கையையுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கி மகிழ்ந்து வழிச் செல்பவராய்.

3809. வழியில் குழியில் செழுவயலில் மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந் துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக் கழனி யாரூர் கண்ணுற்றார்.

தெளிவுரை : வழியிலும் குழியிலும் செழுமையான வயல்களிலும் மலர்கள் பொருந்திய நீர்நிலைகளிலும் மடுக்களின் சுழியிலும் முத்துக்களை அலைகள் ஒதுக்குகின்ற துறைகளையுடைய நீர் நிரம்பிய காவிரியாற்றைக் கடந்து தென்கரை ஏறி, விழியுடன் கூடிய நெற்றியையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற தலங்களை வணங்கிப் போய் ஊழி முடிவில் வரும் பெரிய வெள்ளத்தாலும் கொள்ளப்படாத அழிவின்றியுள்ள வயல்கள் சூழ்ந்த திருவாரூரைக் கண்டார்.

3810. நம்பி தாமும் அந்நாள்போய் நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித் திருவா ரூரில் சார்ந்திருந்தார்.

தெளிவுரை : நம்பியாரூரரும் அந்நாளில் திருநாகைக்காரோணத்தில் போய்த்திருப்பதிகம் பாடி, அழகிய பொன்னாலும் மணிகளாலும் ஆன அணி வகைகளையும் நவ மணிகளையும், ஆடை, சாந்து, வலிய குதிரைகள், பசும்பொன்னால் ஆன சுரிகை முதலானவற்றையும் இறைவர் தர, தாம் பெற்று மேலும் பல பதிகளில் இறைவரை வணங்கி, மீண்டு திருவாரூரில் சேர்ந்து தங்கியிருந்தார்.

3811. வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.

தெளிவுரை : சேரமான் வந்து நிலைபெற்ற திருவாரூரைச் சேர அந்தணரின் தலைவரான நம்பியாரூரர் மன்னர் தலைவரான சேரமான் வரும் பேறு பெற்று உள்ளம் மகிழ எதிர்கொண்டு அவரை அணுகினார். சேரமானும் அழகிய மணமுடைய மாலை சூடிய சுந்தரர் முன்பு விருப்புடனே தாழ்ந்து வணங்கினார்.

3812. முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந் தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.

தெளிவுரை : தமக்கு முன்னர்த் தம்மை வணங்கிய சேரமானை நம்பியாரூரர் தாமும் வணங்கி அவரை அணைந்து எடுத்து அன்பு பெருகத் தழுவிக் கொள்ள இன்பமான வெள்ளத்து முழுகிக் கரையேற மாட்டாது அலைபவரைப் போல் ஒன்றாக உள்ளே கலக்க, அது போல் புறத்தும் இரண்டு உடல்களும் ஒன்றாயின எனக் கூறும் படியாக,

3813. ஆன நிலைமை கண்டதிருத் தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார் தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க் காகி விளங்கியதால்.

தெளிவுரை : இங்ஙனமாக அவ்விருவரின் தன்மையைக் கண்டதிருத்தொண்டர்கள் அளவற்ற மகிழ்ச்சியை அடையப் பெருமையுடன் தோழர் பெருமானான சேரமானும் வன்றொண்டரான நம்பியாரூரரும் ஒருவருள் ஒருவர் கலந்த பான்மையால் போந்த நட்பின் காரணமாய்ச் சேரமான் தோழர் என்னும் உலகு புகழும் மேன்மை பொருந்திய திருநாமம் முனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பிக்கு உலகத்தில் வழங்கலாயிற்று.

3814. ஒருவர் ஒருவ ரிற்கலந்த வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக் கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேர மான்தோழர்.

தெளிவுரை : ஒருவருள் ஒருவர் கூடிய உணர்ச்சியால் இன்பம் தரும் மகிழ்வான சொற்களைக் கூறிக் கொண்டு பொருந்திப் பயிலுந்தோறும் இனிமை தருவாராகி இருவரையும் கூட்டி வைத்த இறைவர் பால் மேல் நாம் செய்யக் கூடிய கைம்மாறு என்னே என்று உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியால் நம்பியாரூரர், சேரமானின் பருவகால மழை போன்ற கொடைத் தன்மை கொண்ட செங்கையைப் பற்றிக் கொண்டு, இறைவரின் திருவடிகளைப் பணிவதற்கு நினைத்து வீதியை நீக்கிக் கோயிலுக்குள் புகுந்தார்.

3819. சென்று தேவா சிரியனைமுன் இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார் உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்.

தெளிவுரை : அங்ஙனம் சென்று திருமுன்றினுள் முதலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது, பின் இறைவரின் திருமாளிகையை வலமாகச் சுற்றி வந்து, ஒன்றுபட்ட மனத்துடனும் உள்ளே புகுபவரான சேரமான், ஆரூரர் முன்னே நின்று வழிபடத், தாம் அவர் பின்னே நின்று வணங்கிக் கண்ணீர் அருவிபோல விழத் தாம் நிலத்தில் விழுந்து என்றும் இனிய தம் பெருமானாரான புற்றிடம் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கித் துதித்தார்.

3816. தேவர் முனிவர் வந்திறைஞ்சுந் தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும் அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார் தம்பி ரானார் தாம்கொண்டார்.

தெளிவுரை : தேவரும் முனிவரும் வந்து வணங்குகின்ற தெய்வப் பெருமானான தியாகேசரின் திருவடிகளை வணங்கி, கெடுதல் இல்லாத சேரமான் மூவர்க்கும் முதல்வரான அப்பெருமானை நாவலூர் நம்பியின் திருமுன்பு வைத்து மும்மணிக் கோவை பாடி, நன்மை விளங்குமாறு கேட்பித்தார். அதைத் தம் இறைவரும் ஏற்றுக் கொண்டருள் செய்தார்.

3817. அங்கண் அருள்பெற் றெழுவாரைக் கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும் பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார்.

தெளிவுரை : சுந்தரர் அங்கு இறைவரின் திருவருளைப் பெற்று எழுந்த கழறிற்றறிவாரை உடன் அழைத்துக் கொண்டு வெளியே வந்து பரவையாரின் மாளிகையில் சேர்ந்திட, ஒளிமிகும் விளக்குகளையும் நிறை குடங்களையும் பூமாலைகளையும் எங்கும் மங்கையர் ஏந்தி வர, (அப்பரவையார்) மாளிகையின் வாயிலில் வந்து தாமும் எதிர் கொண்டு வரவேற்றார்.

3818. சோதி மணிமா ளிகையின்கண் சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார் கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறைபூ சனைகள் முறையளித்தார்.

தெளிவுரை : ஒளிரும் மணிகள் பொருந்திய மாளிகையுள் புகுந்து விளங்கும் பசும் பொன்னால் ஆன கால்களையுடைய இருக்கை மீது சேரமானை அமரச் செய்து, நம்பியும் பொருந்தியுடன் இருக்க, குற்றம் இல்லாத குணத்தையுடைய பரவையார், தம் கணவரான நம்பியாரூரர்க்கும் அவருடைய நண்பரான சேரமானுக்கும் நூல்களில் விதித்த நீதியினின்றும் வழுவாத ஒழுக்கத்தில் நின்று பூசையை முறைப்படி செய்தார்.

3819. தாண்டு புரவிச் சேரர்குலப் பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க் கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.

தெளிவுரை : தாவிச் செல்லும் குதிரைப் படையையுடைய சேரமான் பெருமாளுக்குத் தூண்டு சோதி விளக்கைப் போன்ற பரவையார்த் திருவமுது அமைக்கும்படி துணைவரான நம்பியாரூரர் கூறவும், அவர் விரும்பும் தன்மையினால், வெவ்வேறான பல விதக் கறிகளும், போனகமும் விரைவில் சமைக்கச் செய்து, அவருடன் வந்தவர்க்கெல்லாம் விருந்தை அமைத்தனர்.

3820. அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல் அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன் விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார் புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய பரவை யார்வந் தறிவித்தார்.

தெளிவுரை : மன்னர் என்ற தன்மைக்குத் தக்கவாறு அமைத்ததை விடச் சிறப்பின் மேலாய் அடியார் என்ற தன்மைக்கு ஏற்குமாறு பொருந்திப் பெருகும் அன்புடன் விரும்புகின்ற அமுதைச் சமைத்த பின்னர்க் கழுத்துக் கயிற்றை அணிந்த யானைகளையுடைய சேரமான் தம்முடன் வந்தவருடன் உணவு உண்ணப் பாற்கடலில் தோன்றிய இலக்குமியைப் போன்ற பரவையார் வந்து நம்பியாரூரர்க்கு அறிவித்தார்.

3821. சேரர் பெருமான் எழுந்தருளிஅமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய் தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில் இரண்டு படியா ஏற்றுதலும்.

தெளிவுரை : மலர் மாலை சூடிய குழலையுடைய பரவையே ! முன் செய்த தவப்பயனாய்ச் சேரமான், இங்கு எழுந்தருளித் திருவமுது செய்யுமாறு பெற்றதால், காலம் தாழ்த்தாது உணவு செய்விப்பாயாக ! என்று உலகில் நிறைந்த சிறப்புடைய சுந்தரர் கூறினார். அழகுடன் விளங்கும் தம் திருக்கரத்தால் இரண்டு படியாய்ப் பரிகலங்களை ஏற்றுதலும்,

2822. ஆண்ட நம்பி பெருமாளை யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும் விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக் கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.

தெளிவுரை : சுந்தரர் சேரமானைத் தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று சொல்ல, அங்கு அவரும் விரைவாகப் பணிந்து அஞ்சித் திடுக்கிடவும், நீண்ட பெரிய கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பியாரூரர் மீண்டும் வேண்டிக் கொள்ளவும், அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணச் சேரமான் இசைந்தார்.

3823. ஒக்க அமுது செய்தருள வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித் தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந் தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத் தூயவிருந்தின் கடன்முடித்தார்.

தெளிவுரை : உடன் ஒன்றாய் அமர்ந்து உணவு கொள்ளச் சேரமான் சம்மதிக்க, நம்பியாரூரரும் சேரமானும் ஒக்க உடன் இருந்து உணவு உண்ண, உயர்வான தவத்தையுடைய பரவையார், மிக்க விருப்பத்தினால் உண்ணச் செய்து, பொருந்திய பரிசனங்கள் தக்க வகையினால் ஆறு வகைப்பட்ட உணவைத் தாம் தாம் வேண்டியவாறே இனிதாக உண்ணவும் கூடிய மிக்க மகிழ்ச்சி சிறக்க, தூய்மையான விருந்து அளிக்கும் கடைமையை இனிது ஆற்றி முடித்தார்.

3824. பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுது மேந்தினார்.

தெளிவுரை : பனி நீருடன் கலந்த சந்தனத்துடன் பச்சைக் கற்பூரம் சேர்ந்த மணக்கலவைக் குழம்பை, உரிய பெண்கள் அரைத்துச் சேர்த்து தர, அதைக் கொடுத்து, மகிழ்வு தரும் கத்தூரிச் சாந்தையும் தூய்மையான மலர்களையும் தந்து பொன் கொடி போன்ற பரவையார் இனிய பஞ்ச வாசத்துடன் வெற்றிலை, பாக்கையும் ஏந்தினார்.

3825. ஆய சிறப்பிற் பூசனைகள் அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக் கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய் நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.

தெளிவுரை : அத்தகைய சிறப்பில் செய்யப்பட்ட பூசனைகளை எல்லாம் விரும்பி ஏற்றுக் கொண்டு, தூய்மை செய்யும் திருநீற்றை வாங்கித் தம் திருமுடியில் அணிந்து பொருந்திய விருப்பத்தினோடு உடன் இருக்கப் பெற்றமையால் கழறிற்றறிவார், உண்மையான திருத் தொண்டின் செம்மை தரும் தன்மையை உள்ளபடியே பெற்றவராய் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

3826. மலைநாட் டரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப் பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார் அருளே போற்றி யுடனமர்ந்தார்.

தெளிவுரை : மலை நாட்டு மன்னர் பெருமானான சேரமான் வணங்க, தாமும் எதிர் வணங்கித் தழுவிக் கொண்டு, கலைகள் நிறையப் பெற்ற முழுமதிபோன்ற முகத்தையுடைய பரவையாரின் கணவரான நம்பியாரூரர், விற்குறியைப் பொறித்த வெற்றியுடைய சேரமானைச் சேருமாறு தந்தார் ! என்று கங்கையாறு அலையும் புதுப் பூங்கொன்றை மலர் சூடிய சடையுடைய இறைவரின் திருவருளைத் துதித்து, உடனமர்ந்தருளினார்.

3827. செல்வத் திருவா ரூர்மேவும் செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந் தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.

தெளிவுரை : செல்வம் நிறைந்த திருவாரூரில் உள்ள செம்பொன் புற்றில் இடம் கொண்டு இனிது விரும்பி வீற்றிருக்கும் வில்லாக மேரு மலையை யுடைய பெருமானின் திருவடிகளை வணங்கியும், வீதி விடங்கப் பெருமானான தியாகேசரை வன்மையுடைய விழாவில் சேவித்தும், பெரு வாழ்வு பெற்றவராய், நாள்தோறும் மனம் மகிழ்ந்து, யாவரும் எடுத்துச் சொல்லும் பேரறிவாளர்களான இரு பெரு மக்களும் தொடர்ந்து வந்த பெரு விருப்பத்துடன் வீற்றிருந்தனர்.

3828. இவ்வா றொழுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் இன்பத்தில் மூழ்கி இருவரும் ஒழுகி வந்தனர். அந்நாளில் விளங்கும் மணிப் பூண்களை அணிந்த வன்றொண்டர் நஞ்சுடைய கண்டத்தையுடைய வேதியரான இறைவர் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று, வயல்கள் நிறைந்த கன்னி நாடு எனவும் தமிழ் நாடு எனவும் கூறப்படும் பாண்டிய நாட்டில் மாமதுரை முதலாக நீண்ட நெருங்கிய சடையுடைய இறைவரின் பல ஊர்களையும் வணங்குவதற்குத் திருவருள் முறையால் நினைந்தார்.

3829. சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந் தாமும் உடனே செலத்துணிந்தார்.

தெளிவுரை : சேரமானும் சுந்தரரைப் பிரியாது உடன் இருப்பதை விரும்பிய சிறப்புடைய எண்ணத்தாலும் அன்பு பெருகுமாறு அன்று தமக்கு மதுரைத் திருவாலவாயில் விரும்பி எழுந்தருளிய வீரரான சோம சுந்தரப் பெருமான் அளித்த திருமுகத்தைப் பற்றி விரும்பிய அன்பினால் போய் அவரை வணங்குவதற்கு உள்ளத்தில் எழுந்த குறிப்பினாலும் தாமும் அவருடன் செல்வதற்குத் துணிவு கொண்டார்.

3830. இருவர் திருவுள் ளமும்இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு போது வார்கள் உடன்போத.

தெளிவுரை : இருவருடைய உள்ளங்களும் இசைந்தபோது, மாளிகையினின்றும் புறப்பட்டு எழுந்து, திருவாரூரில் புற்றிடம் கொண்ட இறைவரின் மலர் போன்ற பொற்பாதங்களைப் பூங்கோயிலுள் புகுந்து வணங்கி, அவரது உடன்பட்ட திருவருளைப் பெற்றுப் புறம்போந்து, உடனே வரப்பெறும் உரிமையுடைய பெருஞ் சுற்றங்களும் எல்லையில்லாத அணிகளையும் ஊர்திகளையும் ஒப்பில்லாத சேம நிதிகளையும் கொண்டு செல்பவர்களும் தம்முடன் வர,

3831. சேவித் தணையும் பரிசனங்கள் சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப் போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை புகுந்து காரோ ணம்பணிந்தார்.

தெளிவுரை : தம்மை வழிபட்டுத் தம்முடன் வரும் பரிவாரங்களும் சூழ அத்திருவாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய், திருக்கீழ்வேள் ஊரைச் சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடிகளை வணங்கி, மேலே சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்துக்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினார்.

3832. திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா டணைந்தார் சேர ராரூரர்.

தெளிவுரை : திருநாகைக்காரோணத்தில் வீற்றிருப்பவரே ! என்ற முடிபுடைய அன்பர்களின் சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால் பரந்த, செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தை அருளிச் செய்து சாத்திச், சில நாட்கள் அங்குத் தங்கியிருந்து, மேல் சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையையுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கித் துதித்துப் போய் அருளுடைய மூலமுதல்வரான இறைவரின் திருமறைக் காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர்.

3833. முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக் கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப் பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்திறைஞ்சி.

தெளிவுரை : கடலானது சூழ்ந்து வலம் வந்து திருமறைக்காட்டில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலைச் சென்று வணங்கிச் செம்மையான இயல்புடைய வாய்மை பொருந்திய திருநாவுக்கரசரும் சீகாழிப்பதியில் தோன்றியுள்ள சிவக்கன்றான திருஞானசம்பந்தரும் நேர்முகமாய்த் திறக்க, அடைக்க என்று பாடப் பெற்ற வாயிலை அடைந்து அருள் கண்ணீர் வழியும் விழிகளையுடையவர்களாகி அந்நாயன்மாரையும் தியானித்து வணங்க.

3834. நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித் தனவே யோதித் திளைத்தெழுந்தார்.

தெளிவுரை : நிறைவைக் கொண்ட மறைகள் அருச்சனை செய்த நீடிய திருமறைக் காட்டில் வீற்றிருக்கும் அருமணி போன்றவரான இறைவரைப் பணிந்து நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து துதித்து, யாழைப் பழித்து எனத் தொடங்கும் திருப்பதிகத்தை நம்பியாரூரர் பாடிச் சாத்த, அருள் பொருந்திய சேரர் பெருமான் தாம் பாடிய சிறப்புடைய பொன்வண்ணாத்தந்தாதியில் இறைவரைச் சிறப்பித்துப் பாடினவற்றை ஓதி இன்புற்றனர்.

3835. எழுந்து பணிந்து புறத்தெய்தி இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர் கோடிக் கோயில் குறுகினார்.

தெளிவுரை : மேற் சொன்னவண்ணம் திருமுன்பு நின்றும் திளைத்தெழுந்து வணங்கி வெளியில் வந்து, இரண்டு பேரும் சில நாட்கள் செழுமையான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த அத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, அங்கு இருந்தவாறே, அதன் தெற்கில் உள்ள அலை பொருந்திய கடல் நஞ்சை உட்கொண்ட கழுத்தினையுடைய இறைவரின், திருவகத்தியான் பள்ளியைப் போய் வணங்கிக் கலைகள் வளரும் பிறைச் சந்திரனைச் சூடிய சடையையுடைய குழகரின் திருக்கோடிக் கோயிலைச் சேர்ந்தனர்.

3836. கோடிக் குழகர் கோயில்அயல் குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த பரிசும் பதிகத் திடைவைத்தார்.

தெளிவுரை : கோடிக் குழகரின் கோயிலின் அயலிலும் வெளியிலும் எங்குத் தேடியும் ஒரு குடியும் காணாது கோயிலுள் புகுந்து, இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வாட்டம் கொண்டு, மலர் போன்ற கண்களில் நீர் வர, கடிதாய்க் காற்று எனத் தொடங்கிப் பதிகம் பாடித் துர்க்கையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையையும் அந்தப் பதிகத்துள் வைத்துப் போற்றினார்.

3837. அங்கு வைகிப் பணிந்தருளால் போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப் பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்தணைந்தார்.

தெளிவுரை : அத்திருமறைக் காட்டில் தங்கி வணங்கி விடை பெற்றுச் செல்பவராய்ச் சோழ நாட்டில் சிவபெருமான் விளங்க வீற்றிருக்கும் தலங்களை வணங்கிச் சென்று, பாண்டிய நாட்டைச் சேர்ந்து, பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் திருப்புத்தூரினை வணங்கிச் சென்று, வானில் விளங்கும் முகில்கள் தவழ்கின்ற அழகான மாடங்கள் நிறைந்த மதுரை என்ற பழைய பதியில் வந்து சேர்ந்தனர்.

3838. சேரமான் தோழரும்அச் சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித் தெதிர்கொண்டு கொடுபுக்கார்.

தெளிவுரை : சேரமான் தோழரான நம்பியாரூரரும் சேரமானும், பாம்பை அணியாய் அணிந்த மார்பினரான சிவபெருமானை மதுரைத் திருவாலவாயில் வணங்கும் பொருட்டு அன்புடன் வந்து சேர, பாண்டிய மன்னர் மன விருப்பம் மிக மாநகரத்தை அணி செய்து, எதிர்கொண்டு வரவேற்று அழைத்துக் கொண்டு நகரத்துக்குள் புகுந்தனர்.

3839. தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்.

தெளிவுரை : பாண்டியனின் மகளாரை மணந்து முன்னமே பழைமையுடைய மதுரை நகரத்தில் வந்து இனிதாக இருந்த சோழ மன்னரும் அவர்களுடன் கூடச் சேர, அவர்களும் ஒருங்கு சேர்ந்து நிலைபெற்ற திருவாலவாய் என்ற அழகான கோயிலை வந்து அடைந்தார்.

3840. திருவால வாய்அமர்ந்த செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத் தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து பெருமகிழ்ச்சி பிறங்கினார்.

தெளிவுரை : நம்பியாரூரர் திருவாலவாயில் அமர்ந்த இறைவரின் திருக்கோயிலை வலமாய் வருவாராய், முன்பு விழுந்து வணங்கி, வழிவழியாய்த் தொண்டைச் செய்யும் பேற்றைத் தந்தருளுபவரான இறைவரைத் துதித்து, நிலம் உற விழுந்துதொழுது, வாழ்வடைந்த பெருவாய்மையையுடைய தமிழ்ப்பாமாலை பாடிப் பெருமகிழ்ச்சியில் விளங்கினார்.

3841. படியேறு புகழ்ச்சேரர் பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன் எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார் முன்பரவிக் களிகூர்ந்தார்.

தெளிவுரை : உலகம் ஏற்றம் அடையும் புகழையுடைய சேரமானும் திருமுன்பு நிலத்தில் விழுந்து, அடியேனையும் ஒரு பொருட்படுத்தித் திருமுகத்தைத் தந்தருளிய அருட் பெருக்கின் எல்லையை அளவிட அறியேன் ! என்று கூறித் துதித்து, சொற்கள் எழ மாட்டாமல். நாத்தழு தழுக்க, மணம் விரிந்த கொன்றை மலர் அணிந்த சிவபெருமான் திருமுன்பு துதித்து மகிழ்ந்தார்.

3842. செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற் குறைவறுத்தார் பஞ்சவனார்.

தெளிவுரை : சோழருடன் பாண்டியரும் இறைவரை வணங்கி, சேரருடன் சுந்தரரும் கோயில் வெளிப்பக்கத்தை அடைய, பொருந்திய மிக்க களிப்பால் தேவ தேவரின் கோயிலினின்றும் தம்முடனே அழைத்துக் கொண்டு சென்று, பாண்டியர் இருபெரு மக்களுக்கும் அழகிய பொன் பூண்ட தம் மாளிகையில் குறைவில்லாது வேண்டியவாறு உபசாரம் செய்தனர்.

3843. உளம்மகிழக் கும்பிட்டங் குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர் தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார் வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால் அமர்ந்துகலந் தினிதிருந்தார்.

தெளிவுரை : உள்ளம் மகிழ சிவபெருமானை வணங்கி, அத் தலத்தில் தங்கிய நாட்களில், சேரமானுடன் சுந்தரர் தாம் தங்கியிருந்த இடத்தை அடைந்து, சோழரும் பாண்டியரும் வளம் பெருகும்படி சார்ந்து அவர்களுடன் உரையாடிக் கலந்த விருப்பத்தால் அமர்ந்து கூடி இனிதாய் இருந்தனர்.

3844. அந்நாளில் மதுரைநகர் மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற் புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித் தொழத்திருப்பூ வணத்தணைவார்.

தெளிவுரை : அந்த நாட்களில் மதுரைப் பதியின் பக்கத்தில் இறைவர் விளங்க எழுந்திருக்கும் தலங்களை, பொன்னாரங்களும் மணிகளும் பூண்ட மார்பையுடைய முடி மன்னர்கள் மூவரும் உடன் வர, செம்மை விளங்கும் நாவையுடைய திருமுனைப்பாடித் திருநாட்டின் தலைவரான நம்பிகள் போய் வணங்கி, திருப்பதிகங்களைப் பாடி, வணங்குவதற்கு எழுந்து திருப்பூவணத்தை அடைந்தார்.

3845. நீடுதிருப் பூவணத்துக் கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர் மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத் திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ தோவென்று பணிந்தணைவார்.

தெளிவுரை : நிலைத்த திருப்பூவணம் என்ற தலத்துக்கு அண்மையில் நேரே செல்லும்போது, பக்கத்தே வரும் தொண்டர்கள், நிலை பெற்ற அந்தப் பதியைக் காட்ட, தேடும் மறைகளுக்கும் எட்டுதற்கு அரிய இறைவரைத் திருவுடையார் எனத் தொடங்கிப், பாடும் இசை பொருந்திய திருப்பதிகத்தில் பூவணம் ஈதோ? என்று போற்றி வணங்கிச் சேர்வாராகி,

3846. சென்றுதிருப் பூவணத்துத் தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர் முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி நேர்நீங்கி யுடன்பணிந்த
வென்றிமுடி வேந்தருடன் போந்தங்கண் மேவினார்.

தெளிவுரை : போய்த் திருப்பூவணத்தில் வானவர் தலைவரான இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோயிலின் திருமுற்றத்தை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி, எழுந்து நின்று துதித்துப் பாடி அங்கிருந்து நீங்கி, தம்முடன் வந்த வெற்றியுடைய முடி மன்னர் மூவருடனே கூடிப் போய்ச் சுந்தரர் அந்தத் தலத்தில் தங்கினார்.

3847. அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச் சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி இன்புற்றங் கமர்கின்றார்.

தெளிவுரை : திருப்பூவணம் என்ற அந்தத் தலத்தில் விரும்பித் தங்கியிருந்து இறைவரை வணங்கிப் பின் சில நாட்களில் நம்பியாரூரர் பெருவேந்தர் மூவருடனே முதன்மையுடைய மதுரையைச் சேர்ந்து உண்மை கூர்ந்த பேரன்பால் ஆலவாயுடைய இறைவனின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை எப்போதும் வணங்கித் துதித்து, இன்பம் எய்தி, அங்கு விரும்பி எழுந்தருளியிருந்தார்.

3848. செஞ்சடையார் திருவாப்ப னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர் நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால் இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை மாநகரின் மகிழ்ந்திருந்தார்.

தெளிவுரை : சிவந்த சடையையுடைய இறைவரின் திரு ஆப்பனூர், திருவேடகம் முதலாக நஞ்சை உண்ட கழுத்தையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் பதிகளில் போய்க் குறைவற்ற பெருவிருப்புடன் இனிதாக வணங்கி மீண்டும் முகில் தோயும் மதிலை யுடைய மதுரை நகரில் சேர்ந்து மகிழ்ந்திருந்தார்.

3849. பரமர்திருப் பரங்குன்றில் சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங் கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என் றாரூரர் பாடுவார்.

தெளிவுரை : மூவேந்தருடனே சிவபெருமானின் திருப்பரங்குன்றத்தை அடைந்து, திரிபுரம் எரித்த பெருமானின் கோயிலை வலமாக வந்து உள்ளே புகுந்து வணங்கி, வெண் தலைகள் மலிந்த மாலையினை அணிந்த சடையையுடையவரின் திருவடியின் கீழே ஆட்செய்யும், அவருடைய அருமையை எண்ணி அஞ்சுதும் என்ற கருத்துடன் ஆரூரர் பாடுவாராய்.

3850. கோத்திட்டை எனஎடுத்துக் கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார் தங்குதிருப் பரங்குன்றில்.

தெளிவுரை : கோத்திட்டையும் எனத் தொடங்கிக் குற்றம் இல்லாத திருப்பதிக இசையினால் இறைவரை வணங்கி, மூவேந்தரின் முன்பு, வளப்பம் மிக்க தமிழ் மாலையை இனிய இசையால் பாடித் துதித்துச் சங்கரர் தங்கியிருக்கும் திருப்பரங்குன்றத்தில் இறைவர்க்கு ஆரூரர் சாத்தினார்.

3851. இறைவர்திருத் தொண்டுபுரி யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும் நிருத்தர்பதி தொழநினைந்தார்.

தெளிவுரை : சிவபெருமானின் திருத் தொண்டு செய்யும் அருமைப்பாட்டை இந்தப் பெரிய உலகில் ஆளும் முதல் முடி மன்னரான மன்னர் மூவரும் கேட்டுத் தாமும் அஞ்சி, மறைகளில் விதித்த முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய சுந்தரரை வணங்கினார். நிறைந்த தவத்தை யுடைய சுந்தரர் அப்பாலும் இருக்கின்ற இறைவரின் பதிகளையும் போய் வணங்குதற்கு எண்ணினார்.

3852. அந்நாட்டுத் திருப்பதிகள் பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண் வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்தமைப்பார் தமைவிடுத்தார்.

தெளிவுரை : அந்த நாட்டில் அருகில் உள்ள பதிகள் பலவற்றையும் போய் வணங்க நம்மையுடைய மலைநாட்டு மன்னரான சேரமானுடனே சுந்தரர் எழுந்தருள, ஒளி விளங்கும் பல மணிகள் இழைத்த அணிகளை அணிந்த சோழ பாண்டியராகிய இருபெருந்தவரும் மதுரைக்கு மீண்டிட, தென் நாட்டில் அவர்களுக்கு வேண்டுவனவற்றைச் செய்தமைத்தற்குரிய பரிவாரங்களை உடன் செல்ல ஏவி அனுப்பினர்.

3853. இருபெருவேந் தரும்இயல்பின் மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர் புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும் பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும் குற்றாலஞ் சென்றடைந்தார்.

தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் சோழ பாண்டியரான இரு பெரு மன்னர்களும் மீண்டு சென்றனர். பின்பு, எழுந்தருளிச் செல்கின்ற சுந்தரர், புகழையுடைய சேரமானுடனே இறைவர் வெளிப்படப் பொருந்திய தலங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று, மலையின் சாரலில் நிறமுடைய மணிகள் கதிரவன் போல் ஒளி வீசும் திருக்குற்றாலத்தைப் போய்ச் சேர்ந்தனர்.

3854. குற்றாலத் தினிதமர்ந்த கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார் பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத் திருநெல்வே லியையணைந்தார்.

தெளிவுரை : திருக்குற்றாலத்தில் இனிதாய் எழுந்தருளியுள்ள கூத்தரின் ஒலிக்கும் கழலை அணிந்த திருவடிகளை வணங்கிச் சொல் மாலை புனைந்து துதித்துத் திருக்குறும்பலா என்னும் கோயிலின் இறைவரை வணங்கி, இப் பக்கத்தில் முதிராத வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் தலங்களை வணங்கிச் சென்று, திரிபுரங்களையும் அழித்த பெருமான் நிலைபெற எழுந்தருளிய செல்வத் திருநெல்வேலியைப் போயடைந்தார்.

3855. நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து.

தெளிவுரை : திருநெல்வேலியில் வீற்றிருக்கின்ற திருநீற்று அழகரான இறைவரை வணங்கிப் பாடி, அப்பக்கம் உள்ள பல்வேறு பதிகளையும் பிறவற்றையும் பணிந்து போய், வில்லை ஏந்திய வேடர் உருவுடன் வெற்றியினையுடைய அருச்சுனனுக்கு முன், பன்றியினைப் பின்னே சென்ற மறை முதல்வரான இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற இராமேச்சரத்தில் அன்புடன் வந்து சேர்ந்தார். 

3856. மன்னும்இரா மேச்சரத்து மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதமர்ந்தார்.

தெளிவுரை : நிலைபெற்ற இராமேச்சரத்தில் எழுந்தருளிய பெரிய சிந்தாமணி போன்ற இறைவரை முன் வணங்கித் துதிக்கும் தமிழ்மாலையான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்தி, பாம்புகளை அணிந்த முடியையுடைய இறைவர் வீற்றிருக்கின்ற ஈழநாட்டில் உள்ள மாதோட்டத்துத் திருக்கேதீச்சரத்தைச் சிந்தித்துப் பொன் மலர் மாலைகளான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்திக், கடல் இடையில் உள்ளதால், தொலைவில் அங்கு நின்றபடியே தொழுது தங்கியிருந்தார்.

3857. திருஇரா மேச்சரத்துச் செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர் வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர் மலைவேந்த ருடன்கூட.

தெளிவுரை : திரு இராமேச்சரத்தில் சிவந்த பவளம் போன்ற சுடர்க் கொழுந்தான இறைவரை வணங்கித் தொழுது போய், இறைவரின் பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, வன்தொண்டர் மலைநாட்டு மன்னரான சேரமானுடன் கூடப் பெரிய வானூர்திகளில் வந்து தேவர் வணங்கும் பெரிய திருச்சுழியலை வந்து அடைந்தார். 

3858. திருச்சுழியல் இடங்கொண்ட செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக் காப்பாரைக் கடல்விடத்தின்
இருட்சுழியு மிடற்றாரை யிறைஞ்சியெதி ரிதழிமலர்ப்
பருச்சுழியத் துடனூனா யுயிரெனும் பாமலர்புனைந்தார்.

தெளிவுரை : திருச்சுழியலில் இடம் கொண்டு வீற்றிருக்கின்ற செம்பொன்மலையையே வில்லாய் ஏந்தியவரைக் கருப்பமான சுழியில் விழாமல் காப்பவரைக் கடலில் எழுந்த நஞ்சின் கடுமை உடையவரைத் திருமுன்பு விழுந்து வணங்கிக் கொன்றை மலர் மாலையால் ஆன பருத்த சுழியத்துடன் கூட ஊனாய் புகலாய் எனத் தொடங்கும் சொல் மாலையைச் சூட்டினார்.

3859. அங்கணரைப் பணிந்துறையும் ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண் காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந் திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம் என்புருக முன்காட்டி.

தெளிவுரை : இறைவரைத் தொழுது தங்கியிருந்த நம்பியாரூரர்க்கு அந்த ஊரில் இரவில் கனவில் வெளிப்பட்டுக் காளையான வடிவத்துடன் தோன்றிச், சிவந்த கையிலே பொற்செண்டும், முடியில் சுழியமும் என்னும் இவற்றுடன் எங்கும் காண முடியாத திருக்கோலத்தை எலும்பும் உருகும்படி முன்னே காட்டி,

3860. கானப்பேர் யாம்இருப்ப தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும் மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந் ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார் அருளிருந்த பரிசென்பார்.

தெளிவுரை : யாம் இருப்பது கானப்பேர் என்று கூறி, வானத்தில் கங்கை என்று பேராறு தங்குதற்கு இடமான பெருமுடியையுடைய பெருமான் மறைந்தருள, ஞானத்தின் பேராட்சியையுடைய நம்பியாரூரர் விழித்து உணர்ந்து, அதிசயம் கொண்டு, பாம்புடன் பன்றியின் கொம்பையும் அணிந்த இறைவரின் திருவருள் என்னிடம் இருந்த தன்மை தான் என்னே ! என்றார்.

3861. கண்டருளும் படிகழறிற் றறிவார்க்கு மொழிந்தருளிப்
புண்டரிகப் புனற்சுழியல் புனிதர்கழல் வணங்கிப்போய்
அண்டர்பிரான் திருக்கானப் பேரணைவார் ஆரூரர்
தொண்டரடித் தொழலும்எனுஞ் சொற்பதிகத் தொடைபுனைவார்.

தெளிவுரை : தாம் கண்ட தன்மையையும் சிவபெருமானின் அருளின் தன்மையையும் சேரமானுக்கு எடுத்துக் கூறித் தாமரை மலர்களையுடைய நீர்நிலைகளையுடைய திருச் சுழியலில் இறைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று தேவர் தலைவரான இறைவரின் திருக்கானப் பேர் என்ற பதியை அடைபவரான நம்பி ஆரூரர் தொண்டரடித் தொழலும் எனத் தொடங்கும் பதிகத் தமிழ் மாலையைப் பாடலானார்.

3862. காளையார் தமைக்கண்டு தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத் தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன முனைப்பாடி வளநாடர்.

தெளிவுரை : காளையாரான இறைவரைக் கண்டு வணங்குவது என்றோ ? எனப் பாடி, மனிதரைத் தொலைவில் காண அஞ்சிய நீர்நாயின் பக்கத்தில் வாளை மீன்கள் பாயும் நுழை சேற்றையுடைய வயல் சூழ்ந்த திருமுனைப் பாடி நாட்டின் தலைவரான நம்பி ஆரூரர், திருவடிகளை நாளும் பரவும்படி, தரும் பரமரிடத்துச் சேரலானார்.

3863. மன்னுதிருக் கானப்பேர் வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார் செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை பாடினார் பரவினார்.

தெளிவுரை : நிலைபெற்ற கானப்பேர் என்னும் வளம் பதியினை வந்து அடைந்து, தலையில், வளர்கின்ற பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் கோயிலை வளமாக வந்து அதன் முன்பு வணங்கி, உள்ளே புகுந்து அணைந்து, முதல்வனாரின் சேவடிகளில் விழுந்து வணங்கிப் பன்னும் செழுந்தமிழ்மாலையைப் பாடி வணங்கினார்.

3864. ஆராத காதலுட னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர் சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக் கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப் பொருப்பர்திருப் புனவாயில்.

தெளிவுரை : நிறைவுபெறாத பக்தியுடன் அந்தப் பதியில் வணங்கித் துதித்துச் சிறந்த தொண்டர்களான நம்பியாரூரரும் சேரமானும் அங்குச் சில நாட்கள் விரும்பித் தங்கியிருந்து, மேகங்கள் தங்குவதற்கு இடமான மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருக்கானப் பேர் என்ற பதியைக் கடந்து போய்ப் போரில் வல்ல காளையை யுடையவரும் கயிலை மலையை உடையவருமான இறைவரின் திருப்புனவாயிலைப் போய் அடைந்தார்கள்.

3865. புனவாயிற் பதியமர்ந்த புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார் திருப்பாதந் தொழுதிருந்தார்.

தெளிவுரை : திருப்புனவாயில் என்ற பதியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலுட் புகுந்து உள்ளத்துள் பெருவிருப்பம் கொள்ளச் சித்த நீ நினை என்னோடு எனத் தொடங்கும் வினா அமைத்துச் செந் தமிழ்ப் பதிகத்தைப் பாடி நிலமுற விழுந்து வணங்கி, மத யானையை உரித்து அணிந்து கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி அப்பதியில் தங்கியிருந்தனர்.

3866. திருப்புனவா யிற்பதியில் அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம் பாம்பணிமா நகர்தன்னில்.

தெளிவுரை : திருப்புனவாயில் என்ற பதியிலே அமர்ந்திருக்கும் சிவபெருமானின் மகிழ்ந்தருளும் விருப்புடைய கோயில்கள் பலவற்றையும் வணங்கி, அருள் விடைபெற்று, குன்றுகளும் காடுகளும் கடந்து நீங்கி, நீர் வளம் உடைய காவிரி நாட்டை அடைந்து, மலையான நீண்ட வில்லையுடைய இறைவரின் திருப்பாம்பணி என்று வழங்கும் நகரத்தில் சேரமானுடன் நம்பியாரூரரும் போய் அடைந்தனர்.

3867. பாதாளீச் சரமிறைஞ்சி அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல் வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார் மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந் திருவாரூர் சென்றணைந்தார்.

தெளிவுரை : திருப்பாதாளீச்சரத்தில் இறைவரை வணங்கிச் சென்று அதன் பக்கத்தில் உள்ள பல தலங்களிலும் மறைகளுக்கெல்லாம் ஆதியாரான சிவபெருமானின் திருவடியை வணங்கிச் சென்று சூதாடும் கருவி போன்ற இரண்டு கொங்கைகளையுடைய மங்கையரின் அழகிய வாயினுக்குத் தோற்றதால் பகலில் வாய் திறக்க ஆற்றாது இரவு நேரத்தில் செவ்வாம்பல் மலர்கள் வாய் திறப்பதற்கு இடமான திருவாரூரில் மிக விரைவாக வந்து அடைந்தார்.

3868. திருநாவ லூர்வேந்தர் சேரர்குல வேந்தருடன்
வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தருகாத லுடன்வணங்கித் தம்பெருமான் கோயிலினுள்
பெருகார்வத் தொடுவிரும்பும் பெரும்பேறு பெறப்புகுந்தார்.

தெளிவுரை : திருநாவலூர்த் தலைவரான நம்பியாரூரர் சேரர்களின் குல மன்னருடன் வர திருவாரூரில் வாழ்பவர்கள் எதிர்கொள்ள, மிக்க விருப்பத்துடனே வணங்கித், தம் இறைவரின் திருக்கோயிலுக்குள் பெருகும் விருப்புடனே வணங்கும் பெரும் பாக்கியத்தைப் பெறும் பொருட்டுப் போய்ப் புகுந்தனர்.

3869. வாசமலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார் பயில்கோயில் பணிந்தணைவார்.

தெளிவுரை : மணம் பொருந்திய கொன்றைமலர் சூடிய இறைவர் மகிழும் கோயிலை வலமாக வந்து, அன்பு பொருந்தத் திருமுன்பு வணங்கிப் பெரிய வழிபாட்டுக் காலங்களில் எல்லாம் துதித்து, நீண்ட காலம் பிரிந்திருந்த வருத்தத்தால் திருப்பதிகத்தை எடுத்துப் பாடித் துதித்து நீங்கி, அருள் விடைபெற்று, வெளியே வந்து, பாசவினைப் பற்றுக்களை அறுப்பவரான இறைவர் வீற்றிருக்கின்ற கோயிலைப் பணிந்து வெளியே சென்றார்.

3870. பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு பொன்னணிமா ளிகைபுகுந்தார்.

தெளிவுரை : பாவையாரின் மாளிகையில் பரிவாரங்கள் முன் சென்று சேர்ந்தனராகப், பொருந்தும் பெரிய அலங்கார வகைகளான தூய மங்கலங்கள் மிகுதியும் செய்து, பரவையார் எதிரே வந்து வரவேற்று அடிகளை வணங்க, நம்பியாரூரர் மலை நாட்டரசனான சேரமானையும் உடன் அழைத்துக்கொண்டு பொன் அணியுடைய அழகிய மாளிகையுள் புகுந்தார்.

3871. பரவியே பரவையார் பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள் விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார் திருந்தியதேன் மொழியினார்.

தெளிவுரை : பரவையார் அவர்கள் உள்ளே வந்தவுடன் உபசார மொழிகளைக் கூறிப் பரவி, அன்புடன் பணிந்து, துதித்துப் பொருந்திய திருவமுதும் கறிகளும் பலப்பல வகையாய்ச் சமைக்கச் செய்து திருத்தம் பெற்ற தேன் போன்ற சொல்லை யுடையவராகி, உண்ணும் பரிகலமும் அதன் கீழ் இடும் திருப்பாவாடையும் பகல் விளக்கும் உடனே ஒழுங்குபட அமைத்து, அவ்விருவருக்கும் பரிவாரங்களுக்கும் திருவமுது செய்வித்தார்.

3872. மங்கலமாம் பூசனைகள் பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம் புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா நல்விளையாட் டினைநயந்தார்.

தெளிவுரை : இறைவரின் திருவடிகளில் பரவையார் செய்யும் வழிபாட்டால் நாள்தோறும் இன்பம் அடைந்து தங்கியிருப்பவரான நாயனார் இவ்வுலகத்தில் , தம்மிடம் வந்து இரந்தபவர்களுக்கும் வறியவர்களுக்கும் எல்லாருக்கும் வேண்டிய வண்ணமே அளிக்கின்ற வகையால் செம்பொன்னை மழை போல் பொழிந்து திருத்தும் வெற்றியுடன் கூடி, வானவர் போற்றத் தம் இறைவருக்குரிய வேள்விகள் பலவற்றையும் செய்தார்.

3873. நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல் கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால் வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின் அமர்விரும்பி யமர்கின்றார்.

தெளிவுரை : நிலைச் செண்டு வீசுதலும் (நின்றபடியே பந்து போன்றதை வீசி விளையாடுதலும்) பரிக் கொண்டு வீசுதலும் (குதிரை மீது அமர்ந்து இடம் வலமாக வீசிக் செண்டை விளையாடுதலும்) விலக்குவதற்கு அரிய போர் செய்கின்ற ஆட்டுக்கடாக்களின் பாய்ச்சலைப் பார்த்தும் வெற்றிபெறும் பொருட்டுப் போரில் நீண்ட முள்ளையுடைய கணைக்கால் கோழிகளின் போரைக் கண்டு மகிழ்ந்தும், அவ்வாறே போரிடும் வலிய பல பறவைகளின் போரை விரும்பியும் அங்குத் தங்கியிருப்பவராய்,

3874. விரவு காதல் மீக்கூர மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார் தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள.

தெளிவுரை : மிக்க பெருவிருப்பம் மேலும் அதிகரிக்க இவ்வாறு தங்கும் நாள்கள் பல கழியக், கரத்தல் இல்லாத கொடைத் தன்மையுடைய சேரமான், உடன் சூழ்ந்த தங்கள் மலைநாட்டின் பரவையார் கணவனாரான நம்பியாரூரர் வணங்கி உடன் அழைத்துக்கொண்டு செல்லுதற் பொருட்டு, இரவும் பகலும் வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டார்.

3875. நங்கை பரவை யார்உள்ளத் திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப் பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக் கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.

தெளிவுரை : பரவையம்மையாரின் உளமார்ந்த சம்மதத்தைப் பெற்று நம்பியாரூரர் புறப்பட்டாராக, பிறைச் சந்திரனை அணிந்த இறைவரின் திருவருளை இவ்வாறு பெற்றதன் பொருட்டுத் துதித்துச் சேரமான் பெருமாள் அத்தலத்தில் எங்கெங்கும் உள்ள சிவனடியார்க்குத் தக்கவாறு பூசைகள் செய்து மேல் எழுகின்ற முயற்சியினால் இருபெரு மக்களும் இறைவரின் பூங்கோயிலுக்குள் சென்றனர்.

3876. தம்பி ரானைத் தொழுதருளால் போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர் நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற் றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர் தொழுது மேல்பாற் செல்கின்றார்.

தெளிவுரை : தம் இறைவரைத் தொழுது அருள் விடை பெற்று, வெளியே வந்து, தொண்டர்கள் உடன் சேர்ந்து அணைய, நம்பியாரூரரும் சேர நன்னாட்டின் மன்னரான பசும்பொன் முடி சூடிய சேரமான் பெருமாள் நாயனாரும் பயணமாய்ப் புறப்பட்டுச் சென்று செம்பொன் அணிந்த நீடிய மதில் சூழ்ந்த திருவாரூரினை வணங்கி, மேற்குத் திக்கில் செல்லலானார்கள்.

3877. பொன்பரப்பி மணிவரன்றிப் புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல் விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன் பணிந்துபுறத் தணைந்தார்கள்.

தெளிவுரை : பொன்னைக் கொழித்துப் பரப்பியும் மணிகளை வாரிக் கொழித்தும், நீர் பரவிச் செல்லும் காவேரி ஆற்றின் தென்கரை வழியே போய்ச் சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில்கள் பலவற்றிலும் வணங்கி, மின் போன்ற ஒளி வீசுகின்ற சடையையுடைய இறைவர் விருப்புடன் வீற்றிருக்கின்ற திருக்கண்டியூரை அன்பால் உருக்கப்படும் மனத்துடன் போய்ப் பணிந்து வெளியே வந்தனர்.

3878. வடகரையில் திருவையா றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங் காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.

தெளிவுரை : வடக்குக் கரையில் திருவையாறானது எதிரே தோன்றவும், உடலும் உள்ளமும் உருக, மலர் போன்ற கைகளைத் தலைமீது குவித்துக் கடல் பெருகி வந்தது என்னுமாறு பெருகி வரும் காவேரி ஆற்றைக் கடந்து, வடக்குக் கரையில் ஏறிச் சென்று, இடையறாத தொடர்பு பூண்ட இறைவரின் திருவடியை வணங்குவதற்கு எண்ணம் கொண்டனர்.

3879. ஐயா றதனைக் கண்டுதொழு தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு கடந்து பணிவோம் நாமென்ன.

தெளிவுரை : இலக்குமி நீங்காத இயல்புடைய சேரமான் பெருமாள் நாயனார், திருவையாற்றை வணங்கி, அருளையுடைய நம்பியாரூரரைப் பார்த்து, அருள் செய்பவராய், நஞ்சுண்ட கழுத்தினை உடைய இறைவர் வீற்றிருக்கின்ற திருவையாற்றைப் போய்ப் பணிய உள்ளம் உருகிடலாயிற்று. நாம் இந்த ஆற்றைக் கடந்து செல்வோம் ! எனக் கூற,

3880. ஆறு பெருகி இருகரையும் பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார் தரியா தழைத்துப் பாடுவார்.

தெளிவுரை : காவிரி ஆறு பெருக்கெடுத்து இரண்டு கரைகளையும் அலைத்து வானத்தில் எழுவதைப் போல் வேறு மரக் கலங்களாவது ஓடங்களாவது மேல் செல்லாதபடி மிகுத்துச் செல்லத் திருநீறு விளங்கும் மேனியையுடைய இறைவரின் திருவடிகளைப் பணிந்து, அன்பின் ஆற்றின் வழியாகச் செல்லும் உரிமை கொண்ட நம்பியாரூரர், பொறுக்க இயலாது இறைவரை விளித்துப் பாடத் தொடங்கி,

3881. பரவும் பரிசொன் றெடுத்தருளிப் பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர் நின்று தொழுது பாடுதலும்.

தெளிவுரை : பரவும் பரிசு எனத் தொடங்கி, பாடும் பாட்டுகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் பாம்பை அணியும் இறைவரை ஐயாறுடைய அடிகளே என்று பொருந்திய ஆசையுடன் அழைத்து விளக்கம் கொண்ட பெருமையுடைய திருப்பதிகத்தை நிரவும் பண்ணிசையமைய வன்தொண்டப் பெருந்தகையார் நின்று தொழுது பாடவும்,

3882. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள் எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா நதியு நீங்கி நெறிகாட்ட.

தெளிவுரை : அம்பலத்துள் நிறைந்து திருக்கூத்து ஆடலில் வல்ல இறைவர் தன் கன்று தடைப்பட்டு எதிர் கூப்பிடக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் புனிற்றுப் பசுவைப் போல் ஒன்றுபட்ட உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்கும்படி ஓலம் என்று நின்று மொழிந்தார். அப்போது அக்காவிரியாறும் தொடர்ச்சி நீங்கி வழி காட்ட,

3883. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர் வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக் கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங் கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.

தெளிவுரை : வானத்தை முட்டும் பெருக்கெடுத்த காவிரியாறு மேல் பக்கத்தில் பளிங்கு மலை போல் தாங்கி நிற்க, கீழ்ப்பக்கத்தில் நீர் வடிந்த இடையில் நல்ல வழியினை உண்டாக்கிக் குளிர்ந்த மணலைப் பரப்பக் கண்ட தொண்டர்கள், மிக்க மழைபோல் கண்ணீர் பொழிந்து திருமேனி மயிப்புளகம் கொள்ளக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கினர்.

3884. நம்பி பாதஞ் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத் தடங்கா வேரி நடுவணைந்தார்.

தெளிவுரை : நம்பியாரூரரின் திருவடியைச் சேரமான் பெருமாள் போற்றி வணங்க, நாவலூரில் வந்தருளிய செம் பொன் போன்ற விளக்கம் கொண்ட முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய நம்பியாரூரரும் சேரமான் பெருமாளை எதிர் வணங்கி, இது தேவ தேவர் உமக்கு அளித்த திருவருள் அன்றோ? எனக் கூற, இருவரும் கூடி மகிழ்ந்து இறைவரைத் துதித்துப் பரவிப் பெரிய காவிரியின் நடுவே சென்றனர்.

3885. செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின் இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்.

தெளிவுரை : செம்மையுடைய சொல் பொருந்திய தமிழ் நாவலர் பெருமானும் சேரமானும் தம் இறைவர் குறைவில்லாமல் நிறையப் பெருகிய ஆற்றின் நடுவில் அளித்தருளிய மணல் வழியில் தம் பரிவாரங்களும் தாமும் ஏறிப் போய்த் திருவையாற்று இறைவரைப் பணிந்து நிலத்தில் விழுந்தனர்; எழுந்தனர்; துதித்தனர்.

3886. அங்கண் அரனார் கருணையினை ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர் துரந்து தொடரப் பெருகியதால்.

தெளிவுரை : அருள் நோக்கமுடைய இறைவரின் திருவருளை நிறைவு பெறாத வகையில் அமைதிப் படுத்திக் கொண்டு அதில் முழுகி வணங்கித் தம் பெருமானின் திருமுன்பு வணங்கி, அங்கு நின்றும் மீண்டு வந்து, பெரிய காவிரியாற்றின் முன் வந்த வழியே நடுவுள் சென்று கரையேறப், பெரிய மலை போன்று நின்ற நீர் விரைந்து தொடர்ந்து முன்போல் பெருகி ஓடியது,

3887. ஆய செயலின் அதிசயத்தைக் கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம் பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார் திருவா ரூரர் சேரருடன்.

தெளிவுரை : இத்தகைய அருள் செயலின் அதிசயத்தைக் கண்டு அந்தக் கரையினின்று திருவையாற்றின் பொருந்திய இறைவரின் திருவருளைத் துதித்து நிலமுற விழுந்து வணங்கி எழுந்து, மேற்குத் திக்கில் சென்று, தூய பிறைச் சந்திரன் வாழ்வதற்கு இடமான சடையையுடைய இறைவரின் பிற தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துப் போய்ச் செம்மையுடைய கொங்கர்களின் நாட்டை, நம்பியாரூரர் சேரமானுடன் போய்ச் சேர்ந்தார்.

3888. கொங்கு நாடு கடந்துபோய்க் குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.

தெளிவுரை : கொங்கர் நாட்டைக் கடந்து போய் விளங்கும் மலை நாட்டின் எல்லையைச் சேர, நம் பெருமானின் தோழரான நம்பியாரூரரான தம்பிரான் தோழர், அங்கு ஒருசேர அணைவதற்குப் புறப்பட்டு வருகின்றார் என்ற விருப்பத்தினால் அந்நாட்டில் எங்கும் உள்ளவர் எல்லாரும், அவர்களை வரவேற்று எதிர்கொண்டு இன்பம் அடையலானார்.

3889.  பதிகள் எங்குந் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர் மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.

தெளிவுரை : அந்நகரத்தில் எங்கும் தோரணங்களும் பக்கங்களில் எங்கும் பூவனங்களாக ஆக்கி அணிகளும், வழிகளில் எங்கும் குளிர்ந்த பந்தல்களும் வீடுகளில் எங்கும் மேகம் போல் எழும் அகில் புகையும், ஆறுகளில் எங்கும் அவற்றால் ஒதுக்கப்படும் மணி பொன் முதலியனவாய் ஓங்குவனவான நிதியங்களும், எங்கும் முழவின் ஒலிகளும் நிலம் எங்கும் ஒளி கொண்ட பொன் பூமழையும் (என இவ்வாறு அலங்கரிக்க)

3890. திசைகள் தோறும் வரும்பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங் கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத் தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.

தெளிவுரை : இவ்வாறு எல்லாத் திக்குகளிலும் வரும் பெருமைகளையும், அமைச்சர்களும் படைகளும் கூடிய பெருவெள்ளத்தையும் பிடரி மயிரையுடைய குதிரை அணி வகுத்த வெள்ளத்தையும் மத்தகத்தையுடைய யானைப் படையின் வெள்ளத்தையும், மேற்கொண்டருளும் அலங்காரத்தை யுடைய பெண் யானைகளின் வெள்ளத்தையும் விரும்பும் சோற்றுப் பெருக்கங்களான வெள்ளத்தையும் பார்த்துக் கெடாத இன்பமாகிய வெள்ளத்தில் முழுகிக் கொடுங்கோளூரை நம்பியாரூரரும் சேரமான் பெருமாளும் அடைந்தனர்.

3891. கொடுங்கோ ளூரின் மதில்வாயில் அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள் சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வே றலங்கரித்து.

தெளிவுரை : அக் கொடுங்கோளூரில் மதில் வாயிலை அணிகளால் அலங்காரம் செய்து வீதிகளில் விண்மீன்களை அளாவ உயர்ந்த கோபுரங்கள், மாளிகைகள், நிலா முற்றங்கள், குளிர் சாலைகள், திண்ணைகள், நீண்ட அரச நகர்கள், ஆடரங்குகள் என்னும் இவற்றை மணிமாலைகள் கமுகு, தொங்க விட்ட பூமாலைகள் முதலானவற்றால் வரிசைப்பட வெவ்வேறு விதமாய்த் தனித்தனி அலங்காரம் செய்து,

3892. நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார் சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.

தெளிவுரை : அந்நகரத்து மக்கள் எதிர்கொள்ள வந்து சேர்த்து, அளவற்ற ஆடரங்குகள் தோறும் மகரக் குழையணிந்த பெண்கள் பாடி ஆட, அழகான வீதியில் சேர்வாராய், தம் சிகரங்களையுடைய பெரிய மாளிகையில் சேராது, மேலே போய்த் திருவஞ்சைக் களத்தில் ஒப்பில்லாத திருத்தொண்டரான நம்பியாரூரரை உடன் அழைத்துக் கொண்டு, சேரமான் புகுந்தார்.

3893. இறைவர் கோயில் மணிமுன்றில் வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம் முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப் பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.

தெளிவுரை : சிவபெருமானின் கோயிலின் மணி முன்றிலை வலமாகச் சூழ்ந்து வந்து வணங்கி, எதிரே சென்று, நிறையும் பெரு விருப்புடன் நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, திருமுன்பு நேர் நின்று, நம்பியாரூரர், முறைமையாய்த் துதிக்கின்ற திருப்பதிகத்தை முடிப்பது கங்கை எனத் தொடங்கி, பிறைச் சந்திரன் சூடிய முடியாரான இறைவரைப் பாடித் துதித்துச் சேரமான் பெருமாளுடனே வணங்கினார்.

3894. தொழுது திளைத்துப் புறம்போந்து தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன் பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப் பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.

தெளிவுரை : வணங்கி இன்பம் அடைந்து, வெளியே வந்து, சேரமான் பெருமான் உலா விளங்க, அலங்காரம் செய்யப் பெற்ற பிடியின் மேல், உலகம் எல்லாம் போற்றும்படி நம்பியாரூரரை முன்பு ஏற்றிப் பின்பு தாமும் ஏறிக் குற்றம் அற்ற அழகிய சாமரைகளை வீசிப் பசும் பொன்னால் அணி செய்யப்பட்ட மணி மாளிகையின்கண் வரும் போது, தெருவின் இரு பக்கமும் நெருங்கிய மக்கள் இந்த உலாக் கண்டு வாழ்த்திச் சொல்லலாயினர்.

3895. நல்ல தோழர் நம்பெருமாள் தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென் செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம் சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய் தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.

தெளிவுரை : அம் மக்களுள் சிலர், நம் மன்னரான பெருமாளுக்கு இவர் நல்ல தோழர் ! என்பர். சிலர், இவரைக் கண்டு தொழுவதற்கு நாம் அளவற்ற தவம் முன்பு என்ன செய்தாம் ! என்பர். சிலர், நம் மலை நாட்டுக்கு இனிப் பெற வேண்டிய வேறு செல்வம் என்ன உள்ளது? என்பர். சிலர், சொல்லும் அளவில் அடங்குமோ நம் பெருமாள் செய்யும் தொழில் ! அதனைப் பாரீர் ! என்பர்.

3896. பூவும் பொரியும் பொற்றுகளும் பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.

தெளிவுரை : சிலர் பூவையும் பொரியையும் பொன் தூளையும் கலந்து வீசி வணங்குவர். தங்கட்கு ஒப்பில்லாத இவர் பொருந்திய காவிரித் திருநாடே உலகுக்குத் திலகம் போன்று விளங்குவதாகும் என்று சிலர் வியந்து உரைப்பர். இங்ஙனம் துதிக்கும் எப் பக்கத்திலும் மிக, வந்து சேர்ந்து, திருமாளிகையின் முன் குதிரைகளும் யானைகளும் நெருங்கும் மணி வாயிலுள் புகுந்து, பக்கத்தில் சுந்தரரும் சேரமானும் இறங்கினர்.

3897. கழறிற் றறியுந் திருவடியும் கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள் முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர்நின்று.

தெளிவுரை : சுழறிற்றறிவாரான சேரமான் பெருமாளும், கலைகளில் வல்ல நாவலரின் பெருமானாம் முழவைப் போன்று விளங்கும் பெருந் தோள்களையுடைய நம்பி ஆரூரரை அழைத்துக் கொண்டு சென்று, திருவிழாச் சிறப்புடைய மாளிகையுள் விளங்கும் அரியணையின் மீது திக்குகளில் எல்லாம் ஒளி வீசும் அணிகளை அணிந்த ஆரூரரை அமர்ந்திருக்கச் செய்து தாமும் அவன் முன்னே நேர் நின்று.

3898. செம்பொற் கரக வாசநீர் தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங் கெல்லாம் இசைய வேண்டுமென.

தெளிவுரை : செம் பொன் கரத்தில் மணமுடைய நல்ல நீரைத் தம் தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்கத் தாம் அழகிய பொற் பாதங்களைத் தாமே விளக்கத் தொடங்கிய போது, நம்பியாரூரர் தம் அடிகளை உள் வாங்கி இழுத்துக் கொண்டு இது செய்தல் தகாது என்று அருளிச் செய்ய, நிலத்தில் விழுந்து வணங்கி, எம் அன்பின் தகுதிக்கு ஏற்றவாறு செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வேண்டினார்.

3899. பெருமாள் வேண்ட எதிர்மறுக்க மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான் செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த ருடனே அமுது செய்துவந்தார்.

தெளிவுரை : சேரமான் இவ்வாறு வேண்டிக் கொள்ள அதனை எதிர் மொழி சொல்லி மறுக்க இயலாது அன்பால் பெருந் தகுதியுடையவரான நம்பியாரூரர், திருப் பொருந்திய பெரிய தோள்களையுடைய சேரமான் பெருமான் செய்தவற்றை எல்லாம் கண்டு இருந்தனர். அரிய பெரிய பூசைகள் எல்லாவற்றையும் முறைப்படி அவர் செய்த பின்பு, ஒப்பற்ற முழுமதியைப் போன்ற வெண்குடையை யுடைய சேர மன்னருடன் அமர்ந்து ஆரூரர் திருவமுது செய்து மகிழ்ந்திருந்தார்.

3900. சேர ருடனே திருவமுது செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான் மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள் இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச் சாத்தி மிக்க தமக்காக்கி.

தெளிவுரை : சேர மன்னருடன் உடன் அமர்ந்து உணவு உண்டபின்பு, ஆரங்களும் மணமுடைய சந்தனம் கலந்த கத்தூரிச் சாந்தும், ஆடையும், அணியும், மணிப் பூண்களும் குளிர்ந்த மணக்கும் மலர் மாலைகளும் என்ற இவை முதலான வருக்கங்களைத் தம் தம் கையை வளைத்துச் சாரும்படி எடுத்து வன் தொண்டர்க்குச் சாத்தியும் மிஞ்சியவற்றைத் தமக்குப் பயன்படுத்தியும்,

3901. பாடல் ஆட ல் இன்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய் ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.

தெளிவுரை : பாடலும் ஆடலும் இனிய இசைக் கருவிகள் இசைத்தல் முதலான மகளிர் விளையாட்டில் நீடும் இனிய விநோத நிகழ்ச்சிகளும் காலங்கள் தோறும் நிகழ்த்தியும், பக்கங்களில் மணமுடைய மலர்களால் மரங்கள் மணம் வீசும் சோலைகளில் அமர்வித்தும், தம்முடன் திருமுனைப் பாடி நாட்டின் தலைவர் பெருமானான நம்பியாரூரரையும் கொண்டு, பெருமாக் கோதையார் என்னும் சேரமான் மகிழ்ந்திருந்தார்.

3902. செண்டாடும் தொழின்மகிழ்வும் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக் காவலனார் காதல்செய்நாள்.

தெளிவுரை : பந்தாடுகின்ற தொழிலின் நிகழ்ச்சியும் சிறு சோறு உண்ணும் பெருஞ்சிறப்பும், வண்டுகள் தங்குவதற்கு இடமான பூக்கள் நிறைந்த பொய்கைகளில் பொருந்திய நீரில் விளையாடுதலும் குறைவற்ற மும்மதங்களையும் மத்தகத்தையும் உடைய பெரிய மலை போன்ற யானையினது போரும், சினத்துடன் போர் செய்யும் மற்போரும் என்ற இவற்றைக் காணும்படிச் செய்து, நிறைவுறாத பெரிய விருப்பம் பொருந்தும்படி சேரமான் நம்பியாரூரர்க்கு மகிழ்வை ஏற்படுத்தினார். ஏற்படுத்திய நாளில்,

3903. நாவலர்தம் பெருமானும் திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள் மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.

தெளிவுரை : நாவலர் பெருமானான நம்பி ஆரூரர், திருவாரூரை ஆட்கொண்ட வானவர் தலைவரான இறைவரின் திருவடிகளை ஒருநாள் மிகவும் நினைவிற் கொண்ட உள்ளத்தவராய் என் உயிர் போன்றவரைத் திருவாரூர் இறைவரை மறுக்கலும் ஆமே என்ற கருத்தும் முடியும் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அச்சம் கொண்டார்.

3904. திருவாரூர் தனைநினைந்து சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன் வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார் பிரிவாற்றார் பின்செல்வார்.

தெளிவுரை : திருவாரூரை நினைந்து கொண்டு அங்குப் போய்த் தொழுவேன் ! என்று மனத்தில் எண்ணி மேற்கொண்டு, பேரன்புடைய தொண்டர்களுடன் புறப்பட்டுச் செல்ல எழுந்தபோது, பெரிய சேரமான் பெருமாள் நாயனார், நீங்காத நட்பினால் உள்ளம் உள் உருக அவருடன் எழுந்து, கை கூப்பி வணங்கிப் பிரிவாற்றாமல் அவரது பின் செல்லலானார்.

3905. வன்றொண்டர் முன்எய்தி மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன் என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி அரசாளும் எனமொழிந்தார்.

தெளிவுரை : வன் தொண்டரின் முன் போய், உள்ளம் அழிந்த உணர்ச்சியினை உடையவராய், இன்று உம் பிரிவைத் தாங்க மாட்டாதவன் ஆனேன் ! நான் என்ன செய்வேன் ! எனக் கூறினார். நீர் ஒரு சிறிதும் வருந்தாமல் உம் நகரத்தில் இருந்து கொண்டு பகைவரைப் போரில் அழித்து ஆட்சி செலுத்துவீராக ! என்று சுந்தரர் உரைத்தார்.

3906. ஆரூரர் மொழிந்தருள அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல் நீக்கவும்அஞ் சுவன்என்றார்.

தெளிவுரை : நம்பியாரூரர் முன் சொன்ன வண்ணம் கூறிய, அதைக் கேட்ட அருளையுடைய சேரமான் எனக்கு இவ்வுலகத்துடன் விண்ணுலகத்தின் அரசாட்சியுமாவது தங்களின் திருவடி மலர்களே ஆகும். ஆனால் தேர் ஒடும் நீண்ட வீதியை யுடைய திருவாரூர்க்குத் தாங்கள் எழுந்தருளுவதற்குக் கொண்டெழுந்த உள்ளத்துப் பக்தியை விலக்கவும் யான் அஞ்சுவேன் ! என்றார்.

3907. மன்னவனார் அதுமொழிய வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர் நீரிருப்பீர் எனவிறைஞ்ச.

தெளிவுரை : அதைக் கேட்டபின்பு நம்பியாரூரர் மறுமொழியைச் சொல்லத் தொடங்கி, என் உயிருக்கும் இனிய உயிரான அழகிய திருவாரூர் இறைவரை வன்மையான நெஞ்சுடைய நான் மறந்து இங்குத் தங்கியிருக்கமாட்டேன் ! பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் இன்னருளின் துணையால் அரசை ஆள்வீர் ! இங்கே நீவிர் இருப்பீராக ! என்று வணங்கினார்.

3908. மற்றவரும் பணிந்திசைந்தே மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில் இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை ஏற்றிவரப் பண்ணும்என.

தெளிவுரை : அதைக் கேட்டபின்பு சேரமானும் வணங்கி அதற்கு இசைந்து தம் அமைச்சரை அழைத்து, அழகு நிறைந்த பழைய இந்த நகரத்தில் இன்றுவரை சேர்ந்த நல்ல பெரிய நிதியம் பல வகைகளால் உள்ளவற்றை யெல்லாம் பற்பல வகையாகும் ஆள்களின் மேல் ஏற்றிக் கொண்டு வரும்படி செய்யுங்கள் என்று ஆணையிட,

3909. ஆங்கவரும் அன்றுவரை ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள் ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல் தலம்மலியக் கொண்டணைந்தார்.

தெளிவுரை : அவர் ஆணையிட்ட வண்ணமே அந்த அமைச்சர்களும் அன்றுவரை சேர்ந்துள்ள ஆயமாகக் கூடிய நிதியங்களும் விலையுயர்ந்த பொன்னும் நவ மணிகளும் ஒளி வீசும் மணிகள் கொண்ட பூண்களும் ஆடைவகைகளும் பக்கங்களில் செறிந்த மணப் பொருள்களின் வகைகளும் என்னும் இவை முதலானவற்றை நன்மையால் சிறந்து விளங்கும்படி தாங்கும் மூடைகளாய் அமைத்து அதற்குரிய ஆண்களின் மீது ஏற்றி நிலம் நிறையக் கொண்டு வந்து சேர்த்தனர்.

3910. மற்றவற்றின் பரப்பெல்லாம் வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத் தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி விடையளித்தார் வன்றொண்டர்.

தெளிவுரை : அந்தச் செல்வங்களின் பரவிய மூடைகள் எல்லாவற்றையும் வன்தொண்டர் தம்பரிவாரங்களின் மூலம் முன்னே செல்லுமாறு விடுத்துத், தம் பொன்னடிகளை வணங்கிய சேரமான் பெருமானைத் திருமுனைப் பாடி நாட்டவரான வன்தொண்டர் தாமும் எதிர் வணக்கம் செய்து முகந்தெடுத்து அணிந்த மாலையையுடைய மலை போல் உயர்ந்த தோள்களைப் பொருந்தத் தழுவிக் கொண்ட பின்பு விடையளித்தார்.

3911. ஆரூரர் அவர்தமக்கு விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்.

தெளிவுரை : நம்பி ஆரூரர் சேரமான் பெருமாளுக்கு விடை தந்தருளி, அந்தநகரத்தினின்றும் நீங்கிச் சென்று, முகில்கள் தவழும் மலைகளையுடைய அந்த நாட்டைக் கடந்து கற்சுரங்களும் நீர் பெருகும் நாட்டு ஆறுகளும் நீண்ட காடுகளும் பல பின் படச் சென்று சிறப்புடைய திருமுருகன் பூண்டிக்குச் செல்கின்ற வழியில் செல்லத் தொடங்கினார்.

3912. திருமுருகன் பூண்டிஅயல் செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப் பெறுவதற்கோ அதுஅறியோம்.

தெளிவுரை : திருமுருகன் பூண்டியின் பக்கத்தில் செல்லும் போதில், போர் செய்யும் காளையையுடைய சிவபெருமான், நம்பி ஆரூரர்க்குத் தாமே பொன் தந்ததல்லாது, வேறு எவர் ஒருவரும் கொடுக்க அதனைக் கொள்ளலாகாது, என்ற தன்மையைக் காட்டுவதற்கு அதைத் தாம் வாங்கிக் கொண்டு பெருகும் திருவருளினால், தாமே கொடுப்பதற்கும் அவர் பெறுவதற்குமாக வரும் நிலை கூடுவதற்காகவோ அதை அறியோம் !

3913. வென்றிமிகு பூதங்கள் வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங் கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார் அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில் இருபாலும் செயிர்த்தெழுந்து.

தெளிவுரை : வெற்றி மிக்க பூதகணங்கள் வேடர் வடிவாய்ச் சென்று சுந்தரர் கொணரும் நிதியங்களைக் கவர்ந்து கொள்ளும்படி திருவருள் வைத்தருளவே, பகைத்தவரின் திரிபுரங்களையும் எரித்த இறைவரின் திருவருளால், அந்தப் பூதங்கள் வேடர் படையாக உருக்கொண்டு சென்று, அந்நாவலூரர் வரும் வழியில் இரண்டு பக்கமும் சினந்து எழுந்து,

3914. வில்வாங்கி அலகம்பு விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம் எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங் கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கணைந்தார்.

தெளிவுரை : வில்லை வளைத்து, அலகுடைய அம்புகளை விரைவாய்ச் செலுத்தும் நாணில் பூட்டி, இம் மூடைகளை இங்கு இட்டுச் செல்லுங்கள் ! இல்லையெனில் உங்களைக் கொள்வோம் ! என்று சினத்தால் குத்தி, அளவற்ற செல்வங்களை யெல்லாம் கவர்ந்து கொள்ளப், பறிக்கப்பட்டவர்களாகிய சுமையாட்கள் சிதறி ஓடி நம்பியாரூரின் பக்கம் சேர்ந்தனர்.

3915. ஆரூரர் தம்பால்அவ் வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன் பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார் கோயிலைநா டிப்புக்கார்.

தெளிவுரை : அந்த வேடர்கள் சுந்தரரிடம் செல்லாது நீரைத் தரித்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவருளால் நீங்கிச் செல்ல, அவர்கள் சேர்ந்த ஊரான திருமுருகன் பூண்டியில் போய் அடைந்து, போரில் வல்ல இளமையுடைய காளையை உடையவரான இறைவரின் கோயிலை நாடிச் சென்று ஆரூரர் அடைந்தார்.

3916. அங்கணர்தங் கோயிலினை அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந் திருமுன்பு சென்றணைந்தார்.

தெளிவுரை : சிவபெருமானின் கோயிலைக் கைகளை அஞ்சலியாய்க் குவித்து வணங்கி, மேகங்களைப் பொருந்தும்படி உயர்ந்த வாயிலைப் பணிந்து, பெருகும் விருப்பத்துடன் புகுந்து வலமாகச் சுற்றிவந்து, தூய்மையான கங்கையாற்றையும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்த இறைவரின் திருமுன்பு போய்ச் சேர்ந்தார்.

3917. உருகியஅன் பொடுகைகள் குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன் வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.

தெளிவுரை : உள்ளம் உருகிய அன்புடன் கைகளைத் தலை மீது குவித்து, நிலத்தில் விழுந்து, உமையம்மையின் பாகம் பொருந்திய தம் இறைவனின் முன்பு, அச்சம் பொருந்த வேடர்கள் வழிபறிக்கும் கொடியகாட்டில் எதற்கு இங்கு இருந்தீர்? என்ற கருத்துடைய, கொடுகு வெஞ்சிலை எனத் தொடங்கும் அழகிய சொற்களை உடைய திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடியருளினார்.

3918. பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன் குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார்.

தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் நம்பியாரூரர் பாடி வணங்கவும், பரம் பொருளான அவ்விறைவரின் அருளால் வேடுவர் பறித்துக் கொண்டு சென்ற பொருள்களை எல்லாம் வான் அளாவ நீடும் வாயிலின் முன் குவித்திடவும், அதைப் பார்த்து, நேர் வணங்கி, அருட்கூத்தாடும் இறைவரின் திருவருளால் அங்ஙனமே எடுத்துக் கொண்டார்.

3919. கைக்கொண்டு கொடுபோம்அக் கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால் விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்றணைந்தார்.

தெளிவுரை : எடுத்துக் கொண்டு செல்கின்ற அந்தச் சுமையாட்களைச் செல்லச் செய்து, நஞ்சையுண்டு விளங்கும் கண்டமுடைய இறைவரை வணங்கி விடை பெற்றுச் சென்று கொங்கு நாட்டை நீங்கிச் சென்று, உண்மை நிலைபற்றி எழுந்த பெருவிருப்பத்துடன் விரைவாய்ப் போய் மென் கரும்பும் வயல்களில் நெருங்கிய செந்நெல்லும் சூழ்ந்து விளங்கும் திருவாரூரைப் போய் அடைந்தார்.

3920. நாவலர்மன் னவர்அருளால் விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின் ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி அரசுரிமை புரிந்திருந்தார்.

தெளிவுரை : நாவலர் தலைவரான நம்பியாரூரரின் திருவருளால் விடை பெற்றுக் கொண்ட மன்னரான சேரமான் உயிரில் ஒன்றிய தன்மையுடைய நட்பையுடைய நம்பியாரூரரை இடைவிடாது எண்ணிய வண்ணமே, வண்டுகள் ஒலிப்பதற்கு இடமான மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த மாகோதை நகரில் வீற்றிருந்து, மலை நாட்டின் அரசினை மற்றவர்க்கு உரியதாக அன்றித் தமக்கே உரிமையாகக் கொண்டு ஆண்டுவந்தார்.

3921. இந்நிலைமை யுதியர்பிரான் எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின் மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந் திருத்தொழில்பின் மொழிகின்றாம்.

தெளிவுரை : இந்நிலைமையில் ஆளும் சேரமான் பெருமாள், எம் தலைவரான வன்தொண்டப் பெருந்தகையார் சோழ வளநாட்டை நீங்கி மகோதை என்ற நகரத்தில் இனிமேல் வருங்காலத்துப் புகுந்து நிலையான திருக்கயிலையில் யானையின் மேல் ஏறி எழுந்தருள, அப்போது, அவர் முன் தம் கொற்றக் குதிரையைச் செலுத்தி அவருடனே தாமும் திருக்கயிலைச் சேரும் திருச் செயலைப் பின்சொல்வோம்.

3922. மலைமலிந்த திருநாட்டு மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச் சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக் கணநாதர் திறமுரைப்பாம்.

தெளிவுரை : மலைகள்மிக்க செல்வமுடைய மலை நாட்டு மன்னவரான பெரிய கடல் போன்ற வில் எழுதிய கொடியைக் கொண்ட படைகளையுடைய சேரமன்னரின் திருவடிகளைத் துதித்து, நிலையினால் உயர்ந்த அழகிய மாடங்களையுடைய நீண்ட தெருக்கள் தோறும் பெரிய மறைகள் அவற்றை உட்கொண்ட கலைகளும் பயின்றொழுகும் திறம் மிக்க புகழையுடைய சீகாழியில் வாழ்ந்த கணநாத நாயனாரின் இயல்பைக் கூறுவோம்.

கழறிற்றறிவார் நாயனார் புராணம் முற்றிற்று.

44. கணநாத நாயனார் புராணம்

திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி. அங்கு வாழும் அந்தணர் குலத்தில் கணநாதர் பிறந்தார். சிவபெருமானுக்குத் தொண்டு செய்தார். மலர் பறித்தல், மாலை தொடுத்தல், திருமஞ்சன நீர் கொணர்தல் முதலான பல பணிகளைச் செய்து வந்தார். திருமுறைகள் எழுதவும் ஓதவும் கற்பித்தார். திருஞானசம்பந்தரைத் தெய்வமாக எண்ணி வணங்கி வந்தார். அதனால் அவர் கயிலாய மலையில் சிவகணங்களுக்கெல்லாம் தலைவர் ஆனார்.

3923. ஆழி மாநிலத் தகிலம்ஈன் றளித்தவள் திருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந் தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை யவர் குலக் காவலர் கணநாதர்.

தெளிவுரை : கடல் சூழ்ந்த பெரிய வுலகத்தில் எல்லாவுயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரின் கொங்கைப் பாலை உண்டதால், வாழ்வு அளித்த திருஞான சம்பந்த நாயனார் வந்து அவதரித்த அழகிய பெருமையுடையதான, அளவில்லாது ஆழாமல் மிதந்து நின்று உலகம் மீள உளதாவதற்கு ஒரு முதலான சீகாழிப் பதியில் மறையவர் தலைவராய் விளங்கியவர் கணநாதர்.

3924. ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநல் திருப்பணி
யாயின நாளும்அன் பொடுசெய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.

தெளிவுரை : அத்தகைய அன்பர் அழகிய மதில் சூழ்ந்த சீகாழிப் பதியில் விரும்பி எழுந்தருளிய திருத்தோணியப்பரின் நல்ல திருப்பணிகளை நாடோறும் செய்து, அவ்வாறு தொண்டைச் செய்யும் நிலைமையில் சிறப்பு விளங்குபவராய் விருப்புடன் வந்து சேர்கின்ற அன்பர்களுக்குத் தூய்மை யுடைய கைத் தொண்டாகிய சரியை நிலைகளில் அவர்களை அவ்வத் துறைதோறும் பயிலச் செய்பவராய் (விளங்கினார்).

3925. நல்ல நந்தன வனப்பணி
செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ம லர்த்தொடை புனைபவர்
கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பக லும் திரு
வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.

தெளிவுரை : நல்ல நந்தவனத்தில் பணி செய்பவரும், நல்ல கொத்துக்களில் மலர்ந்த மலர்களைக் கொய்பவரும் பல வகைப்பட்ட மலர்களை மாலைகளாகத் தொடுப்பவரும், போய்த் திருமஞ்சன நீரைக் கொணரும் பணிக்கு உரியவரும், இரவும் பகலும் திருவலகும் திருமெழுக்கும் அமைப்பவரும், அளவற்ற விளக்குகளை எரிப்பவரும், திருமுறைகளை எழுதுபவரும், அவற்றை வாசிப்பவரும்,

3926. இனைய பல்திருப் பணிகளில்
அணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின்
வினைவி ளங்கிட வேண்டிய
குறையெலாம் முடித்துமே விடச்செய்தே
அனைய அத்திறம் புரிதலில்
தொண்டரை யாக்கிஅன் புறுவாய்மை
மனைய றம்புரிந் தடியவர்க்
கின்புற வழிபடுந் தொழில்மிக்கார்.

தெளிவுரை : இத்தகைய பற்பல பணிகளில் வேண்டி வந்து சேர்ந்த அன்பர்களுக்கு அவரவர்க்கேற்ற அவ்வத் திருத்தொண்டின் செயல்கள் விளங்கும்படியாக அவர் வேண்டிய குறைகளை எல்லாம் போக்கி நிறைவாக்கி முடித்துப் பொருந்துமாறு செய்து, அத்தகைய திறங்களைச் செய்ததால் தொண்டர்களைப் பெருகும்படி செய்து, அன்பு பொருந்திய வாய்மையுடைய இல்லறத்தை நடத்தி வாழ்ந்து சிவனடியார்களுக்கு இன்பம் பொருந்தும்படி வழிபடும் தொழிலில் சிறந்து விளங்கினார்.

3927. இப்பெ ருஞ்சிறப் பெய்திய
தொண்டர்தாம் ஏறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ
னகர்கழல் மேவிய விருப்பாலே
முப்பெ ரும்பொழு தருச்சனை
வழிபாடு மூளும்அன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூர் உளங்களி
சிறந்திட வொழுகினார் வழுவாமல்.

தெளிவுரை : இத்தகைய பெருஞ்சிறப்பையுடைய அத்தொண்டர், அடியவரின் உள்ளங்களில் எப்போதும் ஏறும் சிறப்பு வளரும் சீர்காழியில் வந்த மெய்ப்பெருஞானம் உண்டவரான பிள்ளையாரின் திருவடியைப் பொருந்திய விருப்பினால், ஒவ்வொரு நாளிலும் மூன்று பெரும் பொழுதுகளிலும் அருச்சனை வழிபாட்டைப் பெருகும் அன்புடன் ஒப்பில்லாத பக்தி மிகுவதான உள்ளத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்படி செய்து வழுவாது ஒழுகி வந்தார்.

3928. ஆன தொண்டினில் அமர்ந்தபேர்
அன்பரும் அகலிடத் தினில்என்றும்
ஞான முண்டவர் புண்டரீ
கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர்
சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு
நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.

தெளிவுரை : இத்தகையதான தொண்டினை விரும்பியிருந்த பேரன்பரான கணநாதரும் பரந்த மண் உலகத்தில் எந்நாளும் ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடியை வழிபடுதலான தன்மையை அடைந்து அதன் பயனாய், தூய மணமுடைய கொன்றைப் பூக்களைச் சூடிய சடையுடையவரின் ஒளியுடைய நீண்ட திருக்கயிலை மலையை அடைந்து பெருமையுடைய நல்ல பெருஞ்சிவ கணங்களுக்கு நாதராகும் வழி வழி வரும் திருத்தொண்டிலே நிலைபெற்று நின்றார்.

3929. உலகம் உய்யநஞ் சுண்டவர் தொண்டினில் உறுதிமெய் யுணர்வெய்தி
அலகில் தொண்டருக் கறிவளித் தவர்திற மவனியின் மிசையாக்கும்
மலர்பெ ரும்புகழ்ப் புகலியில் வருங்கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்றுவண் கூற்றுவ னார்திறங் கொள்கையின் மொழிகின்றாம்.

தெளிவுரை : உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு நஞ்சையுண்ட சிவபெருமானின் தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியான மெய்யுணர்ச்சி பொருந்தப் பெற்று, அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர் தொண்டில் அறிவை அளித்து அவர் திறங்களை உலகிலே நிறுத்தும் விரிந்த பெரும் புகழையுடைய சீகாழியில் அவதரித்த கணநாதரின் திருவடிகளைத் துதித்து விளங்கும் திருநீற்றுச்சார்பு பூண்ட வன்மையுடைய கூற்றுவ நாயனாரின் இயல்பைக் கொள்கையின்படி சொல்லப் புகுகின்றோம்.

கணநாத நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.

45. கூற்றுவ நாயனார் புராணம்

கூற்றுவ நாயனார் திருக்களந்தை என்ற பதியில் தோன்றியவர். அவர் இறைவரடியாரிடத்து அன்புடையவர். போர் பல செய்து மன்னர் பலரை வென்றவர். யானை, குதிரை, தேர்கள், காலாள் வீரர்கள் என்பவர்களைப் பெற்றிருப்பினும் மன்னராய் முடிசூடிக் கொள்ளவில்லை. முடி சூட்டுவதற்குரிய மரபுடைய தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று தமக்கு முடி சூட்டுமாறு கூற்றுவநாயனார் வேண்டினார். நாங்கள் சோழ மன்னர்க்கன்றி மற்றவர்க்கு முடி சூட்டுவதில்லை என்றனர். அவர்கள் கூற்றுவ நாயனார்க்கு அஞ்சி, சேர நாட்டை அடைந்தனர். கூற்றுவ நாயனார் மிகவும் வருந்தி இறைவரிடம் உம் மலரடியை முடியாய் எனக்குச் சூட்டுக ! என்று இறைஞ்சினார். கனவில் இறைவர் அவர்க்குத் தம் அடிகளைச் சூட்டினார். எனவே இறைவர் அருளால் நாட்டை ஆண்டு வீடு பேற்றைப் பெற்றார்.

3930. துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில் நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில் முயன்றார் களந்தை முதல்வனார்.

தெளிவுரை : களந்தைத் தலைவரான கூற்றுவனார் பகைவர் எதிர்த்து நின்ற போரில் தம் தோளின் வன்மையால் வெற்றி பெற்றுச் சூலப்படையை ஏந்திய சிவபெருமானின் நல்ல திருநாமத்தைத் தம் நாவால் நாள்தோறும் சொல்லும் நன்மையில் மிக்கவர், பல நாட்கள் இறைவர் அடியாரின் அடிகளைப் பணிந்து துதித்து முதன்மையான தொண்டில் முயன்றனர்.

3931. அருளின் வலியால் அரசொதுங்க அவனி யெல்லாம் அடிப்படுப்பார்
பொருளின் முடிவுங் காண்பரிய வகையால் பொலிவித் திகல்சிறக்க
மருளுங் களிறு பாய்புரவி மணித்தேர் படைஞர் முதல்மாற்றார்
வெருளுங் கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார்.

தெளிவுரை : சிவபெருமானின் திருவருள் துணையால் மன்னர்களும் அஞ்சி ஒதுங்கிக் கீழ்ப்படும்படி நிலம் முழுதும் தம் ஆட்சியின் கீழ் வரும்படி செய்து பொருள்களின் எல்லையும் காண இயலாதபடி சேர்த்துப் போரில் வெற்றி பெறும் படியாக மருட்சி செய்யும் யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள், அழகிய தேர்கள், படைவீரர் என்ற இவை முதலிய பகைவர் அஞ்சி ஒதுங்கத்தக்க நால்வகைப் படைக்கருவிகளும் நிறைந்த வீரம் கொண்ட செருக்கால் மேம்பட்டார்.

3932. வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச் செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு வெல்லாம் உடைய ராயினார்.

தெளிவுரை : வெற்றி பெறும் செயலில் மேன்மேல் பெருக மன்னருடன் போரிடுகின்ற போர்கள் பலவற்றிலும் வெற்றி பெற்றுச் சென்று தும்பைப் பூவைச் சூடும் துறையின் போர்த்தொழிலை முடித்தும், அப்போர்களில் வெற்றி அடைந்த பின் வாகை மாலையின் வகையில் எழும் மணமுடைய மாலை சூடியும், அவ்வேந்தர்களின் வளநாடுகளை எல்லாம் கையகப்படுத்தியும், மன்னர்க்குரிய முடி ஒன்று தவிர அரசர்க்குரிய மற்றச் செல்வங்கள் எல்லாவற்றையும் அவர் உடையவர் ஆனார்.

3933. மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா டணைய நண்ணுவார்.

தெளிவுரை : செழுமையான இவ்வுலகத்தைக் காக்கின்றவராய் நவமணிகளை யுடையபெரிய முடியைச் சூட்டுவதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினார். அவர்கள் சோழர்களின் தொன்று தொட்டு வரும் குல முதல்வர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்டமாட்டோம் என்று முடி சூட்டாராகிச் சேர மன்னரின் மலை நாட்டை அடைவாராயினர்.

3934. ஒருமை யுரிமைத் தில்லைவாழந் தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து மன்று ளாடுங் கழல்பணிவார்.

தெளிவுரை : ஒருமை யுடைய தில்லை வாழ் அந்தணர்கள் தங்களுக்குள் ஒரு குடியின் பெருமை கொண்ட அந்த மணி முடியை அருமையாய்க் காவல் செய்யும்படி வைத்து, இரு மரபும் தூயவரான அவர்கள், சேர நாட்டை அடைந்த பின்பு, கூற்றுவனார் செயல் பாட்டினால் உள்ளம் தளர்ந்து தில்லையம்பலத்தில் ஆடும் இறைவரின் திருவடியைப் பணிவாராய்,

3935. அற்றை நாளில் இரவின்கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம்
பெறவே வேண்டும் எனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக்
கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளால் அவைதாங்கி யுலக
மெல்லாந் தனிப் புரந்தார்.

தெளிவுரை : அடியேனுக்குத் தங்கள் மலர் போன்ற அடிகளை மணி முடியாய்ப் பெற்ற பேறு அடியேன் பெற வேண்டும், எனத் துதிக்கும் பற்றை விடாது துயில்கின்ற அவர்க்கு, அன்றைய இரவில், கனவில், இறைவர் தம் அடிகளை முடியாய்ச் சூட்டியருளப் பொருந்திய திருவருளால் அவ்வடிகளையே மணி முடியாய்த் தாங்கிக் கொண்டு உலகம் எல்லாவற்றையும் தனியாட்சி செய்தார்.

3936. அம்பொன் நீடும் அம்பலத்துள்
ஆரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ்
கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர எய்தும்
பெரும்பூ சனை யியற்றி
உம்பர் மகிழ அரசளித்தே
யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.

தெளிவுரை : அழகிய பொன்னால் ஆன அம்பலத்தில் ஆரா அமுதமான திருக்கூற்றைச் செய்யும் இறைவர், இந்த வுலகத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயில்களில் எல்லாம் தனித் தனியாய் இந்த வுலகத்து உயிர்கள் இன்பம் அடையுமாறு பொருந்தும் பெரிய பூசைகளைச் செய்வித்துத் தேவர் மகிழும்படி ஆட்சி செய்து உமை பாகரான சிவபெருமானின் திருவடியை அடைந்தார்.

3937. காதற் பெருமைத் தொண்டின்நிலைக்
கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக்
கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை
நடைநூற் பாவில் நவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை
யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.

தெளிவுரை : மிக்க விருப்பமுடைய பெருமையுடைய தொண்டின் நிலைத்த கடல் சூழ்ந்த உலகத்தைக் காத்து ஆட்சி செய்து குற்றம் நீக்குமாறு முயன்ற களந்தைக் கூற்றுவ நாயனாரின் திருவடியை வணங்கி, அத்துணையால் நாத வடிவான மறைகளைத் தந்து உலகைக் காக்கும் இறை வரை நடை நூலின் பாக்களால் கூறித் துதிக்கும் சிவபாதம் பொருந்திப் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற திருக்கூட்டத்திற் சேர்ந்த அடியார்களின் செயலைச் சொல்லப் புகுகின்றோம்.

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

3938. தேனும் குழலும் பிழைத்த திரு
மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும்
சடையார் தூது தருந்திருநாட்
கூனும் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றே
னேழு பிறப்பின் முடங்குகூன்.

தெளிவுரை : தேனும் புல்லாங்குழலும் என்ற இவற்றை வென்ற இனிமை கொண்ட மொழியையுடைய பரவையாரின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு மதியும் பாம்பும் பகை தீர்க்க வைப்பதற்கு இடமான உமையையுடைய பெருமான் தூது தந்த நாளில், கூனனது கூனையும் குருடனின் குருட்டுத் தன்மையையும் தீர்த்துப் பணிகொள்பவரான நம்பி ஆரூரரின் விளக்கம் மிக்க பாதங்களை, யானும் துதித்து ஏழு வகைப்பட்ட பிறவிகளிலும் உட்பட்டு முடங்கிக் கிடக்கும் தன்மையான கூன் தன்மையையும் அவற்றுள் செலுத்தும் அறியாமையான குருட்டுத் தன்மையையும் போக்கிக் கொள்கிறேன்.

கூற்றுவ நாயனார் புராணம் முற்றுப் பெற்றது.
வார் கொண்ட வன முலையாள் சருக்கம் முற்றுப் பெற்றது.

 
மேலும் பனிரெண்டாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது ... மேலும்
 
temple news
12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே ... மேலும்
 
temple news
அமர் நீதி நாயனார் புராணம் சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி ... மேலும்
 
temple news
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் ... மேலும்
 
temple news
1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பைமைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும்கொய்ம்மலர் வாவித் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar