பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, 150 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்கள், அறநிலையத்துறை பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டியில், 150 ஆண்டுகள் பழமையான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், இருதரப்பு பிரச்னையால், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. கோவில் சுவற்றில், 150 ஆண்டுகளுக்கு முந்தைய மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு சுவற்றில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள், இன்றளவும் நிறம் மங்காமல் புத்தம் புதியது போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக, பிரகலாதன் கதை, மயிலுடன் முருகன், அரங்கநாதன் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களில், ஐந்து ஓவியங்கள் மட்டுமே ஓரளவு நன்றாக உள்ளது. மற்றவை, மழைநீரில் நனைந்து, சுண்ணாம்பு அரிக்கப்பட்டு, பாதி அழிந்த நிலையில் உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், அனைத்து ஓவியங்களும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அரிய வகை ஓவியங்களை அரசு பாதுகாக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளரும், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியருமான துரைசாமி கூறியதாவது: தொப்பப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருப்பவை, 150 ஆண்டுகளுக்கு முந்தைய மூலிகை ஓவியங்கள். இதேபோல், மெட்டாலா அடுத்த உரம்பு செல்லும் வழியில் உள்ள ஆனந்தாயிம்மன் கோவில் ஒன்றிலும், ஓவியங்கள் உள்ளன. அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில், 100 ஆண்டு கட்டடங்களையே பழமையானது, வரலாற்று சிறப்புமிக்கது என்று பாதுகாத்து வருகின்றனர். ஆனால், நம் நாட்டில் நூற்றாண்டு பழமையான பொருட்களை கூட, துணி துவைக்கிற கற்களாகவும், சாதாரண பொருட்களாவும் பயன்படுத்தி வருகிறோம். அரசு பழமையான பொருட்களை பாதுகாப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.