பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
03:07
மனிதனாகப் பிறந்த நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், அவை யாவும் சிவபெருமானையே சென்றடைகினறன. தனக்கென குணம், உருவம், மொழி இல்லாதவன் அவன். அவனுக்கு முன்னும் எவருமில்லை; பின்னும் இருக்கப்போவதில்லை. பிறப்பு, இறப்பு, சார்பு இல்லாதவன். தனக்கு இணையென்று எவரும் எதுவும் இல்லாத அந்த சிவனே பரப்பிரம்மம். அந்த பரப்பிரம்மத்தில் லயிக்க எல்லாராலும் இயலாது என்ற நிலையில், அனைவரும் பயன்பெறும் வண்ணம் நம் ஞானிகளால் உருவாக்கப்பட்டவையே இறையுருவங்கள். அத்தகைய இறைவடிவங்களில் சிவனைக் குறிப்பதான லிங்க வடிவம் அபூர்வமானது. சிவபெருமானை காலையில் வணங்கினால் அன்றைய தினப் பாவம் விலகும் என்றும்; நண்பகலில் வணங்கினால் இந்தப் பிறவியின் துயர் நீங்கும் என்றும்; மாலை நேரம் வழிபட்டால் ஏழு பிறிவிகளின் பாவம் தீருமென்றும் சொல்லப்படுகிறது.
தினந்தோறும் கோயில் வழிபாடு செய்தல்வேண்டும். இயலாதவர்கள் வாரம் ஒருமுறையாவது சென்று வணங்கவேண்டும். திங்கள், வெள்ளி, பிரதோஷம், மாதப்பிறப்பு, அமாவாசை போன்ற நாட்களில் வணங்குவதும் சிறப்பாகும். நாட்டின் நலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் கோயில்கள் இன்றியமையாதவை. நம்முன்னோர் நமக்களித்த பெருங்கொடையாகிய கோயில்களை முறையாகப் பராமரித்து, குறைவற பூஜைகள் நடத்தி, அதன் புனிதம் கெடாதவண்ணம் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அப்போது தான் கோயில்களின் சாந்நித்தியம் நிலைத்து நீடித்து நம் சந்ததியினரை வாழவைக்கும். அவ்வாறு தெய்வசக்தி நிரம்பிய கோயில்களில் செய்யும் பிரார்த்தனைகள் ஈடேறுவதை நம் அனுபவத்தில் காணலாம். நாடெங்கும் உள்ள அத்தகைய கோயில்களில் ஒன்று தான் லிலோட்டாநாதர் மந்திர். இது வடஇந்தியாவில் மிகவும் புகழ்மிக்க சிவன்கோயிலுமாகும்.
மகாபாரதக் காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயமது. அப்போது தூரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா பாண்டவர்களைத் தேடிவந்தான். அந்த சமயத்தில் அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே இங்குள்ள சிவலிங்கம் என்கிறார்கள். இந்த லிங்கம் ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறும். இங்கு வேறொரு அதிசயமும் நடக்கிறது. மாலையில் பூஜையெல்லாம் முடிந்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுவிடுவர். காலையில் வந்து திறந்து பார்க்கும்போது யாரோ பூஜை செய்து சென்றதுபோல, சிவலிங்கசிரசில் வில்வ இலை, மலர்கள் காணப்படும். இது இன்றளவும் தினமும் நடக்கும் நிகழ்ச்சி என்கிறார்கள். கோயில் அர்ச்சகர்கள். இவ்வாறு இரவுப் பூஜை செய்வது அஸ்வத்தாமாதான் என்று நம்புகிறார்கள். இந்த லிங்கத்தை உற்றுப் பார்த்தால் சிவ-பார்வதியின் தோற்றம் புரியும்.
திங்கட்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எண்ணங்கள் அனைத்தையும் இந்த ஈசன் நிறைவேற்றி வைக்கிறார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயில் மணியைச் செய்து வந்து காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர்கிரி என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில், காண்டவா, ஜுனை நதிகள் சேரும் இடத்தில் அமைந்துள்ளது லிலோட்டாநாத் மந்திர். சென்னையிலிருந்து லக்னோ சென்று, அங்கிருந்து ரயில் வழியில் 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது லக்கிம்பூர் கிரி. சாலை வழியாகச் சென்றால் 140 கிலோ மீட்டர்.