கேரளாவின் கொடுங்களூர் அருகே ஜடாயுமங்கலம் என ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் ஜடாயுவுக்கு மிகப்பெரிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கும் ஜடாயுவுக்கும் என்ன சம்பந்தம்? ராமாயண காலத்தில், ராவணன், சீதையை தூக்கிச் சென்றதைப் பார்த்த ஜடாயு சீதையை விடுவிப்பதற்காக ராவணனுடன் சண்டையிடுகிறது! ஒரு கட்டத்தில், ராவணன், பறவையின் இறக்கைளை வெட்டி விட; அந்தப் பறவை இந்த மலையின் மீது விழுந்து குற்றுயுருடன், ராமனின் வருகைக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படுத்திருந்தது! எண்ணம் போலவே ராமன் - லட்சுமணர்கள் வர அவர்களிடம் நடந்ததைக் கூறி, சீதை இலங்கைக்கு ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு விட்டாள் என்ற உண்மையையும் கூறி தன் உயிரை விடுகிறது! இதன் அன்பை உணர்ந்து கொண்ட ராமன், அதற்கு, தன் தந்தைக்குச் செய்வது போன்ற கர்மகாரியங்களைச் செய்து முடிக்கிறார். ஆக ஜடாயு விழுந்து உயிரை விட்ட ஊர் என்பதால் ஜடாயு மங்கலம் என பெயர் பெற்றது! (இப்படி ஜடாயு மோட்சம் அடைந்ததாகப் பல ஊர்கள் சொல்லப்படுகின்றன).
இந்த ஊர் மலையில் ஜடாயுவுக்கு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இது இருநூறு அடி நீளம் கொண்டது. ஆயிரம் அடிக்கு மேல் உயரம் கொண்ட மலையில் இது வடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இங்கு ராமர் சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜடாயு - ராவணன் இடையே நடந்த சண்டையை தத்ரூபமாய் பார்க்க ஏதுவாய் 6டி தியேட்டர் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. அருகில் 65 ஏக்கரில் தேசியப் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள், உடல் சார்ந்த ஆயுர்வேத சிகிச்சைகள் செய்து கொள்ள விரும்பினால் அதற்கு ஏராளமான தங்குமிடங்கள், சேவைகள் உள்ளன. இந்த மலைக்கு ராமர் வந்ததுக்கு ஆதாரமாக மலையில் ராமர் பாதமும் உள்ளது. இதனால் ராம பக்தர்கள், இந்த பாதத்தைத் தரிசிக்கவும் இங்கு பெருமளவில் கூடுகிறார்கள். வருங்காலத்தில் கேரளாவின் முக்கிய ஆன்மிக சுற்றுலா இடமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை.