ஒரு தாய்க்கு அவள் பெற்றெடுத்த எல்லாக் குழந்தைகள் மீதும் ஒரே மாதிரியான அன்புதான். தாயன்பில் ஏற்றத்தாழ்வே இருக்க முடியாது. ஆனால் தாய் தவறு செய்த குழந்தைகளைக் கண்டிக்கிறாள். தண்டிக்கிறாள். நோய் வாய்ப்பட்ட குழந்தைக்கு பத்திய உணவு கொடுக்கிறாள். மற்ற குழந்தைக்கு நல்ல சாப்பாடு கொடுக்கிறாள். குழந்தைகளிடம் பராபட்சம் காட்டுகிறாள் என்றா இதற்கு அர்த்தம்? பிள்ளைகள் மீது உள்ள பாசம் - அவர்கள் நலனில் கொண்டுள்ள அக்கறை ஆகியவை தான் தாயின் சில வகை செயற்பாட்டுக்குக் காரணம். கர்ம வினைகள் மூலம் இறைவன் உயிர்களைத் தண்டனைக்கு உள்ளாக்குகிறான் என்றால் ஆன்மாக்களின் மீது இறைவனுக்கு உள்ள அன்பும் பாசமும்தான் அதற்குக் காரணம்.