பதிவு செய்த நாள்
20
ஆக
2016
03:08
மைதா சீடை - தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
பொரிகடலை – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: ஒரு வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்து விடவும். பின் அதை சல்லடை கொண்டு சலிக்கவும். பின்பு மிக்சியில் பொரிகடலையை பொடி செய்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, பொரிகடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை சிறுசிறு சீடையாக
உருட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கிருஷ்ணருக்கு மைதா சீடை தயார்.
பால்கோவா
தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் சர்க்கரை – 1/4 கப்
செய்முறை: பாலை ஒரு அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் வற்ற வைக்க வேண்டும். வற்றியதும் தீயை குறைத்து 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது பால் கெட்டியாக துவங்கும். வாணலியின் அடியில் பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றி கோவா பதத்திற்கு வந்ததும் இறக்கி விட வேண்டும். சிறிது ஏலக்காய் பொடி துõவலாம், முந்திரி, பாதாமை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பால்கோவா தயாராகி விடும்.
அக்கார அடிசில்
இந்தப் பலகாரத்திற்கும் கிருஷ்ணருக்கும் நிறைய தொடர்பு உண்டு. ரங்கநாதரை திருமணம் செய்து கொள்ள 100 பானையில் அக்கார அடிசில் வைப்பதாக ஆண்டாள் வேண்டிக் கொண்டாள். இதைக் கோவில்களில் செய்வார்கள். வீட்டிலும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்:
அரிசி, சர்க்கரை – தலா அரை கிலோ
நெய் – 500 கிராம்
பாசிப்பருப்பு – 1/4 கிலோ
பால் – 1 லிட்டர்
ஏலப்பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், முந்திரி தேவையான அளவு
செய்முறை: பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வாணலியில் தனித்தனியாக வறுத்து களைந்து எடுத்துக் கொள்ளவும். வெண்கலப்பானையை அடுப்பில் வைத்து பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பை அதில் போடவும். சிறிது நேரத்துக்கு
ஒருமுறை கிளறவும். பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். பருப்பு
வெந்ததும் அரிசியைக் களைந்து போடவும்.
மிச்சம் இருக்கும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். அரிசி வெந்து குழையும் பதம் வரவேண்டும். அப்போது வெல்லத்தை துõளாக்கி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும் வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றி, தொடர்ச்சியாக கிளற வேண்டும். நன்றாகக் கலந்து பாயசம் போலவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் மாறி விடாமல், கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப் பூ, சேர்த்துப்
பச்சைக்கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இது மிகவும் ரிஸ்க்கான ரெசிபி. பொருட்களின் அளவு மாறுதலுக்கு உரியது. பால், நெய் போதாவிட்டால் தேவையான அளவு சேர்க்கவும் அல்லது குறைக்கவும்.
மிஸ்டி தோய்
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 250 கிராம்
செய்முறை: பாலை ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி தீயை குறைத்து வைத்து, பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். அதை இறக்கி குளிர வைக்கவும். மற்றொரு
பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையைப் சேர்த்து பாகாக காய்ச்சவும். சர்க்கரை
உருகியதும், அதை பாலுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஓரளவு சுண்ட விட்டு, ஒரு பானையில் ஊற்றி, சுத்தமான துணியால் மூடி 34 மணிநேரம் வைக்கவும். பிறகென்ன! கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்து விட்டு சாப்பிட வேண்டியது தான்! கிருஷ்ண ஜெயந்திக்கு மேற்கு வங்காளத்தில் இது தான் ஸ்பெஷல் ரெசிபி.
செட்டிநாடு நெய் உருண்டை
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 200 கிராம்
ஏலக்காய் – 6
முந்திரி உடைத்தது – 50 கிராம்
செய்முறை: பாசிப் பருப்பை வாணலியில் இட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த பருப்பை மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து மாவுடன் கலக்கவும். மூன்று
ஏலக்காயை தோலோடு லேசாக நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். இவற்றை மாவுடன் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும். வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். அதை மாவில் ஊற்றி பிசையவும். வெதுவெதுப்பான சூட்டில் கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கவும். இது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.