பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், வாழமங்கலம் கிராம வயல்வெளியில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், 13ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், சோழர்களும், இறுதிப்பகுதியில் பாண்டியர்களும் ஆட்சி புரிந்தனர். அதன்பின், நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறைய துவங்கியதோடு, 14ம் நுாற்றாண்டின் துவக்கம் முதலாக, அதிக நிலம் படைத்தவர்கள், அப்பகுதியின் குறுநில மன்னர்களாக திகழ்ந்துள்ளனர். இந்த தகவல்கள், புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு வரியானது, விளையும் பொருட்களின் தன்மை அடிப்படையில், கோல் அளவீட்டு முறை மூலம் பெறப்பட்டு உள்ளது. நிலமில்லாத பிறரிடம் ஆடு, மாடு மற்றும் கோழி, இறைச்சி, நெய், பால் உள்ளிட்டவைகளாக பெறும் நடைமுறை வழக்கத்தில் இருந்ததுள்ளது. தற்போது, வாழமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள, 14ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டின் மூலம், இது போன்ற பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.