பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
ராமநாதபுரம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் அறநிலையத்துறை சார்பில் பரிகார பூஜைகளுக்கு மட்டும் ரூ.150 வசூல் செய்யப்படுகிறது. கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷாண கோயில் பரசித்தி பெற்றது. இங்குள்ள நவக்கிரகங்களை வலம் வந்தால் சகல தோஷங்களும் நீங்கும், என்பதால் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து பரிகார பூஜைகள் செய்து தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். தற்போது, கோயில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், வசூல் செய்யப்படும் தொகைக்கு முறையாக ரசீது கொடுப்பதில்லை, என்ற புகார் எழுந்தது.இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் இளங்கோவனிடம் கேட்ட போது, இதற்கு முன்பு, தனி நபர்கள் வெளி மாநில பக்தர்களை ஏமாற்றி பரிகார பூஜைக்கு இஷ்டம் போல் ரூ.1,000, 2,000, 5,000 என வசூல் செய்தனர். அறநிலையத்துறை நிர்வாகத்திடம் வந்த பின், தற்போது பரிகார பூஜை செய்வோருக்கு மட்டும் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதற்கு முறையான ரசீது வழங்கப்படுகிறது, என்றார்.