பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏலேல சிங்க விநாயகர் சன்னிதியில், ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.தெருவுக்கு தெரு பிள்ளையார் கோவில் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி விழா அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை அதற்கான பூஜை பொருட்கள் வாங்கி, வீட்டில் பொங்கல், கொழுக்கட்டை வைத்து வழிபட்டனர். நேற்று பல்வேறு பகுதிகளில் சிலைகள் செய்து விற்பனை செய்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னிதி தெருவில் அமைந்துள்ள, ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், ஐந்து லட்சம் ரூபாய் நோட்டு மூலவர் சன்னிதி அலங்கரிக்கப்பட்டது; காலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது.
வைகுண்ட பெருமாள் கோவில் அருகில், ஆஞ்சநேயர், விநாயகரை துாக்கி வைத்திருப்பது போல் அப்பகுதி இளைஞர்கள் வைத்து வழிபட்டனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அப்பகுதிவாசிகள் பூஜை செய்து வருகின்றனர். நாளை, போலீசார் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்படும். காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட சிலைகள் மாமல்லபுரம் மற்றும் பொன்னேரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட, திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், மானாம்பதி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விநாயகர் கோவில்களில், காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சிறப்பு அலங்காரம்: மேலும், ஒன்றியத்தின் முக்கிய பகுதிகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. கோவில்களில், விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், தீபாராதனைகள் அனைத்தும் செய்யப்பட்டன. மாலையில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.