வடலூரில் அமாவாசை என்ற கூலியாள் இருந்தார். அவர் கறவை நின்ற மாடுகளின் இறைச்சியை விற்பனை செய்து வந்தார். ஒருமுறை அவருக்கு வள்ளலாரின் அறிவுரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மனம் திருந்திய அமாவாசை, மாடு அறுக்கும் தொழிலைக் கைவிட விரும்பினார். அவரது மன மாற்றத்தை அறிந்து கொண்ட வள்ளலார், “அமாவாசை... அன்றாடம் என்னப்பா உனக்கு வருமானம் கிடைக்கிறது?” என்று கேட்டார். “மாடு அறுப்பதற்கு எட்டணா(ஐம்பது காசு) கூலி வாங்குகிறேன்” என்றார். வள்ளலார் தன்னிடம் இருந்த எட்டணா நாணயம் ஒன்றை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து,“இதை பத்திரமாக உன்னிடம் வைத்துக் கொள். இனி தினமும் தவறாமல் எட்டணா கூலி நிச்சயம் வந்து சேரும்”என்று கூறி ஆசியளித்தார். அமாவாசையும் வள்ளலார் அளித்த காணிக்கையை ஏற்றுக் கொண்டார். ஜீவகாருண்யத்துடன் உயிர்களை நேசிக்கத் தொடங்கினார். அதன்பின் வயலில் வேலை செய்து நிறைவான கூலி பெற்று வாழ்க்கை நடத்தினார்.