இரண்யன் என்னும் அரக்கன், பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதையறிந்த திருமால் வராகம் என்னும் பன்றி வடிவெடுத்து அசுரனைக் கொன்றார். தனது கோரைப் பல்லால் பூமியைச் சுமந்து வந்த வராகர், முன் போலவே ஆதிசேஷனின் தலையில் பூமியை நிலைபெறச் செய்தார். அப்போது வராகரின் உடம்பில் இருந்த எழுந்த வியர்வை, நித்யபுஷ்கரணி என்ற தீர்த்தமாக உருவெடுத்தது. இத்தலம் ஸ்ரீமுஷ்ணம் எனப்படுகிறது. இத்தலத்தில், பூவராகப் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் இங்கு வழிபட்டு நற்பலன் அடைந்தனர். பன்றி வடிவில் சுவாமி இருப்பதால் அவருக்கு விருப்பமான கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து 24 கி.மீ., துõரத்தில் இக்கோவில் உள்ளது.