சமர்த்த ராமதாசர் என்னும் துறவி, தன் சீடர்களுக்கு ராமாயணம் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் அனுமன், அசோகவனத்திற்கு வந்தது பற்றி சொல்லும் போது, “ராம துõதனான அனுமன் இலங்கையில் அசோகவனத்தில் வெள்ளை மலர்களைக் கண்டார்” என்றார். அப்போது அனுமன் தோன்றி,“சமர்த்தரே! நீர் சொல்வது பிழை! நான் வெண்ணிற பூக்களை அங்கு பார்க்கவில்லை. அவை சிவப்பு நிறமானவை” என மறுத்தார். இருவருக்கும் உண்மையை தெரிவிக்க விரும்பிய ராமர்,“ ஆஞ்சநேயா! சமர்த்த ராமதாசர் சொல்வதே சரி. அசோகவனத்தில் பூத்த பூக்கள் வெண்ணிறம் கொண்டவை தான். ஆனால், ராவணன் மீது கொண்ட கோபத்தால் உன் கண்கள் சிவந்திருந்தன. அந்த சிவப்பு பூக்களின் மீது பிரதிபலித்து அவையும் சிவப்பாகத் தோன்றின. மனதில் தோன்றும் உணர்வே நம்மைச் சுற்றி பிரதிபலிக்கும்” என்று விளக்கமளித்தார்.