பதிவு செய்த நாள்
20
அக்
2016
03:10
நமது பாரதப் பண்பாடு எண்ணற்ற சடங்குகளைத் தன்னகத்தே கொண்டது. எண்ணற்ற மகான்கள், சித்தர்கள், தவசீலர்கள், மகரிஷிகள் ஆகியோர் உயர்ந்த தத்துவங்களை நெறிமுறைகளை, சாஸ்திர சம்பிரதாயங்களை நமக்கு அருளிச் சென்றுள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரத்தில் தேன் தொட்டு நாக்கில் வைப்பர். வாழ்வில் இனியவை எல்லாம் உனக்குக் கிடைக்கட்டும் என்று ஆசீர்வதிப்பர். குழந்தைக்கு ஐந்தாம் மாதம் நாம கரணம் செய்து தெய்வத்தின் பெயர், முன்னோர் பெயரை முதலில் சூட்டி, பின் குழந்தைக்கான அழைப்புப் பெயரைச் சூட்டுவர். இப்பிறவி அளித்த தெய்வத்தையும், குல நலம் காத்த முன்னோர்களையும் நினைவுபடுத்தும் ஓர் அற்புத சடங்கல்லவா இது?
மொட்டை போடுதல்: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு வளரும் முடி தேவ முடியாக கருதப்படுகிறது. அந்த முடியின் மூலமாகவே இறைவன் தனது தேவ சக்தியை குழந்தையின் உடலினுள் செலுத்தி முறையான மூளை வளர்ச்சிக்கு அனுக்கிரகம் செய்கிறார். எனவே, இது தேவ முடி என்பது ஐதீகம். மொட்டையடிக்கும் நாளில் குழந்தைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, தலைவாரி பூச்சூட்டி, தாய் மாமன் மடியில் அமர்த்தி முடியிறக்க வேண்டும். அதன்பின் ஸ்நானம் செய்வித்து, தலைக்கு சந்தனம் பூசி, புத்தாடையை அணிவித்து, குலதெய்வத்துக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுதல் நம் மரபு.
காது குத்துதல்: நமது கலாசாரத்தில் குழந்தைக்குக் காது குத்துவது என்பது ஒரு சம்பிரதாயம். சித்திரை நட்சத்திரத்தன்று காது குத்துவதால் குழந்தையின் புத்தி கூர்மையாகும். குழந்தையின் காதில் நல்ல நேரத்தில் ஒரு துளையை ஏற்படுத்துவதால் பிந்துரூபம் பெற்று பூரண பிரணவமாகிறது. காது சத் விஷயங்களைக் கேட்டு ஆன்மிக ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது.
அறிவியல் விளக்கம்: நம் முன்னோர் பின்பற்றிய, நம்மைப் பின்பற்றச் சொன்ன சடங்குகள் அனைத்திலுமே பல சூட்சும விளக்கங்கள் உள்ளன. இன்றைய அறிவியல் வலியுறுத்தும் ஆரோக்கிய விஷயங்களை அன்றே சடங்குகளாக, சம்பிரதாயங்களாக நமக்குப் பழக்கியுள்ளனர். நமது முன்னோர் பத்து மாதம் கருவறையில் உள்ள குழந்தையின் முடியானது நீரிலும், உதிரத்திலும் ஊறி இருக்கும். அந்த முடியை நீக்குவது சுகாதார முறைப்படி மிகவும் நல்லது. தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தாய்மாமன் மடியில் அமர்த்திச் செய்வதால் உறவு வலுப்படுகிறது. தாய் வழி சமூகம் எனப்படும் நம் பண்பாடு போற்றப்படுகிறது. குலதெய்வம் கோயிலில் வழிபடுவதால் குலதர்மம் பேணப்படுகிறது.
காதில் ஏற்படும் உபாதைகளைக் கட்டுப்படுத்த அக்யூபிரஷர் மருத்துவம் காதில் துளையிட வேண்டும் என்கிறது. காது குத்துவதன் மூலம் குழந்தையின் அறிவு வளர்ச்சியடைகிறது. சிந்தனைத் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது என இந்திய மருத்துவம் நம்புகிறது. நமது சடங்குகளில் உள்ள ஆன்மிக அறிவியல் உண்மைகளை உணர்ந்து பின்பற்றி பலன் பெறுவோம்.