பதிவு செய்த நாள்
20
அக்
2016
03:10
பொதுவாக புராண காலத்தொடர்புடைய கோயில்களில் அமைந்துள்ள மண்டபங்கள் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மண்டபத்தில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்துள்ளன. நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் மட்டும் நடைபெறும். அதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் விழாக்கோலம் காணும். ஆனிமாதம் தேவர்களின் பகல் பொழுதின் கடைசிமாதம். இம்மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு சாயரட்சை (மாலைக்காலம்) பூஜை செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவார்கள். அந்த அபிஷேக ஆராதனைகள் இங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் நடைபெறும். இந்த மண்டபத்தை ராஜசபை என்றும் போற்றுவர்.
இந்த மண்டபத்தில்தான் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இந்த நூலில் உள்ளபடிதான் கோயிலில் நித்திய, நைமித்திக பூஜைகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. மேலும் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி வியாகரண சூத்திரத்தையும் இந்த மண்டபத்திலிருந்து தான் எழுதினார். அதை தம் சீடர்களுக்குப் போதித்து அருளியது இங்கு தான் என்கிறது புராணம். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே, உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதும், பின்னர் நூல் அரங்கேறியதும் இந்த ஆயிரம்கால் மண்டபத்தில் தான்.
இந்த ஆயிரம்கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர். ஊமைப்பெண்ணை (மாற்றுதிறன் கொண்ட, பேச இயலாமல் இருந்த பெண்ணை) பதிகம்பாடிப் பேச வைத்தார். அவர் இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பின்னர், திருக்கோவையாகப் பாடச் சொல்லி அதையும் தாமே பிரதி செய்து அருளினார். அத்துடன், மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிற்றம்பல முடையான் எழுதியது எனக் குறிப்பிட்டு அந்த ஓலையில் கையெப்பம் இட்டார் என்றும் வரலாறு கூறுகிறது. இறைவன் இத்தலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது, ஈசனின் திரு முடியிலிருந்த சந்திரனின் அமிர்தத்தாரைகள் இறைவன் அணிந்திருந்த மண்டையோட்டு மாலையில் விழுந்தன. அதன் விளைவால் அந்த மண்டையோடுகள் உயிர்பெற்றுப் பாடத் தொடங்கின. அதிலிருந்து தான் சங்கீதம் உருவானது என்று சங்கீத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் சங்கீதம் (பாடல்) நடனம் பயின்ற மாணவ- மாணவிகளின் அரங்கேற்றத்தை இந்த மண்டபத்தில் நடத்துகிறார்கள். எனவே, இறைவனை மூலஸ்தானத்தில் தரிசித்து, வழிபடுவதால் கிடைக்கும் அருள்போல், இந்த ஆயிரம் கால் மண்டபத்தையும் தரிசித்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், பக்தியில் சிறந்து விளங்கலாம்.