திருப்பதி - திருமலையின் புகழ் உலகப் பிரசித்தி பெற்றது போல் திருப்பதி லட்டு பிரசாதமும் உலகப் புகழ் வாய்ந்தது. தற்போது 84வது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது திருப்பதி லட்டு. கி.பி. 1700- ம் ஆண்டுக்கு முன்புவரை வெல்லத்தைப் பயன்படுத்தித் தயார் செய்யப்பட்ட பாயசம் உள்ளிட்ட சில வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.
பின்னர், கி.பி. 1900-ம் ஆண்டு துவக்கத்திலிருந்து வெல்லம், கடலை மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்யப்பட்ட மனோகரம் என்ற பிரசாதம் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் 1932 -ம் ஆண்டில் பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் தமிழகத்திலிருந்து இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணியாட்களை வரவழைத்தார்கள். அப்போது, குண்டூரைச் சேர்ந்த ஒருவரின் வேண்டுகோளின்படி கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் லட்டு பிரசாதம் தயாரித்து ஏழுமலையானுக்கு நிவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். 1700- ஆம் ஆண்டு முதல் பல மாற்றங்களைச் சந்தித்த பிரசாதம் 1932-ம் ஆண்டு முதல் லட்டு பிரசாதமாக மாற்றம் அடைந்து திருப்பதி லட்டு என்ற பெயரில் தற்போது புவிசார்காப்புரிமை பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும்.