பதிவு செய்த நாள்
02
நவ
2016
05:11
நீங்கள் மன நிறைவாக இருக்கவேண்டுமானால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவை? உங்களுடைய தேவைப் பட்டியல் எவ்வளவு நீண்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் வாழ்நாள் முழுமைக்குமான அத்தனை தேவைகளையும் நீங்கள் அதில் எழுதலாம். அத்தனையையும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. அவை அனைத்தும் உங்களது நியாயமான தேவைகளாக, மற்றவர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் தராததாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், எல்லாவற்றையும் நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். அத்தனையையும் உங்களுக்குத் தரப்போகிறவர், சிவபெருமான். தரப்போகிற இடம் பூலோக கயிலாயமான சிதம்பரம்.
நிஜமாகவா? என்ன கேட்டாலும், எத்தனை வேண்டுமானாலும் தருவாரா? என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கூடவே, ஈசன் எல்லோருடைய தேவைகளையும் எப்படி நிறைவேற்றுவார்? அதற்காக சிதம்பரத்தை தேர்வு செய்தது ஏன்? இந்தக் கேள்விகளும் உங்களுக்குள் எழலாம். அதற்கெல்லாம் காரணம் அங்கே நடக்கின்ற மாபெரும் ஜபம். உங்களுக்கு அவருக்கு இவருக்கு எனக்கு உனக்கு என்று தனித்தனியாக இல்லாமல், உலகத்தில் உள்ள எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இதுவரை இந்த பூவுலகில் எந்தத் தலத்திலும் நடைபெறாததும், மிகமிக அரியதும், அற்புதமான பலன்களைத் தருவதுமான ருத்ர பாராயண ஜபத்தினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சிதம்பரத்தில். அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல. ஒரு லட்சம் முறை ருத்ர மந்திரத்தினை பாராயணம் செய்யும் மிகமிக அரிதான ஜபத்தினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ருத்ரத்தின் பெருமைதான் என்ன? லட்சஜபருத்ர பாராயணத்தை எதற்காக சிதம்பரத்தில் நடத்துகிறார்கள்? ருத்ரம். முப்பெரும் வேதங்களான ரிக், யஜுர், சாம வேதங்களுள் நடுவே அமைந்ததும், வேதங்களின் சாரமாகக் கூறப்படுவதுமான யஜுர் வேதத்தின் மையத்தில் உள்ள இந்தத் துதி, ஸ்ரீருத்ரம் என்றும் ருத்ரோபநிஷத் எனவும், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாமும் போற்றப்படுகிறது. ருத்ரத்தின் சிறப்பு என்ன என்று எவ்வளவோ யோசித்தும் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்குமே தெரியாததால், எல்லோரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் தாயான காயத்ரிதேவியிடமே சென்று கேட்டார்கள். அனைத்துக்கும் முதலானவரும், எல்லாவற்றையும் உருவாக்குபவரும், எல்லா உயிர்களின் தேவைகளையும் ஈடேற்றுபவருமான இறைவனைப்பற்றி, இயன்றவரையில் எடுத்துக் கூறுவதுதான் ருத்ரம். ருத்ரத்தில் உள்ள மந்திரங்களைச் சொல்வதால் கிட்டும் பலனை முழுமையாக அளவிட முடியாது. வேத, புராண, இதிகாசங்கள் எல்லாம் எந்த இறைவனை அடையாளம் காட்ட முயல்கின்றனவோ, அந்த இறைவனை அவனது திருநாமங்கள் மூலம் ஓரளவுக்கு அடையாளம் காட்டுவதே ருத்ரம்! என்று சொன்னாள், வேதமாதா.
ஜகதாம் பதயே என்று ருத்ரத்தில் வரும் திருநாமம், சர்வேஸ்வரனான இறைவன் உலகம் முழுக்க நிறைந்திருப்பதைக் குறிப்பிடுகிறது. அகிலம் முழுதும் எந்தெந்த ரூபத்தில், எந்தெந்த இடத்திலெல்லாம் அவன் காட்சி தருகிறான் என்பதற்கான பெரும் பட்டியலாகவே இருக்கிறது ஸ்ரீருத்ரம். அதனைச் சொல்லும்போது பரமேஸ்வரனின் சகல அம்சங்களையும் பரிபூரணமாகப் போற்றித் துதிக்கும் வழிபாடாகவே அது அமைகிறது. யஜுர் வேதத்தின் மையத்தில் இருப்பது தைத்ரிய சம்ஹிதை. அதில் உள்ள ஏழு காண்டங்களுள் நடுவானதாக, அதாவது நான்காவது காண்டத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது ருத்ரம். இதன் காரணமாக ருத்ரமே வேதத்தின் இதயமாகச் சொல்லப்படுகிறது. அந்த ருத்ரத்தினை இயக்கும் ஆற்றலாக, அதன் மையத்தில் அமைந்துள்ளது நமசிவாய எனும் சிவ பஞ்சாட்சர மந்திரம்.
பஞ்சாட்சர மந்திரத்தின் ஆற்றலே உலகத்தை இயக்குகிறது என்பதால், வேதபண்டிதர்களும், மகரிஷிகளும், ஆன்மிகப் பெரியோர்களும் ருத்ரத்தையே மகாமந்திரமாகப் போற்றுகிறார்கள். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் அதனை வீட்டில் அமர்ந்து பாராயணம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுக்கொட்டிலில் உட்கார்ந்து ஜபம்செய்தால் நூறு மடங்கு. ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜபித்தால் ஆயிரம் மடங்கு. மலைமீது அமர்ந்து ஜபித்தால் பத்தாயிரம் மடங்கு பலன். கோயிலில் அமர்ந்து உச்சாடனம் செய்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். மந்திரத்தை உபதேசித்த குருவின் திருவடிக்கு அருகே அமர்ந்து பாராயணம் செய்தால் கோடான கோடி பலன் கிடைக்கும் என்கிறது, மந்திர சாஸ்திரம்.
சாதாரண மந்திரங்களே இப்படிப் பலன் தரும் என்றால், பலகோடி மடங்கு ஆற்றல் மிக்கதான ஸ்ரீருத்ரத்தை சொல்வது எவ்வளவு நன்மை தரும் என்பதற்கு விளக்கத்தையும் வேதமே சொல்கிறது. எல்லாவித பாவங்களையும் போக்கும். பலப்பல தலைமுறைகளுக்கும் புண்ணியப்பலன் சேரும். இம்மையில் எல்லா நன்மைகளும் கிட்டும். மரணபயம் நீங்கும். ஆபத்துக்கள் விலகும். முடிவில் மோட்சம் சித்திக்கும் என்கின்றன வேதங்கள். அதுமட்டுமல்ல, தொடர்ந்து ருத்ரத்தினை பாராயணம் செய்பவர் அந்த சிவபெருமானுக்கு சமமானவராகவே மாறி சிவசாரூப்யம் அடைவார். ருத்ரம் பாராயணம் செய்யப்படும் இடத்துக்குச் சென்றாலே பலன் கிட்டும். அந்த மந்திரத்தைக் கேட்டாலே உடலும் மனதும் ஆரோக்கியமாகும். குருவின் திருவடி கீழ் அமர்ந்து, அவர் உபதேசித்த மந்திரத்தைச் சொல்வதுதான் பலகோடி மடங்கு பலன் தரும் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வகையில் இந்த உலகினைப் படைத்தவரும், எல்லா வேதங்களையும் உபதேசித்த ஆதி குருவுமான சிவபெருமான் சன்னதியில் அமர்ந்து ருத்ரத்தை பாராயணம் செய்வதுதானே சிறப்பு.
சிவதலம் என்றால் அதிலும் தனிச்சிறப்பு இருக்க வேண்டாமா? அதை எப்படித் தேர்வு செய்வது? உலகின் இயக்கம் ஒலி, ஒலியால்தான் நிகழ்கிறது என்கிற இன்றைய விஞ்ஞானம். ஆனால், ஈசனின் திருவடிவை நடராஜ ரூபமாக அதாவது இயக்கத்தின் அடையாளமாக ஆடல்வல்லானாக அமைத்து, அவரது திருக்கரங்களில் ஒலியை உணர்த்திட உடுக்கையையும், ஒளியைக் குறித்திட அக்னியையும் அமைத்து இறைவனிடம் இருந்து வெளிப்படும் நாதமும் ஒளியுமே உலகின் ஆதாரம் என்பதை உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர். இறைவனின் ஆடல் தொடங்கிய இடம் பூலோக கயிலாயமான சிதம்பரத்தில்தான். அந்த இடத்தில் ருத்ர பாராயணத்தைச் செய்வதுதானே சிறப்பு. அதனால்தான் சிதம்பரத்தில் லட்ச ருத்ரஜப பாராயணம் நடத்தத் தீர்மானித்தார்கள். தில்லைவாழ் அந்தணர்களான தீட்சிதர்கள். அது மட்டுமல்ல, ருத்ரத்தினை வெறும் மந்திரமாக ஜபிப்பதைவிட அதற்கு உரிய மகாநியாசங்கள் என்கிற தியான முறைகளோடு பஞ்சாங்க ருத்ரமாக, மெய், வாய், கண், காது, நாசி, இவற்றோடு மனதையும் அடக்கி ஒருநிலையோடு ஜபிக்கும்போது அதன் ஆற்றல் பலமடங்கு அதிகரிக்கும். போதாயன மகரிஷியால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சாங்க ருத்ர பாராயணம் என்ற ஜபமுறை தில்லைவாழ் தீட்சிதர்களால் மட்டுமே இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனாலும் சிதம்பரத்தில் நடக்கும் இந்த லட்சருத்ர பாராயண ஜபம் தனிச்சிறப்பு பெறுகிறது.
பொதுவாக பதினொரு ஸ்லோகங்களைக் கொண்ட ருத்ரத்தை பதினொரு வேதவிற்பன்னர்கள் பதினொருமுறை சொல்வது ஏகாதச ருத்ரம் எனப்படும். அதாவது ஆளுக்குப் பதினொருமுறை வீதம் நூற்று இருபத்தொரு முறை சொல்லப்படுவது. இதைப் பொதுவாக சஷ்டியப்த பூர்த்தி முதலான காலங்களிலும், வீடுகளில் ஹோமங்கள் நடக்கும் சமயங்களிலும் பாராயணம் செய்வது உண்டு. இது நீண்ட ஆயுளும் நிலையான ஆரோக்கியமும் பெறுவதற்காக அவரவர் விருப்பப்படி நடத்தப்படுவது. அதே ருத்ரத்தை நூற்று இருபத்தொரு ரித்விக்குகள் (வேதம் அறிந்தவர்கள்) தலா பதினொருமுறை ஜபித்து (மொத்தம் 1331 முறை), வேதமுறைப்படி ஹோமம் அதாவது ருத்ர யக்ஞம் செய்வது, மஹாருத்ரம். இது கோயில்களில் கும்பாபிஷேகம் முதலான சமயங்களில் செய்யப்படுவதுண்டு. மஹாருத்ரம், உலகத்துக்கு நன்மையையும், நாட்டுக்கு சுபிட்சத்தையும், செழிப்பையும் தரும். 1331 வேதவிற்பன்னர்கள் ருத்ரத்தை தலா பதினொருமுறை சொல்வது, அதிருத்ரம். இதில் 14,641 முறை ருத்ரம் ஜபிக்கப்படும். எனவே, இந்த அதிருத்ர ஜப பாராயணத்தை அந்தக் காலத்தில் பெரும் தன்வந்தர்களும் மன்னர்களும் கோயில்களில்நடத்தினார்கள். இன்று அதிருத்ரம் வெகு அபூர்வமாக சில கோயில்களில் நடத்தப்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல், இதுவரை எங்கு நடக்காத ஒரு அற்புதமாக, அபூர்வமான வைபவமாக லட்சருத்ர ஜப பாராயணத்தை சிதம்பர திருத்தலத்தில் தொடங்கியிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.