கிருஷ்ணர் தன்னுடைய அவதாரத்தின் நோக்கத்தையும், வந்த வேலைகளையும் செவ்வனே முடித்துவிட்டார். எனவே தனது இடமான வைகுண்டம் செல்லத் தீர்மானித்தார். இதையறிந்த கிருஷ்ணரின் நண்பரான உத்தவர் மிகவும் வருத்தமடைந்தார். இத்தனை நாட்கள் கிருஷ்ணருடன் இருந்துவிட்டு இனி பிரியப் போகிறோமே என்கிற ஏக்கம். உத்தவரை பலவாறு தேற்றிய கிருஷ்ணர், யது என்கிற மன்னருக்கும், அவதூதர் என்கிற அந்தணருக்குமிடையே நடந்த உரையாடலைக் கூறினார். முன்னொரு காலத்தில் வேத சாஸ்திரம் படித்த அந்தணரான அவதூதர், ஓரிடத்தில் இல்லாமல் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து தவம் செய்தவண்ணம் இறைவழிபாட்டை மேற்கொண்டு வந்தார். பருவத்தில் முதியவராயினும் பார்ப்பதற்கு இளமையாகவே காட்சியளித்தார். அவரைக் கண்ட யது மன்னன் ஆச்சரியத்துடன் அவதூதரிடம், பெரிய பண்டிதரான தாங்கள் இந்த வயதிலும் ஒரு சிறுவனைப் போல் சுற்றித் திரிகின்றீர்கள். உலகியல் மீது தங்களுக்கு ஆசையே கிடையாதா? என வினவினான்.
அதைக்கேட்ட அவதூதர், மன்னா, நான் இருபத்து நான்கு குருமார்களிடம் போதிய அறிவையும், நற்குணத்தையும் கற்றேன். அவையே எனக்கு வழிகாட்டுகிறது என்றார். அவரது பதிலைக் கேட்டு வியந்த மன்னன், இருபத்து நான்கு குருக்களா? ஒருவரிடம் கற்கவே காலம் போதாதே. எப்படி இருபத்து நான்கு பேர்? என்று கேட்டான். தன்னுடைய குருமார்களின் பெயர்களை அவதூதர் வரிசைப்படுத்தி, தான் பாடம் கற்ற விதத்தையும் மன்னனுக்கு விவரித்தார். இதை அவதூத கீதை என்பர். (இந்த அவதூதரை தத்தாத்ரேயர் என்றும் கூறுவார்கள்.)
1. பூமி: நாம் வாழும் இந்த பூமியை பலர் தோண்டுகிறார்கள். மிதிக்கிறார்கள். இப்படி பல துன்பங்களைத் தந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி நமக்கு நல்ல உணவை விளைவித்துக் கொடுக்கிறது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவும் எண்ணத்தை பூமியிடமிருந்து கற்றேன்.
2. காற்று: காற்றானது எல்லா இடங்களிலும் வியாபித்திருந்தாலும், அதன் தன்மை இடத்திற்கேற்ப மாறுவதில்லை. அதுபோன்றதே நம்முடைய ஆத்மா. நம் உடல் இளமை, முதுமை என மாறினாலும் ஆத்மா மாறுவதில்லை. எல்லாருக்கும் பொதுவானது. இந்த தத்துவத்தை காற்றிடம் கற்றேன்.
3. ஆகாயம்: பரந்த உலகில் ஆகாயம் எங்கும் உள்ளது. இருப்பினும் அது ஒன்றிலும் சம்பந்தப்படாமல் தனித்தே இருக்கிறது. அதேபோன்று ஆத்மா ஒரு சர்வ வியாபியாக இருந்தாலும், ஒன்றிலும் கலக்காமல் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கிறது. இந்த தத்துவத்தை ஆகாயத்திடமிருந்து கற்றேன்.
4. நீர்: நாம் அருந்தும் நீர் புனிதமான பொருள். அது நிறமற்றது. நம்முடைய பாவங்களை நீக்கும் சக்தி படைத்தது. (புனித நீராடல்.) அதேபோன்று ஆத்ம ஞானியானவன் புனிதமானவன். தன்னை அடைகின்றவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடுத்து பாவங்களை நீக்க வல்லவன், இந்த பாடத்தை தண்ணீர் மூலம் உணர்ந்தேன்.
5. நெருப்பு: தீயானது எந்தப் பொருளையும் எரிக்கும் சக்தியுடையது. நெருப்புக்கு தனி உருவம் கிடையாது. அதேபோன்று ஞானியும் தான் செல்லும் இடமெல்லாம் தீயவற்றை நெருப்பு போன்று எரித்து நல்லவற்றை நிலை நாட்டுவான் என்பதை நெருப்புமூலம் கற்றேன்.
6. சந்திரன்: சந்திரனின் கலைகள் 15 நாட்கள் வளர்ந்தும் பின்னர் தேய்ந்தும் மாறி மாறி நிகழ்கிறது. அதேபோன்று பிறப்பு, வளர்ச்சி, முதுமை, இறப்பு ஆகியவை உடலுக்குத்தான் தவிர ஆத்மாவுக்குக் கிடையாது. இதை சந்திரனிடம் கற்றேன்.
7. சூரியன்: சூரியன் தன்னுடைய வெப்பத்தின் காரணமாக நீரை ஆவியாக்கி, அதை மேகமாக மாற்றி நமக்கு மழைநீராகக் கொடுக்கிறது. அதேபோன்று யோகியானவன் தன்னிடமுள்ளதை மற்றவர்களுக்குக் கொடுக்க முற்படுவான். இந்த நல்ல விஷயத்தை சூரியனிடமிருந்து கற்றேன்.
8. புறா: காட்டில் ஒரு ஆண் புறா பெண் புறாவுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக விளையாடும். ஆண் புறா உணவு தேடிச்செல்லும்போது பெண் புறா தனது குஞ்சுகளைக் காக்கும். ஒருநாள் வேடன் விரித்த வலையில் குஞ்சுகள் சிக்கிக்கொள்ள, அவற்றை காக்கச் சென்ற பெண் புறாவும் சிக்கிக்கொண்டது. தனது குடும்பமே வலையில் சிக்கியதைக் கண்டு அவற்றை காப்பாற்றச் சென்ற ஆண் புறாவும் சிக்கித் தவித்தது. வேடன் எல்லா புறாக்களையும் கொன்று புசித்துவிட்டான். மனைவி, மக்கள் என அதிக பாசம் வைத்தால், அதுவே நமக்கு எமனாக மாறிவிடும் என்ற தத்துவத்தை புறா மூலம் உணர்ந்தேன்.
9. மலைப்பாம்பு: மலைப்பாம்பு தன்னுடைய இரையைத் தேடி அலையாது. தான் இருக்குமிடத்தில் கிடைக்கும் இரையை மட்டுமே உண்ணும். அதுபோன்று ஒரு நல்ல அறிஞன் புலன் இன்பங்களுக்கு அலையக்கூடாது. கிடைக்கும் உணவை மட்டும் உண்ண வேண்டும். இந்த தத்துவத்தை மலைப்பாம்புமூலம் கற்றேன்.
10. கடல்: பரந்த கடலானது மிகவும் ஆழமானது. கடக்கக் கடினமானது. மழைக்காலத்தில் பல ஆறுகளிலிருந்தும் நீர் பெருகிவந்து கடலில் கலக்கும். அதனால் கடல் கரையைக் கடப்பதில்லை. அதேபோன்று வெயில் காலத்தில் கடல் நீர் வற்றுவதில்லை. அதுபோல நற்சிந்தனையுடைய ஞானிகள் செல்லவம் கிடைத்தால் சந்தோஷப்படுவதில்லை. கிடைக்காதபோது வருந்துவதுமில்லை. மனம் ஒரே நிலையில் இருக்கவேண்டுமென்கிற பக்குவத்தை கடலிடம் கற்றேன்.
11. விட்டில் பூச்சி: எரியும் சுடரைக் கண்டு, அது தன்னுடைய இரையென்று நினைத்து அந்த ஜோதியில் விழுந்த தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சி. அதேபோன்று மூடனாகிய மனிதன் பெண்ணாசையால் காம மோகத்தில் விழுந்து தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். மோகத்தில் எப்பொழுதும் விழக்கூடாது என்பதை விட்டில் பூச்சி உணர்த்தியது.
12. தேனீ: தேனீயானது பூக்களை நாடிச்சென்று தேனை எடுத்துவந்து அடையில் சேமிக்கிறது. ஒரு காலகட்டத்தில் அந்தத் தேனை எடுப்பதற்காக தேனீயைக் கொன்று, அந்த தேனடையை யாரோ எடுத்துச் செல்கிறார்கள். தன் உணவை தேவைக்குமேல் சேமிக்கவும் கூடாது. தேவைக்கு மேல் சாப்பிடவும் கூடாது. அளவுக்கு மீறினால் அழிவுதான் என்பதை தேனீயின்மூலம் உணர்ந்தேன்.
13. யானை: யானையைப் பிடிப்பவர்கள், பெண் யானையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அதற்கு எதிரே பெரிய பள்ளம் வெட்டி, அதன்மேல் மூங்கில், இலைகள் பரப்பி பள்ளத்தை மறைத்து வைப்பார்கள். பெண் யானைமீது கொண்ட மோகத்தால் ஆண் யானை வந்து தானே குழியில் விழும். உணவு, தண்ணீரின்றி இரண்டு மூன்று நாட்கள் பிளிரும். அது சோர்ந்தபிறகு அதை வெளியே எடுப்பார்கள். சற்று நேரம் கிடைக்கும் பெண் மோகத்திற்காக அதன்பின்னர் கிடைக்கும் வேதனையை யாரும் சிந்திப்பதில்லை. இந்த சிந்தனையை யானையிடம் கற்றேன்.
14. வேடன்: மற்றவர்களின் உயிரையும், பொருட்களையும் வேடன் பறித்துக்கொள்கிறான். பணம், பொருளாசை கொண்டவனிடமிருந்து மற்றொருவன் பறித்து அனுபவிக்கிறான். தர்மம் செய்யும் எண்ணமில்லாத உலோபிகள் பறிகொடுத்த பின்பு புலம்புவார்கள். தேவைக்கு மீறிய பொருட்களை சேர்த்தால் யாராவது ஒருவன் அவற்றைப் பறித்துச் செல்வான். இந்த உண்மையை வேடனிடம் கற்றேன்.
15. மான்: வேடனின் இனிமையான இசைக்கு மயங்கி மான் அசைவற்று நிற்கும். ஒரு கட்டத்தில் இசையை நிறுத்தி, மானை அம்பினால் கொன்றுவிடுவான் வேடன்.
இறைவனின் நாமத்தைச் சொல்லும் இனிய கானத்தைத் தவிர வேறெந்த கானத்திலும் நாட்டம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்தினால் மானின் கதிதான் என்னும் உண்மையை மான்மூலம் கற்றேன்.
16. மீன்: மீன் பிடிக்க தூண்டில் முனையில் சிறிய புழுவைச் செருகி வைப்பார்கள். தன் உணவுக்காக ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் மாட்டி இறக்க நேரிடும். நாவின் சுவைக்கு அடிமையானால் மீன்போல துன்பப்பட நேரிடும் என்பதை இதன்மூலம் உணர்ந்தேன்.
17. பிங்களா என்கிற பெண்: விதேக நாட்டில் பிங்களா என்னும் பெயருடைய விலைமாது இருந்தாள். அவள் தினமும் தன்னை அலங்கரித்துக்கொண்டு ஆடவர்களுக்காகக் காத்திருப்பாள். நாட்கள் செல்லச்செல்ல அதிக பணம்பெற நினைத்தாள். எனவே ஆடவர்கள் எவரும் வரவில்லை. தன் பேராசையை நினைத்து வருந்தி, அன்றுமுதல் இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். பணத்திற்காக ஈனப் பிழைப்பு நடத்தக்கூடாது என்பதை அந்தப்பெண் மூலம் கற்றேன்.
18. குரரம்: இது ஒருவகையான பறவை. இந்தப் பறவைக்கு ஒரு மாமிசத்துண்டு கிடைத்தது. அதை உண்பதற்காக ஒரு மரத்தின்மீது அமர்ந்திருக்கும்போது, அதனை விட வலிமையான பறவை அந்த மாமிசத்துண்டை அடைவதற்காக குரரம் பறவையைத் தாக்கியது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குரரம் பறவை மாமிசத்தைப் போட்டுவிட்டது. ஆசை அதிகமாகி அதை அடைய நினைத்தால் ஆபத்தில்தான் முடியும். அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை குரரம் பறவைமூலம் கற்றேன்.
19. சிறுவன்: சிறுவயதில் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எப்போதும் அவ்வாறே இருக்க வேண்டும். என்னும் பக்குவத்தை ஒரு சிறுவன் மூலம் உணர்ந்தேன்.
20. கன்னிகை: ஒரு வீட்டில் கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க வெளியூரிலிருந்து சிலர் வந்தனர். விருந்தாளிகளுக்கு உணவு சமைக்க, அந்தப் பெண் வீட்டின் பின்புறம் நெல்லைக் குத்திக்கொண்டிருந்தாள். அப்போது அவள் வளையல்கள் குலுங்கி ஓசையுண்டாக்கின. இந்த வளையல் சப்தம் கேட்டு தன்னை அடக்கமில்லாத பெண் என வந்தவர்கள் நினைத்துக்கொள்வார்களோ என்றெண்ணி, ஒரு வளையலை மட்டும் அணிந்துகொண்டு மற்றவற்றைக் கழற்றிவிட்டாள். அதுபோல பலர் ஒன்று சேர்ந்திருந்தால் அங்கு கடைசியில் சண்டை தான் வரும். எப்படி அந்த கன்னிகையின் ஒற்றை வளையல் சப்தம் எழுப்பவில்லையோ, அதேபோல் ஒற்றை மனிதனாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை அந்த கன்னிகைமூலம் கற்றேன்.
21. கொல்லன்: தன் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த கொல்லனுக்கு கவனம் முழுவதும் பணியில்தான் இருந்தது. வேறெதிலும் செல்லவில்லை. அதேபோன்று ஆத்ம விஷயத்தில் மனதை செலுத்தியவன் மற்ற எதைப் பற்றியும் கவலைப்படமாட்டான். இந்த உண்மையை கொல்லனிடம் கற்றேன்.
22. பாம்பு: பாம்பு எப்பொழுதும் தனியாகத்தான் வாழ விரும்பும். மனிதர்களிடம் அதற்கு பயம் அதிகம். அதேபோன்று ஞானிகள் தனியாக வாழ வேண்டும். தனியாகவே சஞ்சரிக்க வேண்டும் என்பதை பாம்பு மூலம் கற்றேன்.
23. சிலந்தி: சிலந்திப் பூச்சியானது தன் வாயின் மூலம் நூல் போன்ற வலையை உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் தன் வாயினாலேயே உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. அதே போல இறைவன் தன் மாயசக்தியால் உலகையும் உயிரையும் படைக்கிறான். பின்பு அவனே அதனைத் தன்னிடத்தில் ஐக்கியப்படுத்திக்கொள்கிறான். எனவே மனிதன் இறைவனைக் காண பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இறைவனுடன் ஐக்கியமாக முடியும் என்பதை சிலந்திமூலம் கற்றேன்.
24. குளவி: குளவியானது, பிறந்த ஒரு புழுவைக் கூட்டில் அடைத்துவைத்து, அதைக் கொட்டிக் கொட்டியே முழுக் குளவியாக மாற்றிவிடும். அதுபோல் இறைவனை மீண்டும் மீண்டும் தியானிப்பவர்கள் அவனுடைய சொரூபத்தை அடைகிறார்கள். இந்த தத்துவத்தை குளவியிடம் கற்றேன்.
இப்படியாக இருபத்து நான்கு பேர்களிடம் இருப்பது நான்கு விதமான வாழக்கை நுணுக்கத்தைக் கற்றேன். மேலும் எனது இந்த சரீரத்தையே என்னுடைய குருவாகவும் கொண்டேன். காரணம், இந்த சரீரம் மூலமாகத்தான் பலவற்றை கற்றேன். இந்த உடல் அழியக்கூடியது. புலன் இன்பத்திற்கும், போகத்திற்கும் ஆசைப்படாமல் இறைவனை வழிபட்டு ஞானத்தை பெற்றால்தான் மனிதப்பிறவி எடுத்ததன் பயனைப் பெற முடியும். இவ்வாறு அவதூதர் கூறிய உபதேசத்தைக் கேட்ட மன்னன், ஆசைகளை ஒழித்து ஞான மார்க்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று உணர்ந்தான். இந்த வரலாற்றை கிருஷ்ணர் தன் நண்பனான உத்தவருக்குக் கூறி மனம் தெளிவடையச் செய்தார். உலகில் எல்லாமே நிலையில்லாதது; இறைவன் ஒருவனே நிலையானவன் என்கிற கருத்தை இதன்மூலம் உணர்த்தினார்.