அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதுõரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது.
இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம். இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும். அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார்.
பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார், அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார். அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்! நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!