பதிவு செய்த நாள்
03
நவ
2016
02:11
சாஸ்திரங்களில் அதான தோஷேன பவேத்தரித்ர: தாரித்ரிய தோஷேன கரோதி பாபம் என்று ஒரு வசனம் உண்டு. மனிதன் ஒரு பிறவியில் சவுக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நிறைய தான தர்மங்களைச் செய்ய வேண்டும். எந்த ஒரு சுகத்தையும் லாபத்தையும் அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்றால் அதாவது, நல்ல சாப்பாடு, நகை அணிகலன்கள், நல்ல துணி நல்ல வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, எந்த சுகங்களை நாம் விரும்புகிறோமோ, அவற்றைப் பெற தானங்கள் செய்ய வேண்டும்.
விளக்கமாகச் சொல்வதென்றால், வங்கியில் நாம் பணம் போட்டு வைத்திருந்தால்தான் எடுத்து செலவு செய்ய முடியும். பணத்தை சேமிக்காமலேயே நாம் எங்கிருந்தும் எடுத்து செலவு செய்ய இயலாது. சம்பாதிக்காமல் பணத்தை சேர்க்கவும் இயலாது அல்லவா? அதுபோல், சாஸ்திரங்கள் ஒரு மனிதன் சவுக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் தானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஒருவன் பிறவியிலேயே ஏழ்மை நிலையில் இருந்தால் எவ்வாறு தானம் செய்ய இயலும்? என்று கேட்பீர்கள். ஆனால், இயன்றதைச் செய்யலாம். அது அவரவர் சக்திக்குத் தகுந்ததுபோல் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒரு ரூபாயோ, பத்து ரூபாயோ, நூறு ரூபாயோ வேஷ்டி துணி மணிகளோ என்று தானங்களைச் செய்யலாம். நல்லவர்களுக்கோ, பகவானுக்கோ செய்யும் தானம் என்று வீண் போகாது. மறுபிறவியில் அது போகமாக வரும். நாம் அனுபவிப்பதுபோல் நல்லதாக வரும். போன பிறவியில் நாம் சவுக்கியமாக இருந்து, யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தான தர்மம் செய்யாமல் இருந்தால்தான் இந்தப் பிறவியில் இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது.