பதிவு செய்த நாள்
11
நவ
2016
05:11
அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘அநு’ என்பது ‘அநுஸரித்து’, அதாவது ‘தொடர்ந்து’ போவது என்று அர்த்தம் கொடுக்கும். ‘க்ரஹம்’ என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈஸ்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈஸ்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் ‘அநுக்ரஹம்’! அவனைப் பிடிப்பதில் ஒரு குறியாக இல்லாமல் இந்த மனஸ் மறுபடி எங்கேயாவது ஒடும். ஆனாலும் அவன் அதைத் தொடர்ந்து, அதாவது துரத்திக் கொண்டே வந்து பிடித்து, அது தன்னைப் பிடிக்கும்படிப் பண்ணுவதுதான் ‘அநுக்ரஹம்’. தன்னை என்றால் மாயையோடு கூடிய நிலையிலுள்ள ஈஸ்வரனையுந்தான்; மாயா ஸம்பந்தமில்லாத ப்ரஹ்மத்தையுந்தான். ஏனென்றால், நம் மாதிரி ஈஸ்வரனும் மாயா ஸம்பந்தமுள்ளவன்தான் என்றாலும் நாம் மாயைக்கு அடிமைப்பட்டு மதியிழந்து ஆத்மஸ்வரூபத்தை மறந்திருப்பது போல இல்லாமல் அவன் மாயையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, இத்தனை மாயா கார்யம் பண்ணுகிற போதிலும் பூர்ணமான ப்ரஹ்மாநுபவத்துடன் இருப்பவன். ஆகையால் அவனை மாயா ஸஹித ஈஸ்வரனாகவே நாம் பிடித்தாலும் அவன் மாயா ரஹித ப்ரஹ்மமாக நம்மைத் தன்னோடு ஐக்யம் பண்ணிக் கொள்வான்.
மாறி மாறி ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் ‘ரன்னிங் ரேஸ்’ எப்படி நடக்கிறதென்றால்: இவன் (ஜீவன்) அவனைப் பிடிக்க முயற்சி பண்ணுகிறபோது அவன், ‘ஏகப்பட்ட கர்மா பாக்கி உள்ள இவனுக்கு நாம் அத்தனை ஸுலபத்தில் எல்லா ஸம்பத்துக்களுக்கும் மேற்பட்ட ஸாக்ஷாத்காரதைக் கொடுத்தால் தர்ம நியாயமே இல்லை’ என்று பிடிபடாமல் ஒடுவது; அதனால் ஜீவ மனஸு, “அவன்தான் பிடிபடலையே!” என்று அலுத்துப் போய் தனக்குப் பிடிபடுகிற கண்ட கண்ட விஷயங்களில் ஒடுவது; அப்போது ஈஸ்வரன் கருணையோடு அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்து பிடித்துத் தன்னை அவன் பிடித்துக் கொள்ளும்படி பண்ணுவது; ஆனாலும் இதை ஒரே வீச்சில் ரொம்ப ‘லீனியன்டா’கச் செய்வது கர்ம தர்மத்திற்கு ஏற்றதில்லை என்பதால், தான் தொடருவதையும் பிடித்துக் கொள்வதையும் ஜீவன் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அத்தனை ஸுக்ஷ்மமாகச் செய்து மனஸை அப்பப்போ ஆத்ம விஷயத்தில் ஈடுபடும்படி (அது தான் அவனைப் பிடித்துக் கொள்வது – ஆனாலும் ரொம்ப லேசாகத் தொடுவது; அப்படிச்) செய்வது; லேசான பிடிப்பை ஜீவன் இறுக்கப் பண்ணிக் கொண்டு அதற்கான காலம் வருவதற்கு முன்னாடியே விடுபட்டுவிடாமல் ஸமயத்திலே அவனிடமிருந்து நழுவி விடுவது; ஜீவன் மனஸைத் தறிகெட விடுவது; அப்புறம், ‘அதற்குள்ளே இவன் அம்ருதத்திலே முழுகக் கூடாது என்று நாம் விலகிக் கொண்டால், இவனானால் ஜலத்திலேகூட முழுகாமல் சாக்கடையில் போய் விழுகிறானே!’ என்று ஈஸ்வரன் பரிதாபப்பட்டு மறுபடி கொஞ்சம் பிடிபடுவது- என்றிப்படி இழுத்தடிக்க வேண்டிய மட்டும் இழுத்தடித்து விட்டு, கால க்ரமேண ஜீவன் நன்றாகவே மனஸ் முழுதையும் லக்ஷ்யத்தில் முழுக்கும்படிப் பண்ணி அப்போது ஈஸ்வரன் ஒரே துரத்தாகத் துரத்தி ஒரே பிடியாகப் பிடித்து, அதாவது ‘அநுக்ரஹம்’ என்பதைப் பூர்ணமாகச் செய்து ஸாக்ஷாத்காரத்தில் சேர்ப்பது என்று நடக்கிறது.