பதிவு செய்த நாள்
18
நவ
2016
11:11
வேலுார்: அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, வரும் பக்தர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பைகளை எடுத்து வந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தங்கம், வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று,திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில், டிசம்பர், 12ம் தேதி, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இதற்கு வரும் பக்தர்கள், தங்களது பூஜை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்ல, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இதை வழியில் வீசுவதால் ஏற்படும், குப்பையை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சணல் மற்றும் துணியால் தயாரித்த பைகளை, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பக்தர்கள் எடுத்து வருவதை ஊக்கப்படுத்தவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் துணிப்பை, சணல் பைகளை காண்பித்து, வரிசை எண்ணுடன் கூடிய சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும், கணினி குலுக்கல் முறையில், அதிர்ஷ்ட நபர் தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு எட்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை என்ற அடிப்படையில், சிறப்பு பரிசுக்கு ஒருவரை தேர்வு செய்து, 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபரின் வரிசை எண், கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் காவல் துறை ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும்.பரிசுக்கு தேர்வு செய்யப்படு பவர்கள், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள, நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் பரிசு சீட்டை ஒப்படைத்து, தங்கம் அல்லது வெள்ளி நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று, தி.மலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.