பதிவு செய்த நாள்
07
அக்
2011
12:10
ஜோகன்னஸ்பர்க்கில் நான் நிலைபெற்றுவிட்டேன் என்று நினைத்த பிறகும் எனக்கு நிலையான வாழ்க்கை ஏற்படவில்லை. இனிமேல் கொஞ்சம் அமைதியாக இருக்க முடியும் என்று நான் எண்ணிய சமயம், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நேட்டாலில் ஜூலுக் கலகம் ஆரம்பமாயிற்று என்று பத்திரிகைகளில் செய்தியைப் படித்தேன். ஜூலுக்களிடம் எனக்கு எந்த விதமான விரோதமும் இல்லை. அவர்கள் இந்தியருக்கு தீமை செய்துவிடவும் இல்லை. கலகம் என்று சொல்லப்பட்டதைக் குறித்து எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகத்தின் நன்மைக்காகவே இருக்கிறது என்று நான் அப்பொழுது நம்பினேன். எனக்கு இருந்த உண்மையான விசுவாசம், அந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஒரு கெடுதலைக்கூட எண்ண முடியாதபடி என்னைத் தடுத்தது. ஆகையால், கலகம் நியாயமானதுதானா, நியாயமில்லாததா என்பதும் கூட என்னுடைய தீர்மானத்தைப் பாதித்து விடவில்லை. நேட்டாலில் தொண்டர் பாதுகாப்புப் படை ஒன்று இருந்தது. அதில் அதிகம் பேரைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு இடமிருந்தது. கலகத்தை அடக்குவதற்காக இப்படை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பத்திரிகைகளில் படித்தேன்.
நேட்டாலுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டவன். ஆகையால், என்னை அதன் பிரஜையாகவே கருதினேன். எனவே, அவசியமானால், இந்திய வைத்தியப் படை ஒன்றை அமைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துக் கவர்னருக்கு எழுதினேன். என் யோசனையை ஏற்றுக்கொண்டு அவர் உடனே பதில் எழுதினார். இவ்வளவு சீக்கிரமே என் யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, கடிதம் எழுதுவதற்கு முன்னாலேயே, அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தேன். என் யோசனை ஏற்கப்பட்டுவிடுமானால், ஜோகன்னஸ்பர்க் ஜாகையை எடுத்துவிடுவது, வேறு ஒரு சிறு வீட்டுக்குப் போலக் குடி போய்விடுவது, என் மனைவி போனிக்ஸு க்குப் போய் அங்கேயே இருப்பது என்று நான் தீர்மானித்தேன். இம் முடிவு குறித்து என் மனைவி பூரண சம்மதம் அளித்தாள். இதுபோன்ற காரியங்களில் என் தீர்மானத்திற்கு அவள் என்றாவது ஒரு சமயமேனும் குறுக்கே நின்றதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஆகையால், கவர்னரிடமிருந்து பதில் வந்ததுமே, வீட்டைக் காலி செய்வதற்கு வீட்டுச் சொந்தக்காரருக்கு வழக்கமான ஒரு மாத முன்னறிவிப்புக் கொடுத்தேன். வீட்டிலிருந்த சாமான்களில் சிலவற்றைப் போனிக்ஸு க்கு அனுப்பிவிட்டு மீதியைப் போலக்கிடம் விட்டுச் சென்றேன்.
டர்பனுக்குச் சென்று, ஆள் தேவை என்று கோரிக்கை வெளியிட்டேன். பெரிய படை எதுவும் தேவைப்படவில்லை. இருபத்து நான்கு பேரைக் கொண்ட ஒரு குழு எங்கள் படை இதில் என்னைத் தவிர மற்றும் நான்கு குஜராத்திகள் இருந்தனர். சுயேச்சையான ஒரு பட்டாணியரைத் தவிர மற்றவர்களெல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்; முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்தவர்கள். எனக்கு ஓர் அந்தஸ்தை அளிப்பதற்காகவும், வேலை எளிதாக நடப்பதற்காகவும், அப்பொழுது இருந்த சம்பிரதாயத்தை அனுசரித்தும், பிரதம வைத்திய அதிகாரி என்னைத் தற்காலிக சார்ஜண்டு மேஜராக நியமித்தார். நான் தேர்ந்தெடுத்த மூவரை சார்ஜண்டுகளாகவும், ஒருவரைக் கார்ப்பொரலாகவும் நியமித்தார். இவற்றிற்குரிய ஆடைகளையும் அரசாங்கத்தினர் எங்களுக்கு அளித்தனர். எங்கள் படை ஆறு வாரம் சேவை செய்தது. கலகப் பிரதேசத்தை அடைந்ததும், கலகம் என்ற பெயர் அதற்குச் சரி என்பதற்கான நியாயம் எதையும் நான் அங்கே காணவில்லை. கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் எதிர்ப்பு என்பதே இல்லை. சிறு கலவரம்,பெறும் புரட்சியாக மிகைப்படுத்தப்பட்டதன் காரணம் இதுதான்: ஜூலுக்கள் மீது புது வரி விதித்தார்கள். அதைக் கொடுக்க வேண்டாம் என்று ஒரு ஜூலுத் தலைவர் தம் மக்களுக்கு கூறினார்.
வரி வசூலிக்கப் போன ஒரு சார்ஜண்டை ஈட்டியால் குத்திவிட்டனராம். விஷயம் எப்படி இருந்தாலும், என் அனுதாபம் ஜூலுக்கள் பக்கமே இருந்தது. எங்களுடைய முக்கியமான வேலை, காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வதே என்று, தலைமைக் காரியாலயத்திற்குப் போனதும் நான் அறிந்து ஆனந்தமடைந்தேன். அங்கிருந்த வைத்திய அதிகாரி எங்களை வரவேற்றார். காய மடைந்த ஜூலுக்களுக்கு வெள்ளைக்காரர்கள் மனமாரப் பணிவிடைகள் செய்வதில்லை என்றும், அவர்கள் புண்கள் அழுகிக்கொண்டு வருகின்றன என்றும், என்ன செய்வதென்று தெரியாமல் தாம் திகைத்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். நாங்கள் வந்தது, ஒரு பாவமும் அறியாத ஜூலுக்களுக்குத் தெய்வ சகாயம்போல் ஆயிற்று என்று அவர் ஆனந்தம் அடைந்தார். புண்களுக்கு மருந்து வைத்துக் கட்டுவதற்கு வேண்டியவைகளையும், கிருமி ஒழிப்பு மருந்துகளையும் எங்களுக்குக் கொடுத்தார். தாற்காலிக ஆஸ்பத்திரிக்கும் எங்களை அழைத்துச் சென்றார். எங்களைப் பார்த்ததும் ஜூலுக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எங்களுக்கும் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்த இடத்திற்கும் மத்தியில் கம்பிக் கிராதி போட்டிருந்தனர். அதன் வழியே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் எங்களை எட்டிப் பார்த்து, ஜூலுக்களுக்குச் சிகிச்சை செய்ய வேண்டாம் என்று எங்களைத் தூண்ட முயன்றனர். அவர்கள் சொல்லுவதை நாங்கள் கேட்காது போகவே ஜூலுக்களைச் சொல்லொணாத கேவலமான பாஷையில் திட்டினார்கள்.
நாளாவட்டத்தில் இந்தச் சிப்பாய்களுடன் நான் நெருங்கிப் பழகலானேன். பிறகு எங்கள் வேலையில் தலையிடுவதை அவர்கள் நிறுத்தி விட்டனர். ராணுவத்தில் பெரிய உத்தியோகத்தில் கர்னல் ஸ்பார்ஸு ம், கர்னல் வைலியும் இருந்தனர். 1896-இல் இவர்கள் என்னை அதிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இப்பொழுது என் போக்கைக்கண்டு ஆச்சரியமடைந்தனர். என்னைப் பார்ப்பதற்கென்றே வந்து, எனக்கு நன்றியும் தெரிவித்தனர். ஜெனரல் மெக்கன்ஸியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இவர்கள் எல்லோரும் ராணுவ சேவையையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வாசகர்கள் எண்ணிவிடவேண்டாம். கர்னல் வைலி, டர்பனில் பிரபலமான வக்கீல். கர்னல் ஸ்பார்கஸ், டர்பனில் ஒரு பெரிய கசாப்புக்கடையின் சொந்தக்காரர் என்ற வகையில் பிரபலமானவர். ஜெனரல் மெக்கன்ஸி, நேட்டாலில் பிரபல விவசாயி. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் படையில் சேர்ந்தவர்கள். இதனால், ராணுவப் பயிற்சியையும் அனுபவத்தையும் இவர்கள் பெற்றனர். எங்கள் பராமரிப்பில் இருந்த காயம்பட்டோர், யுத்தத்தில் காயமடைந்தவர்களல்ல. இவர்களில் ஒரு பகுதியினரைச் சந்தேகிக்கப்பட்டவர்கள் என்றுசிறைப்படுத்தினர். இவர்களுக்குச் சவுக்கடி தண்டனை அளிக்கும்படி ஜெனரல் தீர்ப்பளித்தார்.
சவுக்கடியால் இவர்களுக்குப் பலமான புண்கள் ஏற்பட்டன. புண்களுக்கு எந்தச் சிகிச்சையுமே செய்யாது போனதால் அழுகிவிட்டன. மற்றவர்களோ, சிநேகமான ஜூலுக்கள். விரோதிகளிலிருந்து இவர்களைப் பிரித்துக் காட்டுவதற்காக இவர்களுக்குப் பட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தும் தவறாக இவர்களைச் சிப்பாய்கள் சுட்டுவிட்டனர். இந்த வேலையல்லாமல், வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்கு மருந்து கலந்து கொடுக்கும் வேலையும் எனக்கு இருந்தது. டாக்டர் பூத்தின் சிறிய வைத்தியசாலையில் ஒரு வருடம் நான் இதில் பயிற்சி பெற்றிருந்ததால், இந்த வேலை எனக்கு எளிதாக இருந்தது. இந்த வேலையின் காரணமாக அநேக ஐரோப்பியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதிக வேகமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய்க் கொண்டிருந்த ஒரு படையுடன் நாங்கள் இணைக்கப்பட்டிருந்தோம். எங்கெங்கே ஆபத்து இருப்பதாகத் தெரிந்ததோ அங்கே போகும்படி இப்படைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பெரும்பகுதியினர் குதிரை வீரர்கள். எங்கள் முகாம் நகர்ந்ததும் காயமடைந்தவர்களைத் தூக்குவதற்குள்ள டோலிகளைத் தோளில் சுமந்துகொண்டு நாங்கள் நடந்தே போகவேண்டும். இரண்டு மூன்று தடவைகளில் ஒரே நாளில் நாற்பது மைல்கள் நாங்கள் நடந்து போகவேண்டி வந்தது. ஆனால், நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் எங்களுக்குத் தெய்விகத்தொண்டு இருந்ததற்காக நன்றியுள்ளவனாகிறேன். தவறுதலாகச் சுடப்பட்டு விடும் சிநேக ஜூலுக்களை நாங்கள் டோலிகளில் தூக்கிக்கொண்டு முகாம்களுக்குப் போய்த் தாதிகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தோம்.