சித்தாந்த ரத்னாகரம் என்ற நூலில் கார்த்திகை மாத திங்கட்கிழமை செய்யும் சங்காபிஷேகத்தை பற்றிய தகவல் உள்ளது. இறைவன் கார்த்திகையில் அக்னிப் பிழம்பாக உள்ளதால் அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்கில் நீர் நிரப்பி கங்கையாக பாவித்து அபிஷேகம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பதும், அதில் சந்திரன் நீசத்தில் இருப்பதும் தோஷமாகிறது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்யவும் சங்காபிஷேகம் செய்கின்றனர்.
ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ள நீரிலும் ஆவிர்பவிக்கிறார். அப்போது வீடுகளில் செய்யப்படும் சாளக்கிராம பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். பாவம், வறுமை போன்றவற்றைப் போக்கி வளமான வாழ்வு பெறலாம். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்பர். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் குப்தகங்கை எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.