பதிவு செய்த நாள்
29
நவ
2016 
12:11
 
 ஓசூர்: ஓசூர் அருகே, 3,000 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, 10 கி.மீட்டரில் அமைந்து உள்ள தாசனபுரம் கிராமத்தில், வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச் சின்னங்களான, 50க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: தாசனபுரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்திட்டைகள், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தவை. இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த மல்லசந்திரத்தில், 250க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் உள்ளன.பொதுவாக, கற்திட்டைகள் என்பது நான்கு கற்பலகைகளை சதுரமாக, செங்குத்தாக நிற்க வைத்து, அதற்கு மேல்புறத்தில் தட்டையான கற்பலகை கொண்டு மூடப்பட்டிருக்கும். அதை சுற்றிலும் அடுக்கடுக்காக, வட்ட வடிவமாக கற்பலகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.அதிகமான கற்திட்டைகள், கிழக்கு நோக்கியே இருக்கும். கிழக்கு பக்கம் இருக்கும் கற்பலகையில், 1 மீட்டர் சுற்றளவுக்கு துளையிடப்பட்டிருக்கும். இந்த துவாரங்கள் அனைத்தும், 90 டிகிரி கோணத்தில் இருக்கும். இந்த துவாரத்தின் வழியாக, இறந்தவர்களின் ஆவி உள்ளே வந்து தங்கி செல்வதாக, பழங்கால மக்கள் நம்பினர். தாசனபுரத்தில் இருக்கும் கற்திட்டைகள், 10 ஏக்கரில் உள்ளன. கல் வட்டங்கள், ஓரடுக்கு முதல் மூன்று அடுக்குகள் வரை வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.