பதிவு செய்த நாள்
08
டிச
2016
05:12
பிரதோஷ காலம் என்பது, மாலை 4-7.30 வரை உண்டு. ஆயினும், மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பர். பிரதோஷ விரதம் என்பது மிகச் சிறப்பானது. அன்று காலை நீராடி திருநீறு அணிந்து, நமசிவாய நாமம் ஓதி, விரதம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்ண வேண்டும். பிரதோஷங்களில் 20 வகை உண்டு.
1. தினப்பிரதோஷம்: தினமும் சந்தியா காலமான மாலை 4.30 -6.30 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம். இந்தப் பிரதோஷத்தை ஐந்து வருடங்கள் முறையாகச் செய்தால் முக்தி நிச்சயம்.
2. பட்சப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம், அன்று மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு-பறவையோடு தொடர்புடைய சிவலிங்கத்தை தரிசிப்பது நன்மை தரும்.
3. மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப்பிரதோஷம். இந்த திதியில் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்துக்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம்.
5. பூரண பிரதோஷம்: திரயோதசியும், சதுர்த்தசியும் சேராத திரயோதசி திதி மட்டுமே உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம். அன்று சுயம்பு லிங்கத்தை த் தரிசனம் செய்வது இரட்டிப்பு பலன் தரும்.
6. திவ்யப் பிரதோஷம்: துவாதசியும் திரயோதசியும், அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வருதல் திவ்யப் பிரதோஷம் அன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் முன்ஜன்ம வினை தீரும்.
7. தீபப் பிரதோஷம்: திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்து, ஈசன் கோயில்களை தீபங்களால் அலங்கரித்து வழிபட சொந்த வீடு அமையும்.
8. அபயப் பிரதோஷம் / சப்தரிஷி பிரதோஷம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வ வடிவில் தெரியும் சப்தரிஷிமண்டல நட்சத்திரக் கூட்டத்தை தரிசித்து வழிபடுவது.
9. மகா பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாளான கார்த்திகை மாத சனிக்கிழமை, திரயோதசி திதியில் வருவது. அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் நன்மை தரும். மாசி மாத மகாசிவராத்திரிக்கு முன் வரும் பிரதோஷமும், மகா பிரதோஷமே.
10. உத்தம மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மாத வளர்பிறை, சனிக்கிழமைகளில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம்.
11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷம் அன்று விநாயகரையும் வழிபட பலவித நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு மகா பிரதோஷம் வருவது. இதனால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்தவர் ஒன்று சேர்வர்.
13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று மகாபிரதோஷம் வருவது. இதனால், அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வருவது. இதனால் முன் ஜன்ம பாவம், தோஷம் நீங்கி நன்மை பெறலாம்.
15. அட்சரப் பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து மகா பிரதோஷம் வருவது, ஈசன், பிட்சாடனராக தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்ட, அவர்கள் இதனை அனுஷ்டித்து பாப விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமை, திரயோதசி, கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவது. சூர சம்ஹாரத்துக்கு முன் முருகன் வழிபட்ட பிரதோஷம்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் வரும் ஏழு மகாபிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்வது, முன் ஜன்ம வினை நீங்க வல்லது.
18. அஷ்ட திக் பிரதோஷம்: வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாடு, அஷ்ட திக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி தருவர்.
19. நவக்கிரகப் பிரதோஷம்: வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வருவது. இதில் முறையாக விரதம் இருந்தால் நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம்: பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. பிறவி குறைபாடு சரியாகும்.
மகா சிவராத்தியின் போது, பிரதோஷ வழிபாட்டையும் அதன் வகைகள் மகிமைகளையும் அறிந்து கடைப்பிடித்தால் ஈசன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.
சங்கடம் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!
சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் உன்னதமானது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் வரும் சனி பிரதோஷங்கள் சனி மஹா பிரதோஷங்கள் எனப்படுகின்றன. ஆலகால விஷத்தை ஏற்று. தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி. எனவே கார்த்திகை சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.