நாயன்மார்களில் திருஞானசம்பந்தர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மதுரையில் பாண்டியமன்னன் கூன்பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் அவனுடைய மனைவி மங்கையர்க்கரசி சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தார். மன்னன் சமணசமயத்தைப் பின்பற்றி வந்தான். மன்னனை சிவபக்தனாக மாற்ற எண்ணிய மங்கையர்க்கரசி அமைச்சர் குலச்சிறையார் மூலம் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தார். திருஞானசம்பந்தரும் ஆலவாய் என்னும் மதுரைக் கோயிலைப் பாடினார். அதோடு சிவனடியாரான மங்கையர்க்கரசியையும் தன் பாடலில் சிறப்பித்துப் பாடியது குறிப்பிடத் தக்கது. மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை எனத் தொடங்கும் பாடல் ஆலவாய் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது.