பதிவு செய்த நாள்
02
ஜன
2017
12:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பங்கு தந்தை ராஜமாணிக்கம் புத்தாண்டு வாழ்த்து செய்தி மற்றும் ஆசி வழங்கினார். நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதே போல் சி.எஸ்.ஐ., சவேரியார் சர்ச்சில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், சிவஞானபுரம் குமரையா, குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, கோதண்டராமசுவாமி, பால ஆஞ்சநேயர், வெற்றி விநாயகர், வெட்டுடையாள் காளி, வன சங்கரி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
சுந்தரமுடையான் தில்லை நாச்சியம்மன், மண்டபம் ஓடைத்தோப்பு சந்தன பூமாரி அம்மன், அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன், புதுக்குடியிருப்பு தில்லை நாச்சியம்மன், மைக்குண்டு முத்து மாரியம்மன்,வேதாளை நாகநாதர் கோயில், உச்சிப்புளி சந்தன மாரி அம்மன், நாகாச்சி உச்சனமாரியம்மன், வழுதுார் அருளொளி விநாயகர், வாலாந்தரவை அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடியபின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். பின், கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த புத்தாண்டு தின சிறப்பு அபிஷேகம், பூஜையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால், நேற்று கோயில் ரதவீதி, சன்னதி தெருவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
* உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் அர்ச்சகர் ரவிக்குமார் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையில் அதிகாலை முதல் மாலை வரை பெண்கள் அதிகளவில் வழிபாடு செய்தனர். செங்குடி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் பங்கு பாதிரியார் சாமு இதயன் தலைமையில் புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காலை நிகழ்சிகள் நடைபெற்றன.
* பரமக்குடி அலங்கார மாதா சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு திருப்பலி துவங்கியது. தொடர்ந்து பங்குத்தந்தை செபஸ்தியான் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி கூறப்பட்டது. நேற்று காலை மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள், முத்தாலம்மன், ஈஸ்வரன், மீனாட்சி, யோகமுனீஸ்வரர், தர்மசாஸ்தா, வரதராஜப்பெருமாள், அனுமார் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* திருவாடானை, தொண்டி பகுதியில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிதம்பரேஸ்வரர் உள்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சாயல்குடி மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிவநாம அர்ச்சனை, உலக நன்மைக்கான பாடல்கள் பாடினர். பூஜைகளை குருக்கள் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.