ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து இந்த ஆண்டு 20 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ளதாக, ராமேஸ்வரம் வந்த இலங்கை பக்தர்கள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இலங்கையிலிருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். இதற்காக இவர்கள் கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வருகின்றனர். பின்னர் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் உறவினர்கள் மூலம் இருமுடி கட்டி சபரிமலை செல்கின்றனர். இந்த ஆண்டு முதல்கட்டமாக யாழ்பாணம் நயினார் தீவை சேர்ந்த 13 ஐயப்ப பக்தர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்கள் இருமுடி கட்டுவதற்காக ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதி முகாமில் தங்கியுள்ள உறவினர்களை சந்திக்க ஜன.6, மண்டபம் போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கோரினர். அவர்களிடம் மத்திய, மாநில உளவு போலீசார் விசாரித்த பின் முகாமிற்கு செல்ல அனுமதித்தனர்.
இலங்கை பக்தர் பிரசாந்த் கூறுகையில்,“ இலங்கையில் தமிழர்கள் அமைதி, பொருளாதாரம், கல்வியில் முன்னேற ஐயப்பன் அருள் வேண்டி கடந்த 6 ஆண்டுகளாக சபரிமலை செல்கிறோம். இந்தாண்டு 20 ஆயிரம் தமிழர்கள் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஜன.,14 க்குள் சென்னை வருவார்கள். இங்குள்ள அகதிகள் முகாமில் உறவினர்கள் உதவியுடன் இருமுடி கட்டி சபரிமலை செல்வோம்,” என்றார்.