நாம் ஒருவர் செய்யும் பணியில், ஏதோ ஒரு உதவி செய்தாலே போதும்! அந்த சிறு பங்களிப்பை ராமருக்கு அணில் உதவி செய்தது போல என்ற உவமையுடன் குறிப்பிடுவர். உண்மையில், இந்த நிகழ்ச்சி ராமாயணத்தில் இடம் பெற்றதா என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, தமிழில் கம்பராமாயணத்திலோ, இந்தியில் துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் போது அணில் உதவியதாக தகவல் இல்லை. இது ஒரு கர்ணபரம்பரை கதை. ஆனால், எல்லா மொழி மக்களிடமும் இந்தக்கதை பிரசித்தமாகி விட்டது. இந்தக் கதை எதில் தான் இருக்கிறது என்றால், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை 27வது பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. அணில் பற்றிய குறிப்பு அதில் வருகிறது. அடியவர்களின் பாதத்தூளியை (தூசு) தலையில் ஏற்றுக் கொண்ட அடியவர் இவர் என்பதால், அணிலையும் பெருமையாகப் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது.