மென்மையான பொங்கலை சூரியனுக்கு நைவேத்யம் செய்கிறோம். இது குறித்த புராணத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. பார்வதியின் தந்தையான தட்சன், சிவனை அழைக்காமல் ஒரு யாகம் செய்தான். சூரியன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் யாகத்திற்கு வந்தனர். இதையறிந்த பார்வதிதேவி, மருமகனை அழைக்காமல் யாகம் நடத்தியது பற்றி தந்தையை தட்டிக் கேட்டாள். தட்சனோ சிவனை நிந்தித்து பேசினான். இதைக் கேட்டு சூரியன் கலகலவென சிரிக்க, விஷயம் சிவனைச் சென்றடைந்தது. சிவன் கோபத்தால் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி தேவர்களைத் தண்டித்தார். சூரியனிடம் வீரபத்திரர்,“நீ தானே பல் தெரிய சிரித்தவன்” என்று சொல்லி ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பற்கள் நொறுங்கி விழுந்தன. இதனடிப்படையில் காஞ்சிப்பெரியவர்,“சூரியனைப் பல் இல்லாத கிரகம் என்றும், பொங்கலன்று அவருக்கு வழுக்கை தேங்காய் படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடுவார். இதற்காகவே அப்படியே விழுங்கும் சர்க்கரைப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.