பதிவு செய்த நாள்
19
ஜன
2017
05:01
பிருத்வி எனப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர் கோயிலின் ஸ்தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலைத் தவிர மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, அவிநாசி, திருநீரகம் ஆகிய இடங்களில் உள்ள பழமையான சிவன்கோயில்களிலும் மாமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. மிகப்பழமையான கோயில்களில் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஸ்தல விருட்சமாக விளங்கும் மாமரத்தின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்கள். ஒருமுறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்தபோது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.
ஆனால் ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். தேவி ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர, தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித் தருளித் திருமணம் செய்து கொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும் உள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்குப் பின்புறம் பிரகாரத்தில் இந்த மாமரம் அமைந்துள்ளது. இந்த மரத்தின் அடியில் சிவன். அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்த வடிவில் உள்ளார். தேவி வெட்கத்துடன். தலை கவிழந்தபடி சிவனை நோக்கித் திரும்பியிருக்கிறாள். இதனை சிவனின் திருமணக்கோலம் என்கின்றனர். அம்பாள் தவம் செய்தது மரத்தடியில் என்பதால் அப்பெயராலேயே ஏகாம்பரேஸ்வரர் எனப்படுகிறார். (ஏகம் - ஒரு; ஆம்ரம்-மரம்) சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரத்தை வேத மாமரம் என்றும் அழைப்பர். நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இம்மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என நால்வகைச் சுவைகளைக் கொண்ட கனிகளைத் தருகிறது. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் புத்திர சந்தானம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்த மரத்தின் கனியை எவர் பக்தியோடு புசிக்கிறாரோ அவர் வேத வித்யா குருவாவதாக மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புராணத்தில் சண்முகக் கடவுளும் இம்மரத்தடியில் இருந்து ஈசனை பூஜித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
துங்கப்பத்ரா நதியோரத்தில் உள்ள சிருங்கிசைலத்தில் கிரௌஞ்சன் என்ற அந்தணன், சிவபக்தர்கள் நாள்தோறும் பூஜிக்கின்ற ஸ்வர்ண லிங்கங்களைத் திருடி அதனை விற்று ஜீவனம் செய்து வந்தான். அந்தப் பாவத்தால் அவனுக்குப் பதினாறு பிள்ளைகள் அரவாணிகளாகப் பிறந்தனர். அப்பிள்ளைகளைப் பார்த்து மனம் வருந்திய அந்தணன் தன் பாபவிமோசன நிவர்த்திக்காக பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஈசனை தரிசித்து வந்தான். அப்படி வரும் வேளையில் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள மாமரத்தடியில் இளைப்பாறி ஈசனை வேண்டி தன்வீட்டை அடைந்தான். அந்தணன் மாமரத்தடியில் வாசம் செய்து ஈசனை பக்தியுடன் வேண்டிக் கொண்டதால் அவரது மகன்கள் புருஷ ரூபம் அடைந்திருந்தார்கள். அதனைப் பார்த்த அந்தணன், இனி நம் குலம் விருத்தியடையும். இவ்வாறு விருத்தியடையச் செய்தது மாமரத்தடியில் வீற்றிருக்கும் ஏகாம்பரமே என எண்ணினான். இளைப்பாறுவதற்குத் தங்கி இருந்த புண்ணியமே இவ்வளவு பெரும் பேறு என்றால் இந்தச் க்ஷேத்திரத்தில் எப்போதும் வசித்தால் நமக்கு என்னவெல்லாம் பலன் வருமோ! என்று ஆச்சர்யம் அடைந்தான்.
ஏகாம்பரேஸ்வரின் மாமரத்தடியை அந்தணனும், பிள்ளைகளும் அடைந்து வணங்கினர். பிறகு அந்தணன் தனது இறுதிக்காலத்தில் சிவத்தொண்டு செய்து புண்ணியலோகமடைந்தான் என்பதாகப் பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும் சுந்தரமூர்த்தி நாயனார், இங்குள்ள ஈசனை வழிபட்டு இடக்கண்ணைப் பெற்றதாகவும் தலபுராணம் கூறுகிறது. தைமாதம் ரதசப்தமியன்று இங்குள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. அந்த நாளில் ஈசனை தரிசனம் செய்தால் பாவம் தோஷங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. பொதுவாக மாமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாருக்கு, கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் வியாபாரம் செழிக்கும். மேற்கண்ட பல சிறப்புகள் பெற்ற பழமை வாய்ந்த மாமரத்தையும், ஏகாம்பரரையும் தரிசித்து நாமும் நம் பாபங்களைப் போக்கிப் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
மருத்துவ குணங்கள்: சிவன்கோயில்களில் தலவிருட்சமாக விளங்கும் மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை, பிசின், வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இந்துக்கள் வீட்டு விசேஷங்கள், பண்டிகைகளில் மாவிலையைத் தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்களப் பொருளாகப் பயன்படுகிறது. தவிர மாவிலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு மற்றும் விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு சுவாச நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. கோமியத்தை வீட்டில் தெளிக்கும்போதும் மாவிலையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகுவதாக ஐதீகம். கொழுந்து இலையைத் தேன் வீட்டு வதக்கி குடிநீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினால் தொண்டைக் கட்டு நீங்கும், நீரழிவு உள்ளவர்கள் மாக்கொழுந்து இலையை உலர்த்திப் பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் நீரழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மாவிலையைச் சுட்டு சாம்பலாக்கி வெண்ணையில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பிசினை காலில் பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மாவிலையின் நடு நரம்பை மைபோல் அரைத்து முகப்பருக்கள் மீது தடவினால் அவை மறையும். உலர்ந்த மாம்பூக்களில் டானின் என்ற சத்து உள்ளது. இதைக் குடிநீரில் போட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் குணமாகும். மாவடு பசியைத் தூண்டும் தன்மை உடையது. மாம்பழத்தில் விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும் கண்பார்வையைத் தெளிவாக்கும், வாய்ப்புண்ணை அகற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.