பதிவு செய்த நாள்
24
ஜன
2017
03:01
ருத்ராட்சம் என்பதற்கு சிவபிரானின் கண்கள் என்று பொருள். ருத்ராட்சம் அணிந்தவர் எவராயினும் அவர்களை தீமைகள் அண்டாது என்கிறது உபதேச காண்டம். சிவனார் திரிபுரம் எரித்தபோது சினம் கொள்ள, அவர் விழிகளை சுற்றி அரும்பிய வியர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து ருத்ராட்ச மரங்கள் உருவாயின என்கின்றன புராணங்கள். சிவன்கோயில்களில், சிவபெருமானுக்கு ருத்ராட்ச பந்தல் அமைப்பது வழக்கம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர ஸ்வாமிக்கு முத்தும் ருத்ராட்சமும் இணைத்து செய்யப்பட்ட கிரீடம் உண்டு. இமயச் சாரலிலும் நேபாளத்திலும் ருத்ராட்ச மரங்கள் அதிகம் உண்டு. ருத்ராட்சங்களில் இயற்கையாகவே அமைந்த நாளங்களும், கோடுகளும், கேசரங்களும் இறை அற்புதமே! மகிமைமிகு ருத்ராட்சங்கள் கோக்கப்பட்ட மாலைகளை தாழ்வடம், அக்கவடம், அட்சமாலை, கண்டிகை எனப் பல்வேறு பெயர்களில் ஞானநூல்கள் குறிப்பிடுகின்றன. அக்கமணி, தெய்வமாமணி, புனிதமாமணி, நாயகன் விழி மணி, கண்மணி, கடவுள் நன்மனி என்று பலவாறு ருத்ராட்சத்தை போற்றிப் புகழ்கின்றனர், சிவ பக்தர்கள்.