பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
சேலம்: தை அமாவாசை நாளான நேற்று, சேலத்தில் ஏரி, குளம் மற்றும் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனம் உள்ளிட்ட இடங்களில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர்.
உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையான, தை அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அதில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். சேலத்தில், நேற்று கன்னங்குறிச்சி மூக்கனேரி, புது ஏரி, அம்மாபேட்டை ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளிலும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனம் உள்ளிட்ட இடங்களிலும், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில், மஞ்சள், சந்தனம், குங்குமம், கதம்ப பூ, வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை பழம், அகத்திக்கீரை, பூசணிக்காய், வாழைக்காய், அவரைக்காய், அரிசி எள் மற்றும் பிண்டம் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து, முன்னோர்களிடம் ஆசி பெற்றனர். மேலும் பசு மாடுகளுக்கு, அகத்தி கீரை வழங்கினர். இதனால், நேற்று உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை சூடுபிடித்தது. சாதாரணமாக, ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் விற்பனை செய்யப்படும் அகத்திக்கீரை, வரத்து குறைவால் நேற்று ஒரு கட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது.