பதிவு செய்த நாள்
30
ஜன
2017
04:01
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பழமைவாய்ந்த சிவத்தலம் காமேஷ்வர்தாம். இது காமதகனத்தோடு தொடர்புடைய தலம். தட்ச யாகத்தின்போது, அங்கு நியாயம் கேட்கச்சென்ற சதிதேவி தந்தையால் அவமானப்பட்டதும், அவள் யாகத்தீயில் விழுந்து இறந்ததும், இதையறிந்த ஈஸ்வரன் கடுங்கோபத்துடன் வீரபத்திரைத் தோற்றுவித்து தட்ச யாகத்தை அழித்தார் என்பதும் புராணம் கூறும் செய்தி. அதன்பின் சிவபெருமான் யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். இந்த நிலையில் பெண் வயிற்றில் தோன்றாத சிவகுமாரனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென்று பிரம்மாவிடம் வரம்பெற்றிருந்த தாரகாசுரன் தேவர்களையும் முனிவர்களையும் தொல்லைப்படுத்தி வந்தான். சிவனது யோக நிஷ்டை தெளிந்தால்தான் தங்களுக்கு விமோசனம் என்பதை உணர்ந்த தேவர்கள், பல வகையிலும் அவரது நிஷ்டையைக் கலைக்க முயன்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. இறுதியாக அவர்கள் மன்மதனை அணுகினர். சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்குமாறு கூறினர்.
மன்மதனோ அதை ஏற்க மறுத்தான். ஆனால் தேவர்களோ, நீயே தேவ சேனாதிபதி இச்சமயம் தேவர்களைக் காக்கவேண்டியது உன் கடமை என்று சொல்லி பலவாறு வற்புறுத்த, வேறுவழியின்றி மன்மதன் இசைந்தான். சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்ற அவன், ஒரு மாமரத்தின் பின்னால் மறைந்து நின்று, மலரம்பை சிவன்மீது எய்தான். அது பரமேஷ்வரனின் நெஞ்சைத் தாக்க, யோகம் கலைந்து கண்விழித்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீச்சுடரில் மன்மதன் எரிந்து சாம்பலானான். இந்த சம்பவம் நடைபெற்ற இடம்தான் காமேஷ்வர் என்கிறார்கள். இங்கு பாதி எரிந்த நிலையில் மாமரம் ஒன்றுள்ளது. இதில் மறைந்துநின்றுதான் மன்மதன் அம்பெய்தான் என்கிறார்கள்.
இந்த சிவன்கோயில் மிகப்பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திரேதா யுகத்தில் ராம - லட்சுமணரை விஸ்வாமித்திரர் இப்பகுதிக்கு அழைத்து வந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அயோத்தி மன்னன் கமலேஷ்வர் என்பவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பமுற்ற போது, இத்தலத்தில் வந்து இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்றனர். அதனால் அவன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. துர்வாச முனிவர் இங்கே தவம் புரிந்திருக்கிறார். வடநாட்டில் அகோரபந்து என்னும் சன்னியாசிகளின் அமைப்பு உண்டு. இந்த அமைப்பைத் தோற்றுவித்த சீனாராம் பாபா என்பவர் இத்தலத்தில்தான் தீட்சை பெற்றார். கி.பி. 1728- ல் நவாப் முகம்மது ஷா என்ற இஸ்லாமிய மன்னன் இக்கோயிலின் மீது படையெடுத்து வந்தான். அப்போது சிவலிங்கத்திலிருந்து கருமை நிறத்தில் வெளிப்பட்ட பைரவர் அவர்களுடன் போரிட்டார். பைரவரின் உக்கிரத்தைத் தாங்காமல் நவாப்ஷாவும் அவனது படைகளும் புற முதுகிட்டு ஓடினர். இப்படி பல சிறப்புகள் கொண்ட காமேஷ்வர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில், பலியா நகருக்கு அருகில் உள்ளது காமேஷ்வர். சென்னையிலிருந்து 2,338 கிலோ மீட்டர் தூரம். கங்கா காவேரி எக்ஸ்பிரசில் சென்றால் பலியாவில் இறங்கி, அங்கிருந்து கோயில் செல்லலாம். பனாரஸ் விமான நிலையத்திலிருந்து 96 கிலோமீட்டரில் கோயில் அமைந்துள்ளது.