பதிவு செய்த நாள்
30
ஜன
2017
03:01
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது திருக்குறுங்குடி என்ற வைணவத் தலம். அதற்கு மேற்கே மகேந்திரகிரி என்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனுக்கு திருக்குறுங்குடி பெருமாள்மீது அதீத பக்தி. கைசிகப் பண் என்னும் ராகத்தை இசைத்தபடி ஏகாந்தமாய் வாழ்ந்துவந்தான். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியன்று விரதமிருப்பது அவன் வழக்கம். அப்படி ஒருமுறை விரதம் மேற்கொண்ட அவன் கானகத்தின் வழியாக திருக்குறுங்குடி நோக்கிச் சென்றான். அப்போது காட்டிலிருந்த பிரம்மராட்சதன் நம்பாடுவானைப் பிடித்து தின்னமுயன்றான். அப்போது நம்பாடுவான் இந்த உடல் உன் பசியைப் போக்க பயன்படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்று நான் விரதம் மேற்கொண்டுள்ளதால், பெருமாளை சேவித்துவிட்டு வந்து உனக்கு உணவாகிறேன் என்று கூறினான்.
உன்னை நான் எப்படி நம்புவது என்று பிரம்மராட்சதன் கேட்க, பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான் என்று சத்தியம் செய்து கொடுத்தான். அதை ஏற்றுக்கொண்ட பிரம்மராட்சதன் அவனை விடுவித்தான். கோயிலினுள் சென்று தரிசிப்பதற்கு அவன் குலம் தடையாக இருந்ததால், அவன் வெளியே ஓரிடத்தில் நின்று மானசீகமாக வழிபட்டுப் பாடியாடுவான். இம் முறையும் வழக்கம்போல வெளியே நின்று பெருமாளை வணங்கியவன். பெருமாளே! உன்னை நான் தரிசிப்பது இதுவே கடைசியாக இருக்கலாம். உன் திருமுகத்தைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லையே என்று சொல்லி கண்ணீர்விட்டான். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது நந்தனாருக்காக நந்தி விலகியது போல நம்பாடுவானுக்காக கொடிமரம் விலகியது. பெருமாளின் திவ்ய தரிசனத்தைக் கண்டு பேரானந்தம் கொண்டான். பாடினான். ஆடினான் (இச்சம்பவத்தின் காரணமாக திருக்குறுங்குடி கோயிலில் கொடிமரம் சன்னிதிக்கு நேரெதிரே இல்லாமல் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.)
பிரம்மராட்சதனுக்கு அளித்த வாக்குறுதி நினைவுக்கு வரவே. அதை நிறைவேற்ற அவன் இருப்பிடம் நோக்கிச் சென்றான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்மராட்சதன், நான் என் மனைத மாற்றிக்கொண்டுவிட்டேன். உன்னை உணவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியை எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுயஉரு பெறுவேன் என்றான். அதைக்கேட்டு வியப்புற்ற நம்பாடுவான், உனக்கு எப்படி இந்த வடிவம் வந்தது? என்று கேட்டான். நான் முற்பிறப்பில் யோகசர்மா என்ற அந்தணனாய் இருந்தேன். வேள்வி இயற்றுவதை இழிவாகக் கருதி, பற்றில்லாமல் யாகம் நடத்திக்கொடுத்தேன். அதனால் இப்பிறவியை அடைந்தேன் என்றான். நம்பாடுவான் தன் புண்ணிய பலனில் பாதியை பிரம்மராட்சதனுக்கு தத்தம் செய்து கொடுத்து அவன் சாபத்தை அகற்றினான். இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினத்தன்று படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும்.
நம்பாடுவான் பிரம்மராட்சதனுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான் அவற்றை வராகபுராணம் எடுத்துரைக்கிறது.
1. சத்தியத்தை மீறுதல்
2. மாற்றான் மனைவியிடம் இணைதல்
3. தன்னுடன் உணவருந்துபவனை தாழ்வாகக் கருதி, தனக்கு சிறந்ததையும் அவனுக்கு அற்பமானதையும் அளித்தல்.
4. பிறருக்கு தானம் செய்த பொருளை மீண்டும் திரும்பப்பெறுதல்
5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து வயதான காலத்தில் ஏதேனும் காரணம் சொல்லி அவளைக் கைவிடுதல்
6. அமாவாசையன்று தர்ப்பணம் செய்து பித்ரு காரியத்தை முடித்து, அன்றிரவு மனைவியிடம் இன்பம் அனுபவித்தல்.
7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.
8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.
9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் நீராடாமல் உண்ணுதல்.
10. வாக்களித்தபடி, தானம் செய்யாதிருத்தல்.
11. நண்பன் மனைவிமீது காமம் கொள்ளுதல்
12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது ஆசை வைத்தல்.
13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் மட்டுமே ஆசை கொண்டு இன்னொருத்தியை தள்ளி வைத்தல்.
14. கற்புக்கரசியான தன் மனைவியை இளமையிலேயே புறக்கணித்தல்.
15. தாகத்துடன் வரும் பசுக்கூட்டத்திற்கு தண்ணீர் காட்டாமல் தடுத்தல்.
16. பிரம்மஹத்தியைப் போன்ற பஞ்சமகா பாவங்களில் ஒன்றைச் செய்தவன் பெரியோர்களால் பெறும் சாபம்.
17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை (தேவதைகளை) உபாசனை செய்தல்.
18. ஸ்ரீமந் நாராயணனோடு மற்ற தேவதைகளை சமமாக நினைத்தல்.
மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் நரக தண்டனை, சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் போனால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான். இவற்றில் மிகவும் கொடுமையான பாவம் ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவதைகளையும் சமமாக நினைப்பதாகும்.