பதிவு செய்த நாள்
01
பிப்
2017
10:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், வரும், 6ல் நடக்கிறது.
நேற்று கோவில், ஐந்தாம் பிரகாரத்தில், யாகசாலை பூஜை துவங்கியது.இதற்காக, நாட்டுக்கோட்டை நகரத்தார் உபயத்தால், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் சதுர அடியில், 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம், கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் 1,008 கலசங்கள் வைத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு பூஜை துவங்கியது. இதில், ஹாலாஸ்யநாதா சிவாச்சாரியார் மற்றும் தியாகராஜா சிவாச்சாரியார் தலைமையில், 400 சிவாச்சாரியார்கள், 120 வேத விற்பன்னர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெள்ளி குடம் முதல்வர் காணிக்கை : தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலா, இரண்டரை கிலோ எடையில், தங்க முலாம் பூசப்பட்ட, இரு வெள்ளி கலச குடத்தை கோவிலுக்கு சொந்த செலவில் காணிக்கையாக வழங்கினார். இந்த கலசத்தில் வைக்கப்படும் புனித நீரால், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னிதிகளுக்கு, வரும், 6ல் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது, என, கோவில் ரமேஷ் குருக்கள் கூறினார்.