பதிவு செய்த நாள்
07
பிப்
2017
12:02
அகரகோரக்கோட்டை கிராமத்தில் உள்ள, பல்லவர் கால கோவில், சிதைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பலவகை வடிவங்களில் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலை செப்பனிட்டு, பாரம்பரிய சின்னமாக பராமரிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ளது அகரகோரக்கோட்டை கிராமம். இங்கு விவசாயம் முதன்மையான தொழில். இக்கிராமத்தின் வயல்வெளிகளுக்கு மத்தியில், மேடான பகுதியில் உள்ளது, ஓட்டை பிள்ளையார் கோவில். மிக நுாதனமாக வடிவமைக்கப்பட்டு உள்ள, இக்கோவிலின் அஸ்திவாரப்பகுதி, செதுக்கிய கற்களை அடுக்கி அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு புறமும் உள்ள கற் சுவர்கள், 7.5 அடி கனமும், 10 அடி உயரமும் உடையவை. சதுர வடிவில் சுவர் கட்டப்பட்டு உள்ளது.கோவிலின் உட்புறம், தலா, 10.5 அடி நீளம், அகலம் மற்றும் உயரமுடையது. அதாவது, கோவிலின் கல் கட்டுமானப் பகுதி, நீளம், அகலம் மற்றும் உயரத்தில், ஒரே அளவாக உள்ளது. இந்த நுாதன அமைப்பு, மற்ற கோவில்களின், கட்டட அமைப்புகளில் இல்லாதது.
குடை வடிவ கட்டுமானம் : கல் கட்டுமானத்தை தொடர்ந்து, சுடு செங்கற்களால் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இது, கல் கட்டு மானத்தில் இருந்து துவங்கி, 50 அடி உயரம் உள்ளது. இதன் நடுவில், பிரம்மாண்டமான லிங்கம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த லிங்கம், சமீபத்தில் வைக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். மாமல்லபுரம், காஞ்சிபுரம் பகுதிகளில், பல்லவர்கள் அமைத்துள்ள கற்கோவில் மற்றும் களிமண் கட்டட அமைப்புகளில் உள்ள கலை வடிவங்கள், இந்த செங்கல் கட்டுமானத்திலும் தெரிகின்றன. கோவிலின் உட்புறம் இருந்து பார்த்தால், மையப்புள்ளியில் இருந்து, மிகவும் பிரம்மாண்டமான குடை வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குடை வடிவம், கோபுரத்தின் உச்சி வரை செல்கிறது. வித விதமான வடிவங்களில் தயாரிக்கப்பட்ட, சுடு செங்கற்களால், இந்தக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் சேமிப்பு : கல் கட்டுமானத்துக்கும், செங்கல் கட்டுமானத்துக்கும் இடையே, சிறிய அழகிய கலை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பல்லவர் கால கோவில்களில், இதுபோன்ற கலை வடிவங்கள் கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. இங்கோ, கூழாங்கற்கள் மற்றும் மணல் கலவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, அதன்மீது சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. தற்போது இவை சிதைந்து உள்ளதால், துல்லியமாக கணிக்க முடியவில்லை. கோவிலின் வெளிப்புறத்தில், கோபுரத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும், விழும் மழைநீர் வெளியேற வசதியாக, வடிகால் கட்டப்பட்டுள்ளது. இப்படி வடியும் தண்ணீரை சேமிக்க வசதியாக, கோவிலின் வலப்புற மூலையில், கிட்டத்தட்ட, 30 அடி துாரத்தில் பெரிய குளம் வெட்டப்பட்டுள்ளது. அகரகோரக்கோட்டை கிராமத்தில், பல தரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். அனைவரும், இந்த கோவிலை தங்கள் பாரம்பரிய சின்னமாக கருதுகின்றனர்; விசேஷ நாட்களில் இங்கு கூடி பிரார்த்தனை செய்கின்றனர்.
பராமரிப்பு இல்லை கடந்த, 1977 வரை கோவில் உரிய பராமரிப்பு இன்றி கிடந்துள்ளது. அதன்பின், கிராம மக்களே ஒரு அறங்காவலரை நியமித்து, கோவிலை பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், மீண்டும் உரிய பராமரிப்பு இல்லாமல், கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள பெரிய மரம், அதற்கு மேலும் சிதைவை ஏற்படுத்துகிறது. ஏழாம் நுாற்றாண்டில், பல்லவ மன்னர்கள் ஆட்சியின் போது, இந்த கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் பராமரிப்பின்றி இருந்தாலும், கோவிலின் கம்பீரம் குறையவில்லை.
கோவிலின் தற்போதைய அறங்காவலர் மோகன்தாஸ், 37, கூறியதாவது: கோவிலை புதுப்பித்து, பாதுகாக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். கலெக்டர் மற்றும் தொல்லியல் துறையினரை சந்தித்து, தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகிறோம்; நடவடிக்கை எதுவும் இல்லை. கோவிலில் வழக்கமான பூஜைகளை விடாமல் நடத்தி வருகிறோம். தொல்லியல் அதிகாரிகள் இந்தக் கோவிலை பார்வையிட்டு செம்மையாக்க வேண்டும். சாலையில் இருந்து கோவில் உள்ளடங்கி இருந்தாலும், துாரத்தில் இருந்தே இதன் அழகை காணமுடியும். இந்த வழியாக செல்லும் பயணிகள் பலரும், கோவிலைத் தேடி வந்து பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றிலும் சிதைந்த கற்கள் : கோவிலின் முன்புற கற்சுவரில், இரண்டு வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சுண்ணாம்பு மற்றும் காவி சாயம் பூசப்பட்டுள்ளதால், அது தெளிவாக தெரியவில்லை. கல்வெட்டு ஆய்வாளர்கள் இதை வாசிக்க முடியும். அதில், குறிப்பிட்டுள்ள விபரங்கள், கோவிலின் பழமையை காட்டலாம். கோவில் அமைந்துள்ள பகுதி சற்று மேடானது. அதைச் சுற்றி சிதைந்த கற்கள் ஏராளமாக கிடக்கின்றன. - நமது நிருபர் -