சபரிமலை : சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்டத்திருநாள் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மன்னர் சபரிமலைக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி சித்திரை நாள் மன்னர் காணிக்கையாக வழங்கியதாகும். இதனால் அவரது பிறந்த நாளையொட்டி ஒரு நாள் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அவரது பிறந்த நாள் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று கொண்டாடப் படுகிறது.
இதற்காக சபரிமலை நடை 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சசிநம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கியது. மதியம் சகஸ்ர கலசபூஜையும், களபாபிஷேகமும் நடைபெற்றது. உச்சபூஜைக்கு பின்னர் பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மாலை ஐந்து மணிக்கு நடை திறந்து 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் படிபூஜை நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு படிபூஜை நடத்தினார். இரவு ஒன்பது மணிக்கு அத்தாழபூஜை முடிந்து பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி மண்டல கால பூஜைக்காக நவ.,16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கும். டிச., 27 வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். மண்டலகாலத்துக்கான ஏற்பாடுகள் சன்னிதானத்திலும், பம்பையிலும் வேகமாக நடைபெற்று வருகிறது.